Thursday, December 13, 2018

புதைக்கப்படும் கீழடியும், மறைக்கப்படும் தமிழர் வரலாறும்...

தன் வரலாற்றை படிக்க மறந்த இனங்கள், இவ்வுலகில் அனாதைகளாக்கப்பட்டு; நாடோடிகளாக்கப்பட்டு; தனித்துவிடப்பட்டு இறுதியில் முற்றாக அழிந்துபோன கதைகள் இங்கு ஏராளம் உண்டு. அப்பட்டியலில் தமிழர் தேசிய இனத்தையும் கொண்டுவரும் முயற்சி ஆரியர்களாலும் திராவிடர்களாலும் இங்கு பலமுறை நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான், இப்பொழுது மதுரைக்கு அருகில் நடந்த கீழடி அகழ்வாராய்ச்சி நிலையம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டள்ளது. 

பொதுவாக சராசரி மக்களுக்கு ‘அகழ்வாராய்ச்சிகள்’ என்பவை ஏதோ பழையப் பொருட்களை துசுத்தட்டுகின்ற செயலாகவே தெரிகின்றது. ஆனால் அகழ்வாய்வுகள் ஒருப் புதையலைபோன்று ஏராளமான உண்மைகளை நமக்கு சொல்பவையே. அகழ்வாயில் கிடைக்கும் பொருட்கள் அக்காலமக்களின் அறிவையும் நாகரீகத்தையும் பழக்கவழக்கங்களையும் கண்முன்னே கொண்டுவருகின்றன. கற்காலக் கருவிகள் ஒரு வரலாற்றையும்; செம்பு கருவிகள் ஒரு வராலாற்றையும்; இரும்புக் கருவிகள் ஒரு வரலாற்றையும் தன்னகத்தே மறைத்து வைத்துள்ளன. இப்புதைப் பொருட்களின் வழியாகத்தான் முதல் மனிதனின் வேரைத்தேடி நாம் பயணிக்கவேண்டிவுள்ளது. 

ஒரு இனம், தன் வலாற்றின்மீது கொள்கின்ற பெருமிதங்களின் வாயிலாக நம்பிகைபெற்ற இனமாக பயணித்து உயர்ச்சியும் வளர்ச்சியும் அடைய இயலும். ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி’ என்ற பெருமித வரிகளை நமது இலக்கியங்கள் நமக்கு விட்டுசென்றிருப்பினும், அவை வெறும் கற்பனா வாதங்கலாகவே இங்கு பலராலும் எள்ளி நகையாடப்படுகிறது. எனவே ஆதாரங்களோடு தமிழரின் வரலாற்றை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். அதற்கு கீழடி ஆராய்ச்சி நமக்கு பெரிதும் உதவி செய்யும் என்றே தெரிகிறது.

கிபி 1922-ஆம் ஆண்டுவரை, வேதகால நாகரீகம்தான் ‘இந்திய நாகரீகம்’ என்ற ஆதாரமற்ற தகவல்களையே இங்கு பலரும் பரப்பிவந்தார்கள். வேதகாலம் என்பது பல பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும், பல அவதாரங்கள் மண்ணில் தோன்றி மறைந்துள்ளன என்றும் நம்பவே முடியாத பல கற்பனைக்கதைகளை ஆரியர்கள் அடித்துவிட்டார்கள். 

ஆனால் 1922-ஆம் ஆண்டு, தொல்பொருள் ஆய்வியல் அறிஞர் சர். ஜான் மார்ஷல், சிந்து மாநிலத்தில் மொகஞ்சதாரோ என்னுமிடத்தில் நடத்திய ஆய்வில் ‘தமிழ் பிராமி’ எழுத்துக்கள் கிடைத்தபின் ஆரியர்களின் கற்பனைக் கதைகள் நொறுங்க ஆரம்பித்தன. இந்திய நாகரீகம் என்றோ; ஆரிய நாகரீகம் என்றோ; எதுவுமே இங்கு இருந்ததில்லை. ‘தெற்காசியா முழுவதும் வாழ்ந்தவர்கள் தமிழர்களே’ என்று இவ்வாய்வுகளின் மூலமாக உறுதியானது. பிறகு அவரே, பஞ்சாப் மாநிலத்தின் ஹரப்பா என்னுமிடத்தில் புதையுண்ட ஒரு நகரை கண்டுபிடித்தார். அங்கு கிடைத்த ஆதாரங்களும் ஆரியர்களை அதிர்ச்சியடையவே வைத்தன.
 
இந்நிலையில், சிந்து சமவெளி நாகரீகத்தையும் ஹரப்பா நாகரீகத்தையும் ஆரிய நாகரீகமாக காட்டுவதற்கு முயன்று தோற்றவர்கள்தான், மறைமுகமாக வேறுவொரு வரலாற்று திரிபிலும் ஈடுபட்டார்கள். அதுதான், தமிழில் இருந்து திரிந்து.. திரிந்து.. உருவான ‘திராவிடம்’ என்ற திரிந்த கருத்தியலின் மூலமாக சிந்து சமவெளி மற்றும் ஹரப்பா நாகரீகத்தை ‘திராவிட நாகரீகம்’ என்று இங்கிருந்த திராவிட எழுத்தாளர்களைக் கொண்டு எழுதவைத்தது. ஆச்சரியம் என்னவென்றால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுப்போன்ற திராவிட மொழிகளை ஆராய்ந்து; அவை பிறந்த நூற்றாண்டுகளை பட்டியலிட்ட அந்த மாமேதைகள்தான், தமிழில் இருந்து பிரிந்த எல்லா மொழிகளுமே அதிகபட்சமாக 15-நூற்றாண்டுகளுக்கு உள்ளாகத்தான் பிறந்தன என்கிறார்கள். இவ்விடத்தில்தான், சிந்து சமவெளி நாகரீகமும் ஹரப்பா நாகரீகமும் குறைந்தபட்சம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக்குரியவை என்று ஆய்வுகள் மெய்பித்ததை இலாவகமாக அவர்கள் மறைத்துவிட்டார்கள். பிறக்காத மொழிகளுக்கு எப்படி ‘திராவிட நாகரீகம்’ பிறந்ததாக வரலாற்றை எழுதமுடியும்? ஆனாலும், திராவிடர்கள் எழுதினார்கள்; தமிழர்களும் நம்பினார்கள்.

சிந்துவும், ஹரப்பாவும் இன்று தமிழர்கள் வாழ்கின்ற நிலப்பரப்பில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால்தான்,  அங்கு நடந்த ஆராய்ச்சிகளின் முழுமையான முடிவுகளை இதுவரையிலும் நம்மால் பெற முடியவில்லை என்கிறார்கள் பலர். ஆனால், இந்தியப் பெருங்கடலில் ஆய்வில் ஈடுபட்ட லண்டன் மாணவர்கள் வெளியேற்றப்பட்டதும்; பூம்புகார் நாகரீகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவிடாமல் தடுப்பதும்; புதுச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேட்டில் நடத்த ஆய்வின் முடிவையும் ஆதிச்சநல்லூரில் நடந்த ஆய்வின் முடிவையும் இதுவரையிலும் மக்கள் மன்றத்திக்கு கொண்டுவராமல் மறைத்ததிற்கும் இந்திய அரசுகளும் திராவிட அரசுகளுமே காரணம் என்பதை இங்கு யாருமே உணரவில்லை. இவர்களுக்கு மத்தியில்தான், இன்று நம் கண்முன்னே கீழடி புதைக்கப்டுவதை தடுக்க வலிமையற்றவர்களாக நாம் நிற்கிறோம்.

மதுரையிலிருந்து திருபுவனம் செல்லும் வழியில், வைகை நதியின் தென்கரையில் சிலைமான் இரயில் நிலையத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் 2 கி.மீ தொலைவில் இருப்பது கீழடி. தென்னந்தோப்புகள் சூழ்ந்த இந்த ஊர்தான், இன்று உலகமே வியந்து பார்க்குமளவுக்கு ஒரு நதிக்கரை நாகரீகத்தை தன்னுள் புதைத்து வைத்துள்ளது. சில மாதங்களாக, இந்த ஊருக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் வந்து சென்றவாறு இருந்தனர்.

இன்னும் சில நாட்களில் உலக நாடுகளை சேர்ந்த பல ஆய்வாளர்கள் பலரும் வந்து, பழந்தமிழரின் நாகரீகத்தை ஆய்வு செய்யும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் இந்த கையாலாகாத இந்திய, திராவிட அரசுகள் இன்று இதனை புதைத்துவிட்டார்கள். கீழடியில் புதையுண்ட ஒரு நகரத்தையே அகழ்வாராய்ச்சி மூலமாக மத்திய தொல்லியியல் துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஆய்வில் ஈடுபட்ட முக்கியமான அதிகாரிகள் அனைவருமே தமிழர்கள் என்பதாலும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், சகாயம் போன்றவர்களின் தொடர் முயற்சியாலுமே இந்த புதையுண்ட நகரம் வெளிவுலகிற்கு தெரியவந்தது.

1972-ஆம் ஆண்டே கீழடியில் பழமையான ஓடுகளும், பொம்மைகளும் கிடைத்திருபினும் அவற்றை முழுமையான ஆய்விற்கு உட்படுத்துவதற்கே, இவர்கள் 40 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி இருக்கிறார்கள். வட இந்தியாவில் ஏதோவொரு மூலையில் மிக பெரிய எலும்புக் கூடுகள் கிடைத்ததும், அதுதான் ‘பீமனின் எலும்புக் கூடு’ என்று இல்லாத கற்பனைகள் பறக்கவிட்ட இந்திய ஊடகங்கள்; கீழடியில் கிமு 500-ஆம் ஆண்டு வாழ்த்த மனிதர்களின் ஆதாரங்கள் கிடைத்தும் வாய்முடி மவுனிக்கின்றன.

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புதைபொருட்கள் கிடைத்தும் அதனை பாதுகாக்க இரண்டு ஏக்கர் நிலமில்லை என்று ஆய்வாளர்களை தமிழக அரசு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அதனால், “வேறு வழியின்றி கிடைத்தப் பொருட்களை எல்லாம் பெங்களுரு தொல்லியல் ஆய்வுக் கூடத்திற்கு நாங்கள் எடுத்து செல்லுகிறோம்” என்கிறார் இவ்வாய்வில் ஈடுபட்ட அதிகாரி அமர்நாத்.

ஐரோப்பாவின் சில நாடுகள், தங்களுக்கென்று தனித்த பாரம்பரியம் என்பதே இல்லை என்பதை உணர்ந்ததால் வெறும் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் சிலைகள் தோட்டங்கள் பாலங்களைக்கூட தங்களின் பாரம்பரியச் சின்னங்களாக நினைத்து, அவற்றை சுற்றுலாத் தளமாக அறிவித்து பாதுகாக்கிறார்கள்.

ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. மக்கள் போராடித்தான் கீழடியின் புதைப் பொருட்களை பெங்களுரு கொண்டு செல்லாமல் தடுக்க முடிகிறது என்றால் இந்த அரசுகளுக்கு எமது பாரம்பரியங்களின் மீதோ; எமது வரலாற்றின் மீதோ; துளியும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. கீழடி ஆராய்சிகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவரும் சாகித்திய அகாடமி எழுத்தாளர் ஐயா சு.வெங்கடேசன்,  “கீழடியில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதனை இன்று வரை ஒரு  பரிசீலனைகூட செய்யாமல், இந்த அரசுகள், ஆய்விற்கென தோண்டப்பட்ட குழிகளை அவசர அவசரமாக மூடிவிட்டார்கள். இச்செயல் நமக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்தியாவின் பல வரலாற்று ஆய்வாளர்கள், “தமிழகத்தில் இதுவரை கிடைத்த ஆதாரங்களின் மூலமாக, தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் மட்டுமே இருந்தது” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், கீழடியில் கிடைத்துள்ள தடயங்கள் சங்ககாலத் தமிழர்களின் வரலாற்றை படம்பிடித்துக் காட்டுவதால், இதனை ஆதாரமாக கொண்டு s‘தமிழர்களே.. உலகின் முதல் நாகரிக இனம்’ என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு உண்டாகி இருப்பதை தடுக்கவே குழிகள் மூடப்பட்டிருக்குமோ? என்ற அச்சம் உண்டாகிறது. 

ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை வெறும் மனிதர்கள் இறந்தபின் புதைக்கும் தாழிகள்; அவற்றோடு சேர்ந்து புதைக்கப்பட்ட ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்கள் மட்டுமே. ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானகள், சாக்கடை வசதிக்கான தனி பாதைகள் என்று ஒரு அறிவார்ந்த நாகரிக இனம் வாழ்ந்ததற்கான முழுமையான ஆதாரங்களே கிடைத்துள்ளன.

மேலும், ஹரப்பா நாகரீகத்திற்கு இணையான நாகரீக மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நூரு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கிடைத்துள்ளது. இவைமட்டுமின்றி, கீழடியில் ஆப்கானிஸ்தானின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டங்களும் கிடைத்துள்ளது.  இது, வணிக மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு புது வழிகளையே திறந்துவிட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட மதுரை பெருமணலாக கீழடி இருக்கலாமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தமிழ் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஏராளமான கதவுகளையும் திறந்துவிட்டுள்ளது.

இத்தகையே சிறப்புகளை எல்லாம் தன்னகத்தே கொண்டுள்ள கீழடி நிலத்தில் 110 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்துபட்டு ஒரு பெரும் நகரமே மறைந்து கிடப்பதாகவும், இதில் 50 செண்டு நிலம் மட்டுமே இதுவரை ஆய்வு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.    50 செண்டு நிலமே, தமிழரின் வரலாற்றை மீட்பதற்கான ஆயிரம் கதவுகளைத் திறக்கிறது என்றால் மீதமுள்ள நிலமும் ஆய்விற்கு உட்படுத்தினால் என்ன ஆச்சரியங்கள் நமக்கு காத்திருக்குமோ?

தமிழின்மீதும்; தமிழரின்மீதும்; தமிழரின் வரலாற்றின்மீதும் சிறு அக்கறையும் இல்லாத அரசுகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு, நமது அடையாளங்களை எல்லாம் மெல்ல மெல்ல நாம் தொலைத்துக் கொடிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணராத வரை இந்த இழிநிலையை நம்மால் துடைக்க முடியாது. நமது முன்னோர்கள் வாழ்த்த; வீழ்ந்த இடங்களில் கோவில் கட்டி கொண்டாடும் மரபிலிருந்து வந்த நாம், இன்று நம் கண்முன்னே நமது பாரம்பரியத்தை சுமந்து நிற்கும் கீழடியை மணலுக்கு திண்ணக் கொடுக்கின்றோம்.

அன்று ஆற்று மணல் திண்ணதால்தான் கீழடி மூழ்கி மணல் மேடாய் நின்றது. இன்று தமிழர்களின் அறியாமையாலும் ஒற்றுமையின்மையாலும் போராடும் குணமின்மையாலும் குப்பைமேடாய் நிற்கிறது. இனியேனும் விழித்தெழுமா தமிழினம்?.. 

பேராசிரியர் ஆ.அருளினியன்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

No comments: