துறவி ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வோர் ஊராகச் சென்று, மக்களுக்குப் போதித்து வந்தார். மக்களும் அவருடைய போதையைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
ஒரு கிராமத்தில் துறவி தன்னுடைய போதனையை முடித்துவிட்டுத் தான் தங்கியிருந்த குடிசைக்குத் திரும்பும்போது, அவரைச் சந்தித்த ஓர் இளைஞன், “ஐயா! எனக்கொரு சந்தேகம்... நீங்களும் உங்களைப் போன்றவர்களும் என்னதான் ஊர் ஊராகச் சென்று போதித்தாலும், மக்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். “தம்பி நீ கேட்ட இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்... அதற்கு முன்பாக உன்னிடம் இருக்கும் குதிரையை இங்கிருக்கும் மரத்தடியில் கட்டிவைத்து, அதற்கு ஒரு வாரம் வேளா வேளைக்கு உணவளித்து வா” என்றார் துறவி. அவனும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
மறுநாள் தன்னுடைய குதிரையோடு அங்கு வந்த இளைஞன் அதை, துறவி தங்கியிருந்த குடிசைக்குக் முன்பாக இருந்த மரத்தடியில் கட்டிவைத்து, அதற்கு வேளா வேளைக்கு உணவளித்து வந்தான். அது மட்டுமல்லாமல், அது இட்ட சாணத்தை கூட்டிப் பெருக்கி, அவ்விடத்தைத் தூய்மையாக வைத்து வந்தான்.
துறவி சொன்னதுபோன்று, ஒருவாரம் கழித்து அவரை வந்து சந்தித்த இளைஞன் அவரிடம், “ஐயா! நீங்கள் சொன்னது போன்று நான் செய்துவிட்டேன்... இப்பொழுது நீங்கள் நான் கேட்ட கேள்விக்கான பதிலைச் சொல்லுங்கள்” என்றான். துறவி அவனை ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னார். “தம்பி! நீ ஒருவாரம் செய்துகொண்டு வந்தாயே! இதிலேயே நீ கேட்ட கேள்விக்கான பதில் இருக்கின்றது” என்றார். “ஒன்றும் புரியவில்லை ஐயா! சற்றுத் தெளிவாக விளக்குங்கள்” என்று கேட்ட இளைஞனிடம் ஞானி சொன்னார், “தம்பி! நான் உன்னை உன்னுடைய குதிரையை இங்கு கட்டிவைத்து உணவிடத்தான் சொன்னான். ஆனால், நீ என்ன செய்தாய்... அந்தக் குதிரைக்குக் உணவிட்டதோடு மட்டுமல்லாமல், அது இட்ட சாணத்தையும் திரும்பத் திரும்பக் கூட்டிப் பெருக்கினாய் அல்லவா! அது ஏன்?” “குதிரை இட்ட சாணத்தை ஒவ்வொருநாளும் கூட்டிப் பெருக்கவில்லை என்றால், இந்த இடம் நாற்றமடிக்கத் தொடங்கிவிடும்” என்றான் இளைஞன்.
“மிகச் சரியாய் சொன்னாய்... எப்படி இந்த இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க குதிரை இட்ட சாணத்தை ஒவ்வொருநாளும் கூட்டிப் பெருக்கினாயோ, அதுபோன்றுதான் மக்கள் நல்வழிக்கு வருவதற்கு நானும் என்னைப் போன்றவர்களும் மீண்டும் மீண்டுமாகப் போதிக்கவேண்டி இருக்கின்றது. ஒருவேளை நாங்கள் போதிப்பதை நிறுத்திவிட்டால், இந்த உலகம், இதிலுள்ள மக்கள் யாவரும் இன்னும் சீர்கெட்டுப் போய்விடுவார்கள்” என்றார் துறவி.
No comments:
Post a Comment