Sunday, August 13, 2017

அஞ்சாதீர்கள்,  துணிவோடிருங்கள்...

ஒரு நள்ளிரவு!. ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். திடீரென அந்த அறைக்கதவைத் தள்ளிக்கொண்டு திருடன் ஒருவன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான். நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்?, என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார். அதைக்கேட்ட திருடன் திகைத்தான். அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான். ”சரி போகட்டும்! எனக்குப் பணம்தான் வேண்டும்!” என்றான் திருடன்.
ஜென் குரு சிறிதுகூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார். அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது. ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான். அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி! நீ வெளியே போகும்போது அறைக்கதவை சாத்தி விட்டுப் போ!” என்றார் ஜென் குரு. திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.
மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான். அப்போது அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினான்: ”ஐயா.! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப் பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள். ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப் பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறுபோட்டுவிட்டது. நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார், நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப் போகிறேன்!” என்றான்.
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிழ்ந்தார். தன்னிடத்தில் இருந்த யாருக்கும் பயப்படாத குணம் ஒரு திருடனையும் நல்ல மனிதனாக மாற்றிவிட்டதை எண்ணிப் பெருமிதம் கொண்டார்.
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அச்ச உணர்வுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இறைவனிடமும் நம்மிடமும் அயலாரிடமும் நம்பிக்கையில்லாத தன்மையே என்று சொன்னால் அது மிகையாகாது.
லியோட் ஜான் ஒகில்வி (Llyod John Ogilvie) என்ற பெண் எழுத்தாளர் தான் எழுதிய  Silent Strength of My Life என்ற புத்தகத்தில் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்வார்
ஒருமுறை லியோட் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கே காவலர்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் கொண்டுவந்த பொருளைகளை எல்லாம் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். லியோட் கொண்டுவந்த பொருட்களையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு விமானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது பத்துவயது சிறுவன் ஒருவன் வேகமாக ஓடி லியோடின் இருக்கைக்கு அருகே அமர்ந்தான். அவர் அவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். பதிலுக்கு அவனும் புன்முறுவல் பூத்தான். பின்னர் விமானம் தரையிலிருந்து மேலே கிளம்பியபோது எதைக் குறித்தும் பயப்படாமல், தான் கையோடு கொண்டுவந்திருந்த நோட்டில் ஏதோ ஒரு படம் வரையத் தொடங்கினான். லியோட் அவன் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்.
ஓரிடத்தில் விமானம் மேகமூட்டத்திற்குள் புகுந்து தடுமாறத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த விமானப் பணிப்பெண் எல்லாரையும் சீட்பெல்ட் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். உடனே எல்லாரும் சீட்பெல்ட் அணிந்துகொண்டார்கள். ஆனால் அந்த சிறுவன் மட்டும் எதைக் குறித்தும் பயப்படாமல், படம் வரைவதிலேயே தீவிரமாக இருந்தான். இதைப் பார்த்த லியோட் அவனிடம், “உனக்கு விமானம் தடுமாறுகிறது என்பதைக் குறித்த பயமில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஏன் பயப்படவேண்டும், ஏனென்றால் என்னுடைய தந்தைதான் விமான ஓட்டி” என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்டு லியோட் வியந்து நின்றார்.
நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் நமக்கு ஏற்படும் அச்ச உணர்வுகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இறைவனிடமும் நம்மிடமும் அயலாரிடமும் நம்பிக்கையில்லாத தன்மையே என்று சொன்னால் அது மிகையாகாது...

No comments: