Wednesday, December 27, 2017

குதிரையின் கற்பனை


ஒரு குதிரையில் அமர்த்தி கடவுளின் ஊர்வலம் ஒவ்வொரு வீதியாய் சென்றது, செல்லும் இடங்களில் குதிரையை நிற்க வைத்து கடவுளுக்கு ஆரத்தி எடுப்பது, பூக்களை பொழிவது, கனிகளை படைப்பது, பாடல்களை பாடி மகிழ்ச்சிப்படுத்துவது என ஊர்வலம் மிக விமரிசையாக நடந்தது.
இதையெல்லாம் பார்த்த குதிரை நமக்குத்தான் இவ்வளவு புகழும், மரியாதையும் என நினைத்து இறுமாப்பு கொண்டது.
அடுத்த வீதிக்கு சென்றதும் இதேபோல பாடல்களும், பூ மழையும் பொழியப்பட்டது. பிறகு, பழங்கள் படைக்கப்பட்டு குதிரைக்கும் கொடுக்கப்பட்டது. இந்தமுறை தன்மீது தற்பெருமை தலைக்கு ஏறிய குதிரை, அந்த வீதியை விட்டு நகர மறுத்தது.
தன்னைப்பற்றி அளவிடமுடியாத கற்பனைகளை செய்துகொண்டு அதே இடத்தை விட்டு நகர மறுத்து பிடிவாதம் செய்தது, அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த குதிரைக்காரன் சவுக்கை எடுத்து சுளீரென்று குதிரையை ஒரு இழு இழுத்தான்.
குதிரைக்கு பளீரென்று புத்தி வந்தது, அடடா, இவ்வளவு நேரம் புகழ் நமக்கென்று நினைத்தோம், நம்மீது அமர்ந்திருக்கும் ஆண்டவனுக்கல்லவா அது சொந்தம் என்று வெட்கி தலைகுனிந்தவாறே மெல்ல நடையை கட்டியது குதிரை.
கருத்து : எல்லாவற்றிர்க்கும் அதிகாரம் பொருந்தியவராக நம்மை நாம் நினைக்கின்றோம், ஆனால், அதிகாரம் இறைவனுக்கே சொந்தம் என சூழ்நிலை உணர்த்தும் பொழுது, நம்முடைய மனம் பக்குவப்பட்டநிலையில் அமைதியாகி நமது பயணத்தை சப்தமின்றி தொடர்கின்றோம்.

No comments: