Saturday, February 10, 2018

நீல.பத்மநாபனின் ‘கடிகாரம்’


நீல.பத்மநாபன் தமிழின் சிறந்த சிறு கதையாசிரியர்.
அவரது கதையுலகம் தன்னைச் சுற்றிய மனிதர்களின் மீதான அவரது அக்கறையிலிருந்து உருவாகிறது.
இயல்பான பேச்சுவழக்கும் கூர்மையான அவதானி ப்புகளும் கொண்ட இவரது கதைகள் மிகத் தனித்துவமானவை.
கடிகாரம் கதை,
ஒரு நோயாளிக்கும் அவரது வீட்டில் உள்ள பழைய கடிகாரம் ஒன்றுக்குமான உறவைப் பற்றியது.
அவர் இதயநோயால் அவதிப் பட்டுக்கொண்டு இருக்கிறார்.
அவரது வீட்டில் ஒரு பழைய கடிகாரம் இருக் கிறது.
அது அவர் கல்யாணம் ஆன புதிதில் வாங்கிய வெளிநாட்டுக் கடிகாரம்.
அதற்கு மாதம் ஒரு முறை சாவி கொடுத்தால் போதும். வீட்டுக்கு யார் வந்தாலும் அந்தக் கடிகாரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது அவர் களுக்கு ரொம்பவும் பிடித்தமானது.
ஆனால், அந்தக் கடிகாரம் சில மாதங்களாக மெதுவாக ஓடத் தொடங்கு கிறது.
சில வேளைகளில் நின்றும்விடு கிறது.
இதனால், அடிக்கடி அந்தக் கடிகாரத்தின் பெண்டுலத்தை ஆட்டி விட வேண்டியிருக்கிறது.
ஒரு நாள், மார்புவலி காரணமாக மருத்துவ மனைக்கு அவரைத் தூக்கிக்கொண்டு போகும்போதுகூட, கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கச் சொல்வ தற்கு அவர் மறக்கவே இல்லை.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, அந்தக் கடிகாரம் நின்றுபோனால் தனது வாழ்வும் முடிந்துவிடும் என்று ஒரு கற்பனை பயம் அவருக்குள் உருவாகிவிடுகிறது.
இதனால், அந்தக் கடிகாரம் ஓடுகிறதா, இல்லையா என்ற யோசனை எப்போதும் அவர் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
ஒரு முறை, கடிகாரம் ஓடாமல் நின்றுவிடவே, மனைவியை அதிகமாகத் திட்டிவிடுகிறார் அவர்.
அவள் பெண்டு லத்தை ஆட்டி ஓட வைக்கிறாள். கடிகாரம் முன்புபோல ஓடத் தொடங்குகிறது.
அந்தச் சத்தத்தை ஆனந்தமாகக் கேட்டபடியே, அன்றிரவில் அவர் இறந்துவிடுகிறார்.
கடிகாரம் மட்டும் எப்போதும் போல ஓடிக்கொண்டு இருக்கிறது.
காலத்தின் விரல் தீண்டி அழிக்கப்படாத பொருட்கள் உலகில் ஏதேனும் இருக்கிறதா என்ன?
புத்தர் தனது முதல் போதனையில், உலகம் எங்கும் நம் கண்ணில்படாத ஒரு நெருப்பு பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது;
அதன் வெப்பம் படராத பொருளே இல்லை என்கிறார்.
மறுக்க முடியாத உண்மை அது.
எவர் கண்ணிலும் படாத அந்த நெருப்பைத்தான் நாம் காலம் என்று குறிப்பிடுகிறோமா?
நீல.பத்மநாபன், மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்புடன்
ச.கணேசன்.  மதுரை 

No comments: