நம்மை அன்பு செய்யும் இறைவன்
முன்பொரு காலத்தில் நண்பர்கள் இருவர் பிழைப்பு தேடி பட்டணத்திற்குப் புறப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் இறைப்பற்றாளர், இன்னொருவரோ கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். இருவரும் போகும்போது தங்களுடைய துணிமணிகளை சுமந்துகொண்டு செல்வதற்காக ஒரு கழுதையையும் தங்களோடு கூட்டிக்கொண்டு சென்றார்கள். வழித்துணைக்கு கையில் ஒரு தீப்பந்தத்தையும் வைத்துக்கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் பட்டணத்தை அடைந்ததும் தங்குவதற்கு இடம் தேடி அலைந்தார்கள். ஆனால், அந்த இரவில் யாருமே அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் தரவில்லை, அப்போது கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர் இறைபற்றாளரிடம், “நீ அடிக்கடி சொல்வதுபோல கடவுள் அன்பானவர், நல்லவர் என்றால் அவர் நமக்கு தங்குவதற்கு இடம் கிடைக்க வழி செய்திருப்பார் அல்லவா?, அப்படி ஒன்றும் செய்யவில்லையே” என்று குறைபட்டுக்கொண்டார். அதற்கு இறைபற்றாளர் அவரிடம், “நல்லதுக்காகத்தான் கடவுள் இவ்வாறு செய்திருக்கின்றார்” என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டு, ஊருக்கு வெளியே இருந்த ஒரு பெரிய மரத்துக்கு அடியில் கூடாரம் ஒன்று அமைத்து, இரவில் அதில் தங்கிக்கொண்டார்கள். தங்களோடு கூட்டி வந்திருந்த கழுதையை கூடாரத்திற்கு வெளியே கொஞ்சம் தள்ளி கட்டி வைத்துவிட்டு தூங்கப் போனார்கள். தீப்பந்தம் கூடாரத்திற்கு வெளியே எரிந்துகொண்டே இருந்தது.
அவர்கள் இருவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது பயங்கர சத்தம் கேட்டு, விழித்தெழுந்து, வெளியே வந்து பார்த்தபோது, சிங்கமொன்று அவர்கள் வெளியே கட்டி வைத்திருந்த கழுதையை அடித்து இழுத்துப் போய்க்கொண்டிருந்தது. இதைப் பார்த்து பயந்து போன, இறைவன்மீது நம்பிக்கையில்லாத நபர் தன்னுடைய நண்பரிடம், “இப்போதும் நீ கடவுள் அன்பானவர், நல்லவர் என்று சொல்வாயா?” என்று கேட்டார். அதற்கு இறைபற்றாளர் அவரிடம், “ஒருவேளை சிங்கம் கழுதையை அடிக்கவில்லை என்றால், நம்மையல்லவா அடித்துச் சாப்பிட்டிருக்கும், அதனால் கடவுள் எல்லாவற்றையும் நல்லதுக்காகாத்தான் செய்வார், இதை நினைத்து நீ ஒன்றும் கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டுத் தூங்கப் பொன்னார். கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவருக்கோ தூங்குவதற்குப் பயம், அதனால் தூங்காமல் விழித்துக்கொண்டே இருந்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த கூடாரத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம், பெரிய காற்று வீசி அணைந்துபோனது. இதைப் பார்த்தும் இறைநம்பிக்கை இல்லாதவர் தன்னுடைய நண்பரை எழுப்பி, “இப்போதும் அன்பானவர், நல்லவர் என்று சொல்கிறாயா? என்று கேட்டார். அதற்கு இறைபற்றாளர், “கடவுள் எல்லாவற்றையும் நல்லதற்காகவே செய்வார், பேசாமல் நீ தூங்கு” என்று சொல்லிவிட்டு அவர் தூங்கிவிட்டார். சிறிது நேரத்தில் இறைவன்மீது நம்பிக்கை இல்லாதவரும் தூங்கிவிட்டார்.
மறுநாள் பொழுது விடிந்ததும் அவர்கள் இருவரும் பட்டணத்திற்கு உள்ளே சென்றார்கள். அப்போது பட்டணத்தில் இருந்த நிறையப் பேர் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கை இல்லாதவர் அவ்வாறு அழுதுகொண்டிருந்த ஒருவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது, “நேற்று இரவு இந்த பட்டணத்திற்குள் கொள்ளைக் கூட்டத்தினர் புகுந்து எல்லாருடைய உடமைகளையும், விலையுயர்ந்த பொருட்களையும் அபகரித்துக்கொண்டு போய்விட்டார்கள், என்னுடைய வீட்டில் இருந்த பொருட்களையும் அவர்கள் அபகரித்துக்கொண்டு போய்விட்டார்கள். அதனால்தான் எல்லாரும் ஓலமிட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.
அதைக் கேட்டதும் இறைப்பற்றாளர் தன்னுடைய நண்பரிடம், “நேற்று இரவு தீப்பந்தம் அணைந்து போனதற்காக பெரிதாக வருத்தப்பட்டாயே, ஒருவேளை அந்தத் தீப்பந்தம் எரிந்துகொண்டிருந்தால், கொள்ளைக் கூட்டத்தவர் நம்முடைய இடத்திற்கும் வந்து, நம்மிடம் இருப்பதையும் அபகரித்துக்கொண்டிருப்பார்கள் அல்லாவா.. இப்போது புரிகிறதா, கடவுள் எவ்வளவு அன்பானவர், நல்லவர்” என்று. இறைப்பற்றாளர் இவ்வாறு பேசுவதைப் பார்த்த அவருடைய நண்பரால் ஒன்றும் பேசமுடியவில்லை.
கடவுள் அன்பானவர், அவர் தன்னுடைய மக்களுக்கு எப்போதும் நல்லதை மட்டுமே செய்வார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
. Fr. Amirtha Raj Sundar J.,
amirsundar@gmail.com;
+ 91 944 314 0660;
www.arulvakku.com
The Depression Book: Depression as an Opportunity for Spiritual Growth
Rs. 828.00 only
Please click below to buy this book
http://bit.ly/2r0TLR6
This Zen guide to utilizing depression as an opportunity for spiritual growth and personal acceptance includes personal accounts, written excercises, and meditation instructions.
Please click below to buy this book
http://bit.ly/2r0TLR6
No comments:
Post a Comment