*அரசு பணியில் இல்லாத நிசப்தம் வா.மணிகண்டன் அவர்களின் பதிவு*
கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் போராட்டம் என்று கிளம்பினாலே ‘இவங்களுக்குக் கொடுக்குற சம்பளம் போதாதா?’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிடுகிறார்கள். சம்பள உயர்வு மட்டும்தான் பிரச்சினையா என்ன?
மாணாக்கர் சேருவதில்லை என்று சொல்லி மூன்றாயிரத்து ஐநூறு தொடக்கப்பள்ளிகளை இணைக்கிறார்கள். ‘இணைப்பு’ என்பது நாசூக்கான சொல். ‘மூடுதல்’ என்பதுதான் புதைந்திருக்கும் அர்த்தம். இது தமிழகத்தில் அரசு ஆரம்பக்கல்வியைக் குழி தோண்டிப் புதைப்பதற்கான முதல்படி. ஆனால் இதே அரசுதான் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து அந்தப் பள்ளிகளுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது.
யாரேனும் மறுக்க முடியுமா? இதில் ஆளும் வர்க்கத்துக்கு கோடிகளில் கமிஷன் புரள்கிறது. ஆனால் ஆரம்பப்பள்ளிகளால் இவர்களுக்கு என்ன பலன்? தயவு தாட்சண்யமே இல்லாமல் மூடுகிறார்கள். மூடுவதற்கு சாக்குப் போக்கு வேண்டுமல்லவா? ‘மாணவர்கள் சேர்க்கையில்லை’ என்கிறார்கள்.
அரசுத் தொடக்கப்பள்ளிகளை இணைத்து எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் மூன்றாயிரத்து ஐநூறு சத்துணவு மையங்களை மூடப் போகிறது இந்த அரசு. என்ன பிரச்சினை? இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது என்பதற்காகவே பள்ளிக் கூடங்களுக்கு வருகிறார்கள். யாரேனும் மறுப்பதாக இருந்தால் சொல்லுங்கள். அழைத்துச் சென்று குழந்தைகளைக் காட்ட முடியும்.
மக்கள் நலன் பேணுகிற அரசு, சத்துணவு மையங்கள் இல்லாத ஊர்களில் எல்லாம் புதிய மையங்களைத் தொடங்க வேண்டுமே தவிர போக்கற்ற காரணங்களைச் சொல்லி சத்துணவு மையங்களை மூடக் கூடாது.
சத்துணவு மையங்களை மூடக் கூடாது என்ற கோரிக்கையும் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
Contributory Pension Scheme என்பதுதான் இன்றைக்கு ஓய்வூதியத்திற்கான திட்டம். மாதாமாதம் ஊழியர்கள் கொடுக்கும் பணத்தை ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாகத் தருவார்கள். இதுவரை பிடித்தமாக இருபத்தேழாயிரம் கோடி ரூபாய்களைப் பிடித்திருக்கிறார்களாம். அதற்கான கணக்கு வழக்கு விவரங்களைச் சொல்லுங்கள் என்று ஊழியர்கள் கேட்கிறார்கள். பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்கள். என்ன தவறு இருக்கிறது?
உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளிகளுக்கும், ஆரம்பப்பள்ளிகளுக்கும் பணியிறக்கம் செய்து பந்தாடுகிறார்கள். தவறில்லையா? எந்தப் பணியிலாவது நாம் இதனை ஏற்றுக் கொள்வோமா? அவர்கள் கோரிக்கையாக முன்வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
இவை எதுவுமே நம் பொதுச் சமூகத்தின் கண்களில் படாதா என்ன? அப்படி மடை மாற்றப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ‘சம்பளமாகத்தான் எல்லாப் பணமும் போகிறது’ என்று சொல்வதை ஊடகங்களும் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன. ஊழலாக எந்தப் பணமும் போவதில்லை. கமிஷனாக பைசா கூட அரசு கஜானாவிலிருந்து காலியாவதில்லை. சம்பளம் மட்டும்தான் பிரச்சினை. இல்லையா?
ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கும் போதெல்லாம் ‘சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது’ என்று மிரட்டுகிறார்கள். ‘மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்’ என்று அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் ‘ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மனசாட்சியில்லாத ஜடங்கள்’ என்ற வெறுப்பை உண்டாக்குகிறார்கள்.
பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து உருட்டி மிரட்டி, வழக்குகள் கைது என்றெல்லாம் எதையாவது செய்து, கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு பிரச்சினையை வாபஸ் செய்ய வைத்துவிடுகிறார்கள். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமுமில்லை. ஒவ்வொரு மாதமும் நிலைமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது.
‘ஆசிரியர்கள் எப்பொழுதாவது மாணவர்களின் நலனுக்காகப் போராடியிருக்கிறார்களா?’ என்று அதிமேதாவித்தனமாகக் கேட்கிறவர்களும் இங்குண்டு. இந்தச் சமூகமே Corrupted Societyதான்.
அடுத்தவர்களைக் கேள்வி கேட்டு தன்னை யோக்கியமாகக் காட்டிக் கொள்ளும் மனோபாவம் அது. மாணவர்களின் நலன்பேணுகிற ஆசிரியர்கள் மிகப்பரவலாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள், சோம்பேறிகள் என்று பேச வேண்டியதில்லை. அது அபத்தம். பிச்சையெடுக்கும் அளவுக்கு இறங்கி நன்கொடை கேட்டு, வசூல் செய்து தம் பள்ளிகளை மேம்படுத்தும் ஆசிரியர்கள் எத்தனை பேர்களைக் காட்ட வேண்டும்?
இந்தப் போராட்டத்தில் சுயநலமே இல்லையா என்றால் இருக்கிறதுதான். எந்தவொரு பொதுக்காரியத்திலும் சுயநலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் தாண்டி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நியாய அநியாயங்களும் இருக்கின்றன.
உண்மையிலேயே தமிழகக் கல்வித்துறைதான் உள்ளுக்குள் அரித்துப் போனதாக மாறியிருக்கிறது. வெளியில் மேக்கப் போட்டு ‘ஆஹா பிரமாதம்’ என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயெல்லாம் கமிஷன் அடிக்க முடியுமோ அந்தக் காரியங்களை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் கவனித்து, இந்தப் போராட்டம் எதற்கானது என்று காது கொடுத்துக் கேட்டால் கல்வித்துறையின் அவலம், தமிழக அரசுத்துறைகளின் சிக்கல்கள் எல்லாம் வெளியில் தெரியும். எல்லாவற்றையும் மூடி மறைத்து ‘சம்பளத்துக்கான போராட்டம்’ என்று தயவு செய்து பூசணிக்காயை சோற்றில் புதைக்க வேண்டாம். இன்றைக்கு தமிழகத்தின் கடன் எத்தனை லட்சம் கோடிகள்? கடந்த ஆகஸ்ட் மாதமே பத்து லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு வட்டிக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம் என்ற புள்ளிவிவரம் யாருக்காவது தெரியுமா? உண்மையிலேயே அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழத்தின் நிதி ஆதாரத்தை மீட்டெடுக்க இன்னமும் எவ்வளவு வருடங்கள் தேவைப்படும் என்று தெரியாது.
கடன் மேல் கடனாக வாங்கி, தேவையற்ற திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் புதைத்து கமிஷன்களில் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழகத்தின் கஜானா என்னவாகப் போகிறது என்று எந்தக் கணிப்புமில்லை. Flying Blind என்பார்களே- குருட்டுவாக்கில் பறந்து கொண்டிருக்கிறது தமிழகத்தின் நிதி நிலைமை. இந்தப் போராட்டத்தின் வழியாக இதையெல்லாம் பற்றிக் கொஞ்சமேனும் புரிந்து கொள்ள முயற்சிப்போம். திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழகம் பற்றி நமக்கு மேம்போக்காகவேனும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத் தருணம் இது.
No comments:
Post a Comment