Wednesday, December 20, 2017

இன்றைய ஆசிரியர்களின் நிலை : சாலமன் பாப்பையா

உண்மையில் இன்று ஆசிரியர்களின் நிலை என்ன என்பது பற்றி பட்டிமன்ற நடுவர் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையா கட்டுரை:-
நான் எனது அன்றாடப் பயணங்களில் பல அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசிப் பழகியவன்.
1) இன்று ஆசிரியப் பணி என்பது ஒரு காலத்தில் நாம் ஏங்கியது போல - வருடத்தில் காலாண்டு பரீட்சை லீவு, அரையாண்டு லீவு, கோடை விடுமுறை என்ற - சுகமான ரோஜாப்படுக்கை அல்ல.
2) ஊருக்கு 4 ஜாதிச் சங்கம் இருக்கிறது. எந்த மாணவனையும் அவனுடைய ஒழுங்கீனங்களுக்காகக் கண்டித்து விட முடியாது. அந்த மாணவன் எந்த ஜாதியோ, அவர்கள் படை திரட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.
3) பெண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியராகப் பணிபுரிவது இன்னும் கஷ்டம். வகுப்பறையில் ரகசிய செல்ஃபோன் புழக்கம் அதிகரித்து வருகிறது. அதில் ஒரு பெண் 'ஏதோ சில' படங்களைப் பார்த்துக்கொண்டிருக்க, அதை அவளிடமிருந்து பறிக்க முயற்சித்தால், என்னை இடுப்பில் கை வைத்தார், முதுகில் தடவினார் என்று அந்தப் பெண் அழுது ட்ராமா போட்டால் இவர் கதை காலி! அப்படியும் நடந்திருக்கிறது. பிறகு அரும்பாடு பட்டு நிலைமையை சமாளித்து இருக்கிறார்கள்.
4) அந்த மாணவன் / மாணவி குறிப்பிட்ட சாதியாக இருந்து, அந்த ஆசிரியர் இதர 'ஆதிக்க சாதி'யை(பத்திரிகையாளர்கள் மொழியில்) அல்லது முன்னேறிய சாதியாக இருந்தால் தொலைந்தார்! நயமான வார்த்தைகளில் மிரட்டுவதில் அரசியல் வாதியையே மிஞ்சி விட்டார்கள் மாணவர்கள். "சார் நீங்க கோபப்படற மாதிரி, நாங்க உணர்ச்சி வசப்பட்டா, உங்களுக்குத்தான் டேமேஜ் அதிகமாகும்"- etc போன்ற சொல்லாடல்கள் இப்போது பல இடங்களில் சகஜமாகி விட்டது.
5) இதில் பத்திரிகை, மற்றும் ஊடகங்களின் பங்கு மிக மோசம். "கொஞ்சம் நல்லா அளுவற மாதிரி... அப்படித்தான்.. இன்னும் Emotion ஐ கூட்டி... ஆம் இப்ப பேசும்மா"- என்று பரபரப்பை பில்டப் செய்ய அலைபவர்களே அதிகம். நடுநிலையான செய்தி சேகரிப்பு என்பது அபூர்வம்!
6) 'எங்கே பிணம் விழும்' என்று காத்திருக்கும் வெட்டியானைப் போல அரசியல் கட்சிகளும் "பாதிக்கப்பட்ட மாணவன் / மாணவிக்கு " ஆதரவாக உரிமை ஓலம் இடுவார்கள். ஆசிரியர் பக்கத்து நியாயம் என்பது ஒரு பொருட்டே அல்ல! சமயங்களில் பிரச்னை பெரிதாகி, 'அனைத்துக் கட்சிக் கூட்டம்' - மாணவன் / மாணவி வீட்டுக்கே போய் 'உண்மை கண்டறியும் குழு' என்று விசாரித்தால் இந்த அரசியல் கட்சிகள் நடந்து கொள்ளும் முறை கேவலமானது.
7) "என்ன நடந்தது? என்ன பிரச்னை?"- என்று கேட்க மாட்டார்கள் இந்த 'சர்வ கட்சி' / ஏதோ ஒரு கட்சி சார்பாக வந்துள்ள Fact finding குழுவினர். உண்மை கண்டறிவது எல்லாம் அப்புறம். தாங்கள் எடுத்துள்ள பிரச்சார நிலைப்பாட்டுக்கு ஏற்ப, மாணவன்/மாணவியிடமிருந்து / பெற்றோரிடமிருந்து பதில்களைப் பெறவே முயற்சிப்பார்கள். "அதாவது அந்த வாத்தியார் உன்னை ஜடையைப் பிடித்து இழுத்தார்னு சொல்றியாம்மா?" - என்று இவர்களே பாயிண்ட் எடுத்துக் கொடுக்கும் Leading Question தான் பெரும்பாலும் போடுவார்கள்.
8) அடங்காப் பிடாரி Arrogant மாணவர்கள்(பலர்)/மாணவிகள்(சிலர்) : ஜாதி அமைப்புகள்: பாரபட்சமான ஊடகங்கள் : பலன் பார்க்கத் துடிக்கும் அரசியல் கட்சிகள்... இப்படி நான்கு புறமும் சூழும் நெருப்பு வளையத்துக்கு நடுவே கத்தி மேல் நடப்பது போலத்தான் மிகப்பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
என்னுடைய அன்பான ஆலோசனை:
எதற்கு இப்படிப்பட்ட ஒரு சில கழிசடைகளை எல்லாம், திருத்த முயற்சித்து நீங்கள் சிக்கலுக்கு ஆளாக வேண்டும்? விட்டு விடுங்கள்...
வகுப்பறையிலேயே செல் மூலம் காதல் தூது அனுப்புகிறாளா, கண்டுக்காதீங்க..
.'முற்போக்கா' இருங்கள் ஆசிரியர்களே!
புரட்சி கரமான தெய்வீகக் காதலுக்கு குறுக்கே நின்று நீங்கள் ஏன் கெட்ட பெயர் வாங்க வேண்டும்? கழிசடை ஓடினால் ஓடி விட்டுப் போகட்டும் -
நீங்கள் கண்டிக்கப்போய் அந்தப் பெண் தற்கொலை பண்ணிக் கொண்டால் எந்த மீடியாக்காரனும், அரசியல்வாதியும் உங்கள் பக்கத்து நியாயத்தைக் கேட்கப்போவதில்லை! அவன் /அவள் படித்தால் படிக்கட்டும், படிக்காமல் நாசமாகப் போனால் போகட்டும், உங்கள் வேலை என்னவோ அதை, பாடம் நடத்துவதை மட்டும் செய்துவிட்டுப் போயிகிட்டே இருங்க! அதுவும் "பாதிக்கப் பட்ட" அந்த மாணவன் / மாணவியின் ஜாதி வோட்டு அந்தப் பகுதியில் அதிகம் இருந்தால் ஒரு அரசியல்வாதி கூட உங்கள் பக்கத்து நியாயத்தை சொல்லப் போவதில்லை - உங்கள் சங்கங்களும் பலதும் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் அரவணைப்பில் உள்ளவைதான்! ஏன் ஆசிரிய நண்பர்களே, நல்லொழுக்கத்தை எல்லாம் போதிக்க நினைத்து சிரமப் படுகிறீர்கள்? அதெல்லாம் OUT OF SYLLABUS!!
இப்படிக்கு
சாலமன் பாப்பையா

No comments: