உலகில் மரியாதையை விரும்பாதவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். ஆனால் அந்த மரியாதையை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். மனிதனாக பிறந்துவிட்ட வாழ்வில் ஒருவருக்கு மதிப்பும், மரியாதையும் மிகவும் அவசியம் ஆகின்றது. ஏனென்றால் பிறர் மதிக்க வாழ வேண்டும். பிறர் மரியாதை தரும் அளவிற்கு உயரவேண்டும் என்பதே ஒவ்வொரு ஜீவனின் எதிர்பார்ப்பாகும். ஆனால் இங்கே அந்த மதிப்பையும், மரியாதையையும் நல்ல வழியில் நாம் பெற்றோமா என்பது தான் விஷயமே.
ஒருவர் நன்றாக படிப்பது அவரது மதிப்பை உயர்த்துவதற்கும், மரியாதையை சமூகத்தில் பெறுவதற்கு காரணமாக இருந்தாலும். அதற்கு பின் அவர் நடந்து கொள்ளும் விதமே உலகில் அவரை முழு மனிதனாக மாற்றுகின்றது. மதிப்பையும், மரியாதையையும் பெற விரும்பும் ஒருவர் முதலில் தன்னுடைய வாழ்வில் சுறுசுறுப்பு நிறைந்தவராக இருப்பார். அடுத்தது தனது வாழ்வில் கவனம் கொடுப்பவராக இருப்பார். இதனால் அவர் தன்னை எப்பொழுதும் உயர்ந்த நிலையிலிருந்து கீழிறங்கும் எண்ணங்களை உற்பத்தி பண்ணமாட்டார்.
சிலர் தீய வழியில் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன சொல்கின்றீர்கள்? என நீங்கள் கேட்பது புரிகின்றது. அவர்களுக்கு கிடைப்பது மரியாதையோ மதிப்போ அல்ல. வாயளவில் வார்த்தை, செயலளவில் நடிப்பு ஒன்று அவருடைய பணத்திற்காக இருக்கலாம் அடுத்து அவருடைய பதவிக்காக இருக்கலாம். இரண்டையும் அவர் இழந்து விட்டால் அவரை சுற்றி இருக்கும் வேஷம் கலைந்துவிடும். ஆனால், உலகில் மதிப்பை விரும்பும் ஒருவர் தீயவழியில் சென்றாவது அதை காப்பற்றிக்கொள்ள முற்படுவதால் இறுதி வரை இந்த பாவ உலகினில் அவரை மதித்தாலும் இறைவனிடம் அவருக்கு எள்ளளவும் மதிப்பில்லை என்பதே உண்மை.
எங்கே பிறரின் ஆசிகளோடு ஒருவருக்கு மரியாதை கிடைக்கின்றதோ அவர்தான் நேர்மையானவர். அவரை பற்றி ஒவ்வொரு மனித உள்ளமும் புரிந்துகொண்டிருக்கும். நேர்மையாக இருப்பதால் அவர் எப்பொழுதும் பூமியில் சோதனை காலங்களிலும் மங்காத
தங்கமாக விளங்குவார். மதிப்பு மற்றும் மரியாதைக்கான விதை நேர்மை தான்.
நேர்மையோடு கூடவே இனிமை சேரும்பொழுது அவரது வாழ்க்கை தேனும்,பாலுமாக தித்திக்கும். தன்னுடைய மாசற்ற மனதிற்கு நேர்மையாக இருப்பவர் இறைவன் முன்பும், மக்களின் முன்பும் எப்பொழுதும் வைரமாக ஒளிவீசுவார். எனவே வாழ்வில் ஒருவர்
மதிப்பு மிக்கவராக மாற எந்த சூழ்நிலையிலும் ஆடாத அசையாத நேர்மை நிறைந்த வழியை துணிவான நெஞ்சத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கேதான் தர்மம் அவருக்காக வெற்றிமாலையுடன் காத்துக்கொண்டிருக்கும்.
நேர்மையான வழியில் மதிப்பையும் மரியாதையையும் பெறுவோம். வாழ்வில் நிம்மதி அடைவோம்.
No comments:
Post a Comment