ஒரு தாயானவள் தன்னுடைய பத்து வயது மகனிடத்தில் கேட்டாள், “அன்பு மகனே! மனித உடலில் இருக்கின்ற மிகவும் முக்கியமான பகுதி எது?”. அதற்கு அவளுடைய மகன், “அம்மா! என்னைப் பொறுத்தளவில் காதுதான் மனித உடலில் இருக்கின்ற மிக முக்கியமான பகுதியாகும். ஒருவேளை காதுகள் மட்டும் மனிதனுக்கு இல்லை என்றால், ஒன்றுமே விளங்காது” என்றான். “நீ சொல்வது ஓரளவுக்கு சரியான பதிலாக இருந்தாலும், அது முழுமையான பதிலாக இல்லை” என்றாள் தாய்.
“அப்படியானால் கண்கள்தான் மனித உடலில் இருக்கின்ற மிகவும் முக்கியமான பகுதி ஆகும்” என்றான். “கண்களும்கூட ஓரளவுக்கு சரியான பதிலாக இருந்தாலும், அதுவும் முழுமையான பதிலாக இருக்க முடியாது” என்று சொன்னாள் தாய். “மனித உடலில் மிகவும் முக்கியமான பகுதி காதுகளும் இல்லை, கண்களும் இல்லையென்றால் எதுதான் முக்கியமான பகுதி?” என்று கேட்டான் மகன். “பொறுத்திரு மகனே! அதற்கான காலம். அப்போது உனக்கு சரியான பதிலைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய பணிகளில் மும்முரமானாள் தாய்.
நாட்கள் நகர்ந்தன. சிறுவனாக இருந்த அந்தத் தாயின் மகன் வளர்ந்து இளைஞனாக மாறியிருந்தான். இப்போது அவன் உண்மையை அறிந்துகொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருந்தான். அப்படிப்பட்ட தருணத்தில்தான் அந்தத் தாயின் கணவர் திடிரென நோயில் விழுந்து, படுத்த படுக்கையாகி அப்படியே இறந்து போனார். அப்போது அந்தத் தாய் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அவள் தன்னுடைய மகனது தோள்மீது முகம் புதைத்து கதறி அழுதார்.
இது நடந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு தாயானவள் தன்னுடைய மகனிடத்தில் முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு மகன், “தோள்கள் தான் மனித உடலில் இருக்கின்ற மிக முக்கியான பகுதி” என்றான். “ஏன் அவ்வாறு சொல்கின்றாய்?” என்று தாயானவள் திரும்பக் கேட்டதற்கு மகன், “அவைகள்தான் ஒரு மனிதன் வேதனையில் வெடித்து அழுகின்றபோது, சாய்ந்துகொள்ள இடம் தருகின்றன” என்றான். “மிகச் சரியாய் சொன்னாய் அன்பு மகனே” என்று சொல்லி தாய் தன்னுடைய மகனை கட்டி அணைத்துக்கொண்டாள்.
ஆம், வேதனையில் விழுந்துகிகிடக்கின்ற ஒருவருக்கு சாயந்து கொள்வதற்கு இடம் தருகின்ற/ இளைப்பாறுதல் தருகின்ற தோள்களைத் தவிர மனித உடலில் மிக முக்கியமான பாகம் வேறு என்ன இருக்க முடியும்?.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கின்றார். வேதனையில், கவலையில் சிக்கித் தவிக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் இயேசு சாய்ந்து கொள்வதற்கு தோள்களைத் தருகின்றவராக, இளைப்பாறுதல் தருகின்றவராக இருக்கின்றார் என்பதை நாம் இதன்வழியாகப் புரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment