1. ஸ ஷ ஜ ஹ க்ஷ ஸ்ரீ போன்ற எழுத்துகள் ஒரு சொல்லில் வருமானால் அவை தமிழ்ச்சொற்களல்ல.
எ.கா / சாஸ்வதம் விஷயம் ஜன்னல் ஹாஸ்யம் சுபிக்ஷம் ஸ்ரீலங்கா.
2. ரகர வரிசை எழுத்துகளை முதலெழுத்துகளாகக் கொண்ட சொற்கள் தமிழல்ல.
எ.கா /ரகசியம் ராத்திரி ரூபம் ரோடு.
தமிழில் முதலெழுத்தாக ரகரம் தோன்றாது.
3.லகர எழுத்துகளை முதலெழுத்துகளாகக் கொண்ட சொற்கள் தமிழல்ல.
எ.கா/ லட்சியம் லாபம் லேசு.
லகர எழுத்துகளும் தமிழ்ச்சொல்லுக்கு முதல் எழுத்தாகாது.
4.சகர வரிசை எழுத்துகளில் தொடங்கும் பிறமொழிச் சொற்கள்தாம் அதிகமாக இருக்கின்றன.
எ.கா/ சக்தி சாத்தியம் சாவி சரீரம் சீக்கிரம்.
ஒருசொல் சகர வரிசை எழுத்தில் தொடங்கினால் அது பிறமொழிச் சொல்லாக இருக்குமோ என்று ஐயுறலாம்.
ஆனால் தமிழ்ச்சொற்களும் சகர வரிசை எழுத்தில் தொடங்கும்.
எ.கா/ சோறு சொல் செரு சேர்.
5. மெய் எழுத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொற்கள் தமிழல்ல.
எ.கா/ ப்ரியா க்ரியை
தமிழில் தனி மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்குவதில்லை.
6.இரண்டு சொற்களுக்கு இடையில் புணர்ச்சி இலக்கணப்படி வல்லின ஒற்று (க் ச் த் ப்) பயன்படுத்தப்படாமல் எழுதப்பட்டால் அவை தமிழல்ல.
எ.கா / ஆன்மிக குரு , பூமி பூஜை ,அவ்விரண்டு சொற்களில் ஒன்றேனும் தமிழல்லாததாக இருக்கும்.
7.சொல்லின் முதலெழுத்தாம் குறில் எழுத்தை அடுத்து ர் என்ற மெய்யெழுத்து வந்தால் அச்சொல் தமிழில்லை.
எ.கா/ சர்க்கார் கர்ப்பம் அர்ச்சனை சர்க்கரை சொர்க்கம்.
8.ஒரு சொல்லின் கடைசி எழுத்து க் ச் ட் த் ப் ற் என வல்லின மெய்யாக இருந்தாலும் அது தமிழில்லை.
எ.கா/ ஆர்ச் பார்க் வோல்ட்.
9.ஒரு சொல்லின் எதிர்ச்சொல் அ என்ற எழுத்தைச் சேர்த்தால் கிடைக்கிறது எனில் அவ்விரண்டும் தமிழல்ல.
எ.கா/ சுத்தம்...அசுத்தம் , நியாயம்..அநியாயம்,சௌகரியம்..அசௌகரியம்.
10. ஏதேனும் ஒரு சொல்லின் முன்னொட்டாக நிர் துர் போன்றவை தோன்றினால் அவ்விரண்டும் தமிழல்ல.
எ.கா/ நிர்க்கதி துரதிர்ஷ்டம்.
11. யகர வரிசை எழுத்துகளில் யா என்ற நெடில் மட்டுமே சொல்லுக்கு முதல் எழுத்தாகும்.
எ.கா / யாழ் யானை.
பிற யகரம் தமிழில்லை .
எ.கா./ யவ்வனம் யுகம் யூகம் யோகம்.
12. டகர வரிசை எழுத்துகளில் ஒரு சொல் தொடங்கினால் அதுவும் தமிழில்லை.
எ.கா / டக்கர் டைம்.
மகுடேஸ்வரன்
No comments:
Post a Comment