இரண்டாம் உலகப்போர் மிகத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு படையில் இருந்த ஒரு வீரன் மட்டும் அங்கு எழுந்த புகைமூட்டத்தின் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டான்.
புகைமூட்டம் விலக, எதிரில் என்ன இருக்கின்றது என்று அவன் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவன் எதிரி நாட்டுப்படைக்கு மிக அருகில் இருப்பது. உடனே அவன் அவர்களிடமிருந்து தப்பித்து, அருகில் இருந்த ஒரு குன்றுக்கு ஓடினான். அந்தக் குன்றில் சிறுசிறு குகைகள் இருந்தன. அவற்றுள் ஒரு குகைகள் அவன் ஓடி ஒளிந்து கொண்டான்.
அவன் ஓடி மறைவதை எதிரி நாட்டுப்படையில் இருந்த ஒருசில படைவீரர்கள் பார்த்தார்கள். உடனே அவர்கள் அவனைத் துரத்திக்கொண்டு, அவன் மறைந்திருந்த குன்றுக்கு வந்தார்கள். குன்றில் ஏராளமான குகைகள் இருந்ததால், அவர்கள் ஒவ்வொரு குகையாகப் போய்ப்பார்த்தார்கள்.
இதற்கிடையில் அவர்களிடமிருந்து தப்பித்து வந்த படைவீரன், தமக்கு எந்தவோர் ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடினான். எல்லாக் குகைகளையும் ஏறி இறங்கிப் பார்த்த எதிரி நாட்டுப் படைவீரர்கள் அவன் இருந்த குகைக்கு மட்டும் வராமல் அப்படியே சென்றுவிட்டார்கள்.
அவர்கள் அங்கிருந்து சென்றபிறகு, ‘அவர்கள் ஏன் தான் இருந்த குகைக்கு வரவில்லை’ என்று வியப்பு மேலிட, குகையை விட்டுவிட்டு வெளியே வந்தான் அந்தப் படைவீரன். அப்பொழுதுதான் அவன் ஒளிந்திருந்த குகையின் நுழைவாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருப்பதைப் பார்த்தான்.
‘இறைவன்தான் தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, ஒரு சிலந்தியை அனுப்பி குகையின் வாசலில் வலைப்பின்ன வைத்திருக்கிறார்’ என்று இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினான் அவன்.
யாராரெல்லாம் இறைவனை நோக்கி மன்றாடுகிரார்களோ, அவர்களை இறைவன் எல்லா விதமான நெருக்கடிகளிலிருந்தும் துன்ப துயரத்திலிருந்தும் காத்திடுவார்...
No comments:
Post a Comment