Wednesday, February 27, 2019

ஞானம் நமக்குள்தான் இருக்கின்றது...

ஒரு சிற்றூரில் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் தன் பெரிய மாளிகையில் தன் மனைவி, குழந்தைகளுடன் எந்தவொரு குறையுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் மனம் மிகவும் நிம்மதியிழந்து இருந்தது. அதனால் அவன் ஞானத்தைத் தேடி புறப்பட்டான். அவ்வாறு அவன் புறப்படும்போது, தான் வைத்திருந்த குதிரையில் பல ஊர்களுக்குச் சென்று, பல துறவிகள், ஞானிகள் மற்றும் குருக்களைச்  சந்தித்து, அவர்கள் கால்களில் தங்கத்தையும் வைரத்தையும் வைத்து, தனக்கு ஞானம் தருமாறு வேண்டினான். இருப்பினும் அவர்களால் அவனுக்கு ஞானத்தைத் தரமுடியவில்லை.

அப்பொழுது அவனிடம், அந்த வழியாக வந்த வழிபோக்கர் ஒருவர், “இந்த காட்டின் உட்பகுதியில் ஒரு குகையில் துறவி ஒருவர் வாழ்ந்து வருகிறார்... அவரிடம் நீங்கள் சென்று உங்கள் பிரச்சனையை சொன்னால், அவர் கண்டிப்பாகத் தீர்த்து வைப்பார்” என்று கூறினார். அவனும் அவரால் முடியும் என்று,, அவன் கூறியதைக் கேட்டு, ஒரு மூட்டை நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த காட்டின் உட்பகுதியில் இருந்த துறவியைத் தேடிச் சென்றான்.

நீண்டநாள் அலைச்சலுக்குப் பிறகு, அவன் அந்த துறவியின்  குகையைக் கண்டுப்பிடித்து, அவரை வணங்கி தன் பிரச்சனையைக் கூறினான். அப்பொழுது துறவி  அவனிடம், "நீ இங்கு எப்படி வந்தாய்?" என்று கேட்டார். அதற்கு அவன் "குதிரையில்!" என்றான். பின் அவர், "அப்படியென்றால் எதற்கு ஞானத்தை தேடுகிறாய்... முதலில் உன் குதிரையைத் தேடு!" என்று கூறினார்.

உடனே அவன் அவரிடம், "என்ன குருவே! இப்படி முட்டாள் தனமாக பேசுகிறீர்கள்... என்னிடம் தான் குதிரை இருக்கிறதே... பின் எதற்கு நான் அதைத் தேட வேண்டும்" என்று சொன்னான். அப்பொழுது குரு அவனிடம், "எப்படி உன்னிடம் குதிரை இருக்கிறதோ, அதுபோல்தான் ஞானமும் உன்னிடமே இருக்கிறது... ஆகவே, அதை வெளியே தேடி அலையாமல், உனக்குள்ளேயே தேடித் தெரிந்துக்கொள்" என்று கூறி, குகைக்குள் சென்று தியானம் செய்ய, ஆரம்பித்துவிட்டார்.

ஞானம் எங்கேயும் இல்லை, அது நமக்குள்தான் இருக்கின்றது...

No comments: