Join me in Google+ by clicking the following link
https://plus.google.com/communities/111370223769028020379
தமக்குள்ள யாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46
அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை:
புதையல், முத்து இவற்றை பெற எல்லா தியாகங்களையும் செய்கின்றோம். எதனையும் துறக்க முன்வருகின்றோம். ஆனால் அந்த புதையலோ, முத்தோ நிரந்தரம் அல்ல. அழிந்து போகக் கூடியது. முறைந்து போகக் கூடியது. அடுத்தவர் கைக்கு மாறிப் போக் கூடியது. இதற்கே இந்த பாடு என்றால், அழியாதா, மறையாதா, மாறாத, நிரந்தரமான செல்வமாகிய, புதையலாகிய, முத்தாகிய கிறிஸ்து இயேசுவை பெற்றுக் கொள்ள எதை துறக்கின்றோம். தியாகம் செய்கின்றோம்.
பவுல் அடிகளார் சொல்லுகின்றார். ஓப்பற்ற செல்வமாகிய இயேசு கிறிஸ்துவை பெற்றுக் கொள்ள பிற எல்லாவற்றையும் குப்பையாக கருதுகின்றோன் என்று.
நம்மால் சொல்ல இயலுமா?
குப்பைகளை சேகரித்து, குப்பை மேட்டினில் குடியிருந்து கொள்கின்றோமா?
இயேசு என்னும் ஒப்பற்ற செல்வத்தை அடைய எல்லாவற்றையும் தூக்கி எறிவோம்!
ஞானமடைந்த பிறகு சித்தார்த்தா கபிலவஸ்துவில் இருந்த (தன்னுடைய) அரண்மனைக்கு வந்தார். பல ஆண்ட பிறகு அரண்மனைக்குத் திரும்பி வருவதை அறிந்த அவருடைய தந்தையும், தாயும், மனைவியும் மிகுந்த தயாரிப்புகளோடு அவரை வரவேற்கக் காத்திருந்தார்கள்.
சில மணிநேர காத்திருப்புக்குப் பின்னர் புத்தராக மாறியிருந்த சித்தார்த்தா அங்கு வந்தார். அரசன், அரசி உட்பட எல்லாரும் அவரை அரச மரியாதையோடு வரவேற்கக் காத்திருந்தபோது அவர் அவர்களிடம், “நான் உங்களிடமிருந்து மரியாதை பெற அல்ல, பிச்சை கேட்க வந்திருக்கின்றேன்” என்றார். இதைக் கேட்ட அரசன், அதாவது அவருடைய தந்தை அவரிடம், “மகனே! இந்த அரசாங்கமே உனக்குச் சொந்தம், அப்படியிருக்கும்போது, இதில் பிச்சை கேட்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்டார். அதற்கு சித்தார்த்தா, “நான் இந்த அரண்மனையில் இருந்த வரைக்கும்தான் இது என்னுடைய அரசாங்கம், என்றைக்கு நான் ஞானம் அடைவதற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டுச் சென்றேனோ அன்றைக்கு இந்த அரசாங்கம் என்னுடையது கிடையாது, உங்களுடையது. அதனால்தான் உங்களிடத்தில் பிச்சை கேட்க வந்திருக்கின்றேன்” என்றார்.
சித்தார்த்தா இவ்வாறு பேசியதைக் கேட்டு அரசர் மிகுந்த வேதனையடைந்தார். இருந்தாலும் ஞானம் அடைவதற்காக எல்லாவற்றையும் தூங்கி எறிந்துவிட்டுச் சென்ற அவருடைய தியாக உள்ளத்தை நினைத்துப் பெருமைபட்டார். பின்னர் அவர் வைத்திருந்த பாத்திரம் நிரம்பும் அளவுக்கு பிச்சை போட்டு அனுப்பி வைத்தார்.
சித்தார்த்தா எப்படி ஞானம் அடைவதற்காக எல்லாவற்றையும் இழந்தாரோ, அது போன்று நற்செய்தி வாசகத்தில் வரக்கூடிய வணிகர் விலையுயர்ந்த முத்தைக் கண்டதும், தமக்குள்ள யாவற்றை விற்று அதை வாங்கிக் கொண்டது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு விண்ணரசை புதையலுக்கும், விலையுயர்ந்த முத்துக்கும் ஒப்பிடுகின்றார். நாம் நம்முடைய சிந்தனைக்கு ஆண்டவர் இயேசு விண்ணரசை விலையுர்ந்த முத்துக்கு ஒப்பிடுவதை மட்டும் எடுத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
பழங்காலத்தில் ‘முத்து’ எல்லாராலும் விரும்பப்பட்ட ஒன்றாக இருந்தது. அதனுடைய மதிப்பிற்காக மட்டுமல்லாது, அதனுடைய அழகிற்காகவும் மக்கள் முத்தை வைத்துக்கொள்ள நினைத்தார்கள். இப்படியாக முத்து எப்படி மக்களுடைய வாழ்வில் முக்கிய இடம் வகித்ததோ, அதைப் போன்று விண்ணரசும் மக்களுடைய வாழ்வில் முக்கிய இடம் வைக்கும். அதைதான் ஆண்டவர் இயேசு நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.
அடுத்ததாக, உவமையில் வருகின்ற வணிகர் விலையுயர்ந்த முத்தைக் கண்டதும், தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றுவிட்டு அந்த முத்தினைப் பெறுகின்றார். விலை மதிப்பற்ற விண்ணரசை நாம் அடையவேண்டுமானால், நம்மிடம் இருக்கின்ற மதிப்புக் குறைந்தவற்றை இழக்கத் தயாராக இருக்கவேண்டும் என்கிறார் இயேசு. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வருகின்ற சித்தார்த்தன் ஞானத்தைப் பெறுவதற்கு அரசாங்கம், சொத்து சுகம் எல்லாவற்றையம் தூக்கி எறிந்துவிட்டுப் போனார். அவரைப் போன்று நாம் விண்ணரசு என்கிற விலைமதிக்கப் பெறாத சொத்தைப் பெற நம்மிடம் இருப்பவற்றை இழக்கத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நிறைய நேரங்களில் இந்த மண்ணுலக செல்வம், மண்ணுலக சுகம் போதும் என்கிற மனப்பான்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்படி வாழ்வோர்களால் இந்த உலகத்தில் வேண்டுமானால் நிம்மதியாக (?) இருக்க முடியுமே ஒழிய, மறுவுலக வாழ்வினை அடைய முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. மாறாக, விண்ணரசை தேடி வாழ்கின்றபோது அவர்களுக்கு எல்லா நலனும் கிடைக்கும் என்பது உறுதி.
இந்த இடத்தில் பவுலடியார் கூறுகின்ற வார்த்தைகளை நினைவுகூர்ந்து பார்ப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் மூன்றாவது அதிகாரம் 8 ஆம் வசனத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம், “உண்மையில், என்னைப் பொறுத்த மட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” என்றார். பவுலடியார் கிறிஸ்து என்னும் ஒப்பற்ற செல்வத்தைப் பெற மற்ற அனைத்தையும் குப்பையாகக் கருதினார். அதன்படியே வாழ்ந்தார். நாமும் பவுலடியாரைப் போன்று கிறிஸ்து ஒருவரே ஒப்பற்ற செல்வம் என்று வாழ்கின்றபோது கடவுளால் மேலும் மேலும் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.
எனவே, நாம் ஒப்பற்ற செல்வத்தை – முத்தைப் பெற – ஏனையவற்றை உதறித் தள்ளிவோம், இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
No comments:
Post a Comment