ஒரு கிராமத்தில் செல்வம் என்றொரு மனிதர் இருந்தார். அவர் தன்னுடைய பெயருக்கு ஏற்ப மிகப்பெரிய செல்வந்தராய் இருந்தார். அவர் தன்னுடைய மனைவி மற்றும் திருமண வயதில் இருந்த தனது அன்பு மகளோடு வாழ்ந்துவந்தார்; தன்னிடம் உதவி என்று வந்தோருக்கு அவர் வாரி வாரி வழங்கிவந்தார். இதனாலேயே அவரிடமிருந்த செல்வமெல்லாம் குறைந்து அவர் வறுமையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், கடன் வாங்கியாவது தன்னை அண்டிவந்தவர்களுக்கு உதவி செய்துவந்தார்.
இந்நிலையில் செல்வம் இருந்த அதே ஊரில் இருந்த பணக்காரர் ஒருவர் அவரிடம் வந்து, “அவகசரமாக எனக்கு நூறு பவுன் நகை வேண்டும்” என்றார். “நூறு பவுனா! அதற்கு நான் எங்கு போவேன்... முன்புபோல் என்னிடம் பணமோ, நகையோ எதுவும் இல்லை... என்னிடம் இருந்ததையெல்லாம் என்னை அண்டி வந்த மக்களுக்கு வாரிக் கொடுத்துவிட்டேன்... இப்பொழுது நான் உணவிற்கே மிகவும் கஷ்டப்படுகிறேன். இப்படிப்பட்ட நிலையில் என்னிடம் நீங்கள் நூறு பவுன் நகை கேட்டால் நான் எங்கு போவேன்... இவற்றுக்கு மத்தியில் என் மகளுடைய திருமண காரியம் வேறு நெருங்கிவந்துகொண்டிருக்கின்றது. அதற்கு நான் என்ன செய்யப்போகிறேனோ” என்று வேதனை கலந்த குரலில் சொன்னார் செல்வம்.
“நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர்... உங்களிடம் நூறு பவுன் நகையில்லையா?... என்னை ஏமாற்றத்தானே இப்படிச் சொல்கிறீர்கள்?... இருங்கள், இன்றிரவு உங்களுடைய வீட்டிற்கு கொள்ளக்கூட்டத் தலைவனை அனுப்பி வைத்து, உங்களிடம் இருப்பதையெல்லாம் அள்ளிக்கொண்டு வரச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாக வெளியேறினார் அந்தப் பணக்காரர். பணக்காரர் வெளியே சென்றதிலிருந்து செல்வத்திற்கு ஒரே பதற்றமாக இருந்தது. ‘இன்றிரவு கொள்ளையர் கூட்டத்தலைவன் வீட்டுக்கு வருவான் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாரே... இரவில் அவன் வந்து என்னவெல்லாம் செய்யப் போகிறானோ’ என்று பயந்துகொண்டே இருந்தார் செல்வம்.
இரவு வந்தது. செல்வம் தன் மனைவியோடு கட்டிலில் படுத்துக்கொண்டு, தன்னுடைய உள்ளக் குமுறலை மனைவியிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்: “நமது குடும்பம் முன்புபோல் இல்லை... அன்றாடம் சாப்பாட்டிற்கே பெரிய திண்டாட்டமாக இருக்கின்றது... போதாகுறைக்கு மகளின் திருமணம் வேறு நெருங்கி வருகின்றது. இதற்கிடையில் இந்தப் பணக்காரர் நம்முடைய வீட்டிற்கு ஊரில் இருக்கின்ற கொள்ளைக்கூட்டத் தலைவனை இங்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்... அவன் வந்து என்ன செய்யப் போகிறானோ? என்று நினைத்துத்தான் ஒரே பதற்றமாக இருக்கின்றது.” செல்வம் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய மனைவி, “கவலைப்படாதீர்கள்! நாம் வணங்குகின்ற கடவுள் நம்மை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டார்” என்று தேற்றினார்.
இவையெல்லாவற்றையும் செல்வத்தின் வீட்டில் திருடுவதற்காக அவருடைய வீட்டு மாடியில் ஒளிந்துகொண்டிருந்த கொள்ளைக் கூட்டத் தலைவன் கேட்டு, அவர்மீதும் அவருடைய குடும்பத்தின்மீதும் இரக்கம்கொண்டு, நேராக பணக்காரரின் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த பல ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துவந்து, அதை செல்வத்தின் வீட்டு வாயிலுக்கு முன்பாகப் போட்டுவிட்டுச் சென்றான். கூடவே அதில் ஒரு காகிதத்தை விட்டுச் சென்றான். அந்தக் காகிதத்தில், “உங்கள் நண்பர் ஒருவருடைய அன்புப் பரிசு, தயவுசெய்து பெற்றுக்கொள்ளுநாள்” என்று குறிப்பிடப்பட்டிந்தது. இதைப் பார்த்துவிட்டு செல்வமும் அவருடைய மனைவியும், “கடவுள்தான் இந்த இக்கட்டான நேரத்தில் இப்படியோர் உதவி செய்திருக்கிறார். உண்மையில் கடவுள் மிகப்பெரியவர்” என்று கடவுளைப் போற்றிப் புகழத் தொடங்கினார்.
No comments:
Post a Comment