Thursday, February 1, 2018

எண்ணங்களே வலிமையானவை

இப்போது நான் உங்களுக்கு பழங்கால கதை ஒன்றை சொல்லப் போகிறேன்.
இது ஒரு ராஜாவின் கதை.
அந்த ராஜாவுக்கு அழகான மகள் இருந்தாள்.
கண்டோரை கவர்ந்திழுக்கும் கட்டழகி அவள்.
ராஜலட்சணம் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.
ஆனால் ஒரே ஒரு குறை.
கொஞ்சம் கூன்போட்ட முதுகுடன் அவள் இருந்தாள்.
இந்தக் குறையை எப்படியும் நிவர்த்தி செய்துவிட்டால்,
மாசு மறுவில்லாத அழகியாக மகள் திகழுவாள் என்று மன்னன் எண்ணினான்.
தன்னுடைய ராஜ்ஜியத்தில் இருந்த கைதேர்ந்த சிற்பியை வரவழைத்தான். மகளைப் போலவே அவனை ஒரு சிலை வடிக்கச் சொன்னான்.
ஆனால்
மகளுடைய கூன் அந்த சிலையில் இல்லாதவாறு நிமிர்ந்த தோற்றம் கொண்டதாக அது இருக்க வேண்டுமென அரசன் கட்டளையிட்டான்.
சிற்பி இளவரசியின் சிலையை செதுக்கும்போது,
அவன் சிலை வடிப்பதற்காக இளவரசி அவன் முன் காட்சி தர வேண்டியிருந்தது.
அவளைப் பார்த்து
சிற்பி சிலை வடித்தானே தவிர மன்னனின் கட்டளைக்கிணங்க கூன் இல்லாமல் அவன் சிலையை உருவாக்கிய போது,
அதை இளவரசி தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்க,
சிலை உருவாவதற்கு ஏற்ப அவளும் நிற்க முயற்சி செய்ய,
சிலை முழுவடிவம் பெற்றபோது சிலை எவ்வாறு கூன் இல்லாது காட்சி தந்ததோ அதைப்போல இளவரசியும் கூன் நீங்கி எழில் அரசியாக காட்சி தந்தாள்.
இது வெறும் கதைதான்.
ஆனால்
இந்தக் கதை ஒரு பெரிய மனோதத்துவ உண்மையை உணர்த்துகிறது.
சிலையைத் தொடர்ந்து இளவரசி பார்த்துக் கொண்டே  இருந்ததால்,
கூன் நீங்கி விட்ட எண்ணம் அவள் மனதில் உறுதியாகத் தோன்ற,
அதன் விளைவாக கூன் என்கிற குறைபாட்டிலிருந்து அவள் விடுபட்டாள்.
இந்தக் கதையிலுள்ள
மனோதத்துவ உண்மையினை இப்போதுள்ள மனோதத்துவ நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆம்,  வறுமை, நோய், இறப்பு, மணவாழ்வு பாதிக்கப்பட்ட விவாகரத்தானவர்கள், துணையிழந்தவர்கள் நம் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எண்ணாமல்,நாமும் வாழ முடியும்,நமக்கும் வாழ்க்கை இருக்கு என்று எண்ணுங்கள்.
எண்ணங்கள் வலிமை படைத்தவை.
ஒரு மனிதனை ஆக்குவதும் அழிப்பதும் அவனுடைய எண்ணங்களே.

No comments: