Sunday, December 2, 2018

நான்... நீ... நாம்...

இது தான் உலகம். இதுதான் நாடு. இதுதான் அரசு. இதுதான் ஆட்சி. இதுவே அரசியல். இவை எல்லாம் உரிமையின் வழிபாடு. ஆனால் இந்த உரிமைகள் எல்லாம் இன்று தனிமனித, தனி முதலாளித்துவ, தனி சில நாடுகளின் கட்சிகளின் தலைமைகளின் வழிபாடாகியதால். இன்று உலகில் சோமாலியாக்களும் எத்தியோப்பியாக்களும் இருக்க.. அதன் வரிசையில் தமிழ் நாடும் வந்து நிற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு நாதியற்றவர்களின் நாடாகிப் போனது. இங்கே தன் உரிமைகளுக்காக கூட போராட வேண்டி இருக்கிறது. அரசு என்ற காவல் இல்லை. ஆக்கம் என்ற செயல்களும் இல்லை. துயரென்றால் துடைப்பாரில்லை. தொல்லைகள் என்றால் வந்து நிற்பாரில்லை.*

சில வருடங்களுக்கு முன் கடற்கோள் கண்ட தமிழகம் தானே அழுது மண்டியிட்டும் ஒரு அரசு உதவியும் இல்லாமல் தானே தன் செல்வங்களுக்கு வழிபாடு நடத்தியது.
*எங்கிருந்தோ ஓடி வந்த நடிகர் விவேக் ஓபராய் எந்தவித நடிப்பும் இல்லாமல் கரைவாழ் மக்களோடு கரைந்து உதவி நின்றார். அந்த நிலையிலேயும் எந்த முதலமைச்சரும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதவவுமில்லை. இன்று நடிகர்களின் கைப் பாவையாக இருக்கும் தமிழ்நாட்டையே வாரி சுருட்டி போட்டு மேலும் பொருள் குவிக்க அரசியல் புகுந்தோரெல்லாம் கரை பக்கம் காணாமல் போயினர்.*

இதனிடையே இரண்டு புயல் காற்றாக வீசி கடுமையான சேதத்தை கடலூர் மாவட்டத்தில் ஏற்படுத்தியது. நிமிர்ந்து நின்று மரங்கள் எல்லாம் நிலை குழைந்து தரை வீழ்ந்தன. யாரும் கண்டு கொள்ளவில்லை.

*அடுத்து ஒரு புயல் வந்து குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை தாக்கி கடலுக்குள் சென்றவர்களை கடல் விட்டு ஏறாமல் செய்தது. கேரள முதலமைச்சர் அவர் பகுதி மக்களோடு தானும் இருந்து அவர்களுக்கு வேண்டியன செய்தார். ஆனால் நம் தமிழ் நாட்டு முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் புயல் ஓய்ந்து மழை ஓய்ந்து மக்கள் அழுகைகள் எல்லாம் ஓயும் வரை காத்திருந்து.. தலைமையமைச்சர் வரும் வரை காத்திருந்து தங்களின் பார்வையை அப்பக்கம் திரும்பினர்.  தமிழ்நாட்டு சேதங்களை காண வரும் தலைமையமைச்சர் தமிழ்நாட்டு விமான நிலையங்கள் வழி வராமல் கேரள திருவனந்தபுரத்தில் இறங்கி அங்கிருந்து வான்வழி பறந்து வந்து குகைக்குள்ளே புகுவது போன்று, துயருரும் மக்களை நேரிடையாக சந்தித்து அவர்களை கேட்டறியாமலேயே உள்ளரங்க கூட்டம் நடத்தி தேனீர் விருந்துண்டு தில்லிக்கே பறந்து போனார்.*

*இப்பொழுது மீண்டும் புயலடித்துள்ளது. தஞ்சைத் தரணி காவிரி நீரின்றி வருந்தியது போக, இருந்த செல்வமாக இருந்த மரங்கள் எல்லாம் தரை வீழ்ந்து கிடக்கின்றதே என அழுகின்றனர். அவர்களை நேரில் காண. நம் முதல்வரின் பயணம் வானில் வட்டமடிக்கிறது. அவரால் தரை இறங்க முடியவில்லை. பயணம் மீண்டும் நாளை என்றாகிறது. இரண்டாண்டுகள் முதல்வராக இருந்த இவருக்கும் வரும் முன் காக்கும் செயல் திட்டமிடல் இல்லை. அதற்கு முன் இருந்தவர்களுக்கும் நமக்கு நாமே! திட்டம் இருந்ததே தவிர, யாருக்கும் தமிழ் நாட்டு மக்கள் செழித்து வளர வேண்டும் என்ற திறமையும் அக்கரையும் இல்லை. இனிமேல் இடைத் தேர்தலுக்காகவும் ஆட்சிகள் நிலைப்பதற்காகவும் வேண்டுமானால் யாராவது அப்பக்கம் வந்து போகலாம்.*

கோடிக்கணக்கில் பணம் கேட்டுப் பெறுவதினால் எல்லாம் தமிழக மக்களுக்கு நன்மைகள் விளைத்திடும் என்றால்.. அது போல் நன்மைகள் ஏன் இதுவரை விளையவில்லை? இதுவரை எந்த பாதிப்புக்கும் எந்த பணமும் வரவில்லையா?.. என்பதற்கு பதில் இல்லாமையாகிறது.
அரசு மக்களுக்கு முன்னாலும் பின்னாலும் காவல் செய்ய வேண்டும். அதற்கு நல்லிடத்தில் பாடம் கற்றிருக்க வேண்டும். அதுதான் நம்ம அரசியல் பழக்கமில்லையே!
அதை *வள்ளலார் வாயால் கேட்டால், அவர்.. வாழையடி வாழையென வந்த மரபுகள் வேண்டும்! என்கிறார்.*
கொள்கை இல்லா இடத்தில் எதுதான் இருக்கும் வழிவழி தொடர்புகள் இல்லாமல் யாருக்கும் எதுதான் தெரியும்?  இங்கே முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் என மக்கள் இருக்கிறோம். மக்களே  தனித்தெழுந்து நிற்போம் . தவறுகள் தொடராது தமிழ்நாட்டை காப்போம்!
புயல் மழையால் பாதித்தோர் உயர்ந்தெழ உறவாய் கைகொடுப்போம்.
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

No comments: