*அலட்சியம்*
தற்போது வயதில் மூத்தவர்களை, தனக்குக் கீழ் பொறுப்பில் இருப்பவர்களை, சுகாதாரப் பணியாளர்களை, அலுவலக, அடுக்கக காவலாளிகளை மதிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள்.
எப்போதுமே ஒரு அலட்சிய போக்கு, இவர்களுக்கு மரியாதை கொடுத்து என்ன ஆகப்போகிறது? இவர்களுக்கெல்லாம் மரியாதை எதற்குக் கொடுக்கணும்? என்ற மனப்பான்மை அதிகரித்துள்ளது.
இதை வெளிப்படையாகக் காண முடிகிறது.
*தனிப்பட்ட அனுபவம்*
நேர்மறை எண்ணங்களையும், அடுத்தவருக்கு மதிப்புக் கொடுப்பதையும் தீவிரமாகப் பின்பற்றி வருகிறேன்.
அனைவருக்குமான மரியாதையை, அன்பான சிறு விசாரிப்பை மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது அவர்கள் கவனத்தைப் பெறுகிறேன்.
நாளடைவில் அவர்கள் எனக்குக் கொடுக்கும் மரியாதையில் நிச்சயம் மாற்றம் உள்ளது. அது பதவிக்குண்டான மரியாதை என்பதைத்தாண்டி கடமையாக இல்லாத அன்பாக உள்ளது.
அலுவலகக் காவலாளிகள் வணக்கம் வைத்தால், கண்டுக்காத மாதிரி செல்லாதீர்கள். அவர்கள் மரியாதை கொடுக்கும் போது புன் சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
சல்யூட் செய்வது அவர்களது கடமை என்றாலும், அதையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.
சில நேரங்களில் நீங்கள் காட்டும் அன்பை, எதார்த்தமாகப் பழகுவதைச் சிலர் சாதாரணமாக எடுத்து உங்களுக்கான மரியாதையை குறைத்து விடலாம், Advantage ஆக எடுத்து விடலாம்.
எனவே, இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் இதைக்கையாள வேண்டும்.
அதாவது அவர்களுக்கான மரியாதையையும் கொடுக்க வேண்டும், நம் கெத்தையும் விட்டுவிடக் கூடாது.
சுவாரசியமான சில அலுவலக அனுபவங்கள் உள்ளது ஆனால், அலுவலகச் சம்பவங்களைப் பொதுவில் பகிர்வதில்லை என்பதால், கூற முடியவில்லை.
*குடும்பத்தில்…*
எங்கள் குடும்பத்திலும் அம்மா, மனைவி இருவருமே வீட்டுக்குப் பணிக்கு வருபவர்களிடம் நட்பாகப் பழகுவார்கள்.
எனவே, மற்றவர்களுக்கு சில வேலைகளை மறுப்பவர்கள் கூட இவர்களுக்குச் செய்து கொடுத்து விடுவார்கள்.
அனைத்து நபர்களிடமும் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அம்மாவிடம் தான் கற்றுக்கொண்டேன். என் பசங்களுக்கும் இதைப் பழக்கப்படுத்தி வருகிறேன்.
CAB ல் சென்றால், கடைகளுக்குச் சென்றால், உதவியவர்களுக்கு விடைபெறும் போது டாடா காட்டும் பழக்கத்தை வைத்துள்ளேன்.
பசங்க டாடா / Bye சொல்லும் போது சம்பந்தப்பட்டவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியே தனி தான்.
*மதிப்பு*
மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும் ஒன்று தொடர்ந்து இருப்பதைக் கவனித்து இருக்கலாம். அவர்களுக்குண்டான மதிப்பை, அன்பை கொடுக்கும் போது மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தன்னை மதித்து நடக்கிறார்கள் என்ற திருப்தியை பெறுகிறார்கள். எனவே, இங்கே ஒரு நேர்மறை எண்ண அலை (Positive Vibes) பரவுகிறது.
அவர்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுக்குண்டான மரியாதையை, மதிப்பை. யார் ஒருவர் மற்றவரை மதிக்கக்கற்றுக்கொள்கிறாரோ அவரே மற்றவர்களிடம் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
பணத்துக்கு, அதிகாரத்துக்குக் கிடைக்கும் மரியாதை தற்காலிகமே!
எனவே, நேர்மறை எண்ணங்களுடன் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டால், மதிப்பைக் கொடுத்தால், உங்களுக்கு எங்கும் தனிச்சிறப்பு இருக்கும்.
இது கற்பனையல்ல, 100% அனுபவத்தில் கண்ட உண்மை.
📣📣📣📣📣📣📣📣📣📣📣📣
No comments:
Post a Comment