Monday, May 29, 2017

துன்பத்தின் பயனாகக் கிடைக்கின்ற மகிழ்ச்சி நிலையானது


விவசாயி ஒருவர் தன்னுடைய குடிசைக்கு அருகே இருந்த விளைநிலத்தில் நெல்மணிகளை விதைத்துக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு நெல்மணிகள் மட்டும் மற்ற நெல்மணிகளை விடக்  கொஞ்சம் தள்ளி ஓரமாக விழுந்தன.
அதில் ஒரு நெல்மணி மற்றொரு நெல்மணியிடம், “நான் நன்றாக முளைத்து, என்னுடைய வேர்களை தரையில் ஊன்றி, அதன்பின் என்னுடைய கதிர்களை மேலே எழுப்பப் போகின்றேன்” என்றது. இதைக் கேட்ட மற்றொரு நெல்மணி, “முளைத்து வேர்களைத் தரையில் ஊன்றினால் வலிக்குமே, அது போன்று கதிர்களை மேலே எழுப்பினால் சூரிய ஒளி வேதனை அளிக்குமே, அதனால் நான் இப்படியே இருக்கின்றேன், நீ வேண்டுமானால் முளைத்து நன்றாக வளர்ந்துகொள்” என்றது.
வலிகளை தாங்கிகொள்ளப் போவதாகச் சொன்ன நெல்மணி நிலத்தில் நன்றாக வேரூன்றி, வளர்ந்து அழகான நெற்கதிர் ஆனது, ஆனால் வலிகளைத் தாங்கிக்கொள்ள யோசித்த நெல்மணி அப்படியே விதையாக நிலத்தில் கிடந்தது. ஒருசில நாட்களுக்கு பின், அந்தப் பக்கமாக மேய வந்த விவசாயியின் வீட்டுக்கோழியோ நிலத்தின் மேலே கிடந்த நெல்மணியை கொத்தி இரையாக்கிக் கொண்டது.
நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை இன்முகத்தோடு தாங்கிக்கொண்டு, அதற்கு நம்மையே கையளிக்கின்ற போது, நம்முடைய துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறும் என்பதைக் இந்த கற்பனைக் கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
நற்செய்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “உங்களுடைய துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்று சொல்லிவிட்டு, தொடர்ந்து சொல்வார், “பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனைப் அடைகின்றார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்”. ஆம், நாம் துன்பங்களை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தத் துன்பங்களின் வழியாக நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் அலாதியானது அதைதான் ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துச் சொல்கிறார்.
இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள ஒருசில உண்மைகளை இப்போது நாம் சற்று ஆழமான சிந்தித்துப் பார்ப்போம்.
இன்பம் என்ற வீட்டின் திறவுகோல் துன்பம். இதுதான் ஆண்டவர் இயேசு சொல்லுகின்ற முதலாவது செய்தியாக இருக்கின்றது. அதற்கு அவர் பயன்படுத்துகின்ற உருவகம்தான் தான், குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வு. குழந்தையைப் பெற்றெடுக்க, தாயானவள் பேறுகால வேதனைகளை அனுபவித்தாக வேண்டும். பேறுகால வேதனையை அனுபவிக்காமல் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது இயலாத ஒன்றாகும். அது போன்றுதான் இறைவன் தரக்கூடிய மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்கு நாம் சிலுவைகளையும் பாடுகளையும் அனுபவித்தாக வேண்டும்.
துன்பங்களின் வழியாக, வேதனையின் வழியாக கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது. இதுதான் இயேசு நமக்குச் சொல்லுகின்ற இரண்டாவது செய்தியாகும். இன்றைக்கு நிறையப் பேர் சரியாகப் படிக்காமலும், தேர்வினை நன்றாக எழுதாமலும் பட்டம் வாங்கிவிடுகின்றார்கள். இப்படிப் பட்டம் வாங்குவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட, கஷ்டப்பட்டு நன்றாகப் படித்து, தேர்வினைச் சிறப்பாக எழுதி அதன்மூலம் கிடைக்கின்ற பட்டாம் தரக் கூடிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. மேலும் போலியான முறையில் வாங்கிய பட்டமோ என்றைக்காவது ஒருநாள் எல்லாருக்கும் தெரியவந்து விட்டது என்றால் அதனால் பெருத்த அவமானம் மட்டுமே மிஞ்சும். ஆனால் நேர்மையான முறையில் உழைத்துப் பெறுகின்ற பட்டமோ என்றைக்கும் நமக்கு பெருமை சேர்க்கும். அதனால் கிடைக்கின்ற மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து எடுத்துவிட முடியாது. அது நிரந்தரமானது.
துன்பத்தின் வழியாகக் கிடக்கின்ற மகிழ்ச்சி, நாம் பட்ட துன்பத்தையும் மறந்துவிடச் செய்யும். அதுதான் இயேசு நமக்குச் சொல்லும் மூன்றாவது செய்தியாக இருக்கின்றது. தாயானவள் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, தான் பட்ட பேறுகால வேதனையை மறந்துபோய்விடுவாள்; கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வருகின்ற ஒருவர், தான் முன்னுக்கு வந்தபிறகு, தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார். ஏனெனில், அவர் தான் அடைந்த இந்த உயர்ந்த நிலைக்கு முன்னால் அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமில்லை. இதைதான் இயேசு உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்று சொல்கிறார்.
ஆகவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை துணிவோடு தாங்கிக்கொள்வோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் நிறைவான பெரு மகிழ்ச்சியைக் கொடையாகப் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
Rev. Fr. Amirtha Raj Sundar J.,
amirsundar@gmail.com;
+ 91 944 314 0660;
www.arulvakku.com

No comments: