Monday, May 29, 2017

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்

இத்தாலியில் தோன்றிய மிகப்பெரிய இசைக் கலைஞர் ரோச்சினி (Rossini) என்பவர். அவருடைய திறமையைப் பார்த்துவிட்டு, பிரான்ஸ் நாட்டு அரசர் அவருக்கு விலையுயர்ந்த கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். ரோச்சினியும் அதனை மிகப்பெரிய பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தார்.
ஒருநாள் ரோச்சினி தன்னுடைய நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தான் அணிந்திருக்கும் கடிகாரத்தைக் குறித்துப் பேசினார். அப்போது அவருடைய நண்பர், “உங்களுக்கு இந்தக் கடிகாரத்தின் மதிப்பு இன்னும் சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்” என்றார். “அப்படியா! இந்தக் கடிகாரம் அரசர் பரிசாகக் கொடுத்தது என்பதைத் தவிர, வேறு என்ன சிறப்பம்சம் இதில் இருக்கிறது” என்று கேட்டார். அதற்கு அவருடைய நண்பர் அவரிடமிருந்து கடிகாரத்தை வாங்கி, அதன் அடிப்பாகத்தில் இருந்த ஒரு பட்டனை மெதுவாக அழுத்தினார். உடனே கடிகாரத்தின் மேல்பக்கம் திறந்தது, அதன் உள்ளே இருந்து ரோச்சினியின் உருவம் தாங்கிய ஓவியம் இருந்தது. இதைக் கண்டு ரோச்சினி, ‘இத்தனை நாளும் இந்தக் கடிகாரம் என்னிடத்தில்தான் இருக்கின்றது, ஆனால், இதன் உள்ளே என்னுடைய உருவம் பொறித்த ஓவியம் இருப்பது இப்போதுதான் தெரிகிறது என்று மிகவும் ஆச்சரியப்பட்டுச் சொன்னார்.  
ரோச்சினிக்கு எப்படி அவருடைய நண்பர் கடிகாரத்தில் இருந்த உண்மையை வெளிப்படுத்தினாரோ, அதுபோன்று தூய ஆவியானவர் நமக்கு முழு உண்மையை வெளிப்படுத்துகின்றார். அது எப்படி என்று இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, இந்த உலகத்தை விட்டுப் பிரிவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களுக்கு பல்வேறு காரியங்களை எடுத்துக்கூறுகின்றார். அவற்றில் ஒன்றுதான் தூய ஆவியானவர். “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்திச் செல்வார்” என்று இயேசு தூய ஆவியானவரைக் குறித்துப் பேசுகின்றார்.
இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் நாம் பேசுவது, கேட்பது அனைத்தும் பொய்யாக இருக்கும்போது தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்வார் என்று இயேசு சொல்வது நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மேலும் முழு உண்மை என்று சொல்கிறபோது அது ‘ஆண்டவராகிய இயேசுவே (யோவா 14:6) தவிர, வேறு யாரும் இருக்க முடியாது என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அந்த விதத்தில் பார்க்கின்றபோது தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி/ ஆண்டவர் இயேசுவை நோக்கி எப்படி வழிநடத்தப் போகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும்.
உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியார், “தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்டதையே பேசுவார்” என்கிறார் இயேசு. எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்தைக் கடவுளிடமிருந்து கேட்டு, அதை மக்களுக்கு அறிவித்தாரோ, அது போன்று தூய ஆவியார் தாமாக எதையும் பேசாமல், இயேசு கிறிஸ்து தனக்குச் சொன்னவற்றை, வெளிப்படுத்துபவை பற்றி பேசுவார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.
அடுத்ததாக, தூய ஆவியார் வரப்போகின்றவற்றை நமக்கு அறிவிப்பார் என்கிறார் இயேசு. இதுவும் தூய ஆவியார் ஆற்றக்கூடிய பணிகளில் ஒன்றாக நாம் புரிந்துகொள்ளலாம். இயேசுவின் இரண்டாம் வருகையை, உலக முடிவை, கடவுளின் இறுதித் தீர்ப்பை இவற்றையெல்லாம் குறித்து தூய ஆவியார் மக்களுக்கு அறிவிப்பார் என்ற விதத்தில் நாம் புரிந்துகொள்ளலாம்.  
நிறைவாக, தூய ஆவியார் என்னிடமிருந்து கேட்டு, உங்களுக்கு அறிவிப்பார் என்கிறார் இயேசு. இயேசு எவற்றையெல்லாம் தூய ஆவியாருக்குச் சொல்கிறாரோ, அவற்றைத்தான் தூய ஆவியார் மக்களுக்கு அறிவிப்பார் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆகையால், இயேசு இந்த உலகத்தில் விட்டுச்சென்ற பணியை தூய ஆவியார் தொடர்ந்து செய்வார் என்பது உறுதியாகின்றது. அதைப் போன்று இயேசு இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து போய்விட்டாரோ என்று நாம் வருந்தவும் தேவையில்லை. அவர் தூய ஆவியாரின் வழியாக இன்றும் செயலாற்றுகின்றார் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
ஆகையால், திருமுழுக்கின் வழியாக தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட நாம், தூய ஆவியானவர் எப்படி ஆண்டவரிடமிருந்து கேட்டதை மக்களுக்கு அறிவித்தாரோ, அது போன்று நாமும் செய்யவேண்டும். அப்போதுதான் நாம் உண்மைக் கிறிஸ்தவர்களாக மாறமுடியும். இந்த இடத்தில் ஐசக் டி. ஹெக்கர் என்ற எழுத்தாளர் கூறுகின்ற வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்குரியது. அவர் கூறுவார், “மானுட சமூகத்தின் எதிர்காலமானது நாம் ஒவ்வொரு ஆன்மாவையும் தூய ஆவியின் ஆளுகைக்குள் கொண்டுவருதில் இருக்கின்றது (The whole future of the human race depends on bringing the individual soul more completely and perfectly under the sway of othe Holy Spirit). இது முற்றிலும் உண்மை.
எனவே, நாம் முழு உண்மையை நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியார் வழியில் நடப்போம், அவருடைய பிரசன்னத்திற்குள் நம்மை உட்படுத்துவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai. 2017.
Rev. Fr. Amirtha Raj Sundar J.,
amirsundar@gmail.com;
+ 91 944 314 0660;
www.arulvakku.com

No comments: