Thursday, September 26, 2019

தனி மனிதனைச் சரி செய்... உலகம் சரியாகி விடும்...

*சிந்தனைக் கதை*

*தனி மனிதனைச் சரி செய்*
*உலகம் சரியாகி விடும்*

தந்தை முக்கிய வேலையாக இருந்த போது, அவருடைய எட்டு வயது மகள் அடிக்கடி அங்கு வந்து, தந்தையிடம் பல்வேறு வினாக்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

''உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது? சூரியன் ஏன் கிழக்கே உதிக்கிறது? வானம் ஏன் நீலமாக இருக்கிறது?’ என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு உரிய கேள்விகளை அவள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது, தந்தைக்குத் தொந்தரவாக இருந்தது.

தன் மகளுக்கு விளையாட்டாக ஏதேனும் ஒரு வேலையைக் கொடுத்து விட்டால், தனது வேலை கெடாது என்று நினைத்தார் அவர். தனது மேஜையின் மேலிருந்த உலக வரைபடத்தை எடுத்து மகளிடம் காண்பித்து, ''இது என்ன?'' என்று கேட்டார். ''ஓ... தெரியுமே! இது உலகப்படம். எங்கள் ஆசிரியர் இதைக் காண்பித்திருக்கிறார்'' என்றாள் மகள்.

உடனே அப்பா, மேஜையின் மீதிருந்த ஒரு கத்தரிக்கோலை எடுத்து, உலக வரைபடத்தைத் துண்டுத் துண்டாக வெட்டி, சீட்டுக் கலைப்பது போல் கலைத்தார். அதை மகளிடம் கொடுத்து, ''இந்த உலகப் படத்தை முதலில் இருந்தது போல் ஒரு காகிதத்தில் ஒழுங்காக ஒட்டிக் கொண்டு வா! உனக்கு ஒரு பரிசு தருகிறேன்'' என்று கூறினார்.

'விவரம் தெரிந்த பெரியவர்களுக்கே இதைச் செய்து முடிக்கச் சில மணி நேரம் ஆகும். தன் மகளால் இதை அவ்வளவு சுலபமாக ஒட்டி விட முடியாது!’ என்று தந்தை நினைத்தார்.

ஆனால், முற்றிலும் சரியாக ஒட்டப்பட்ட உலகப் படத்துடன் பத்தே நிமிடத்தில் வந்து நின்றாள் மகள். தந்தைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ''இதை இவ்வளவு சீக்கிரம் எப்படிச் செய்து முடித்தாய்?’ என்று கேட்டார்.

''அப்பா, நீங்கள் கிழித்துக் கொடுத்த காகிதத்தின் மறு பக்கத்தில், ஒரு மனிதனின் படம் துண்டுத் துண்டாக இருந்தது. அந்த மனிதனின் உருவத்தை நான் சரி செய்தேன். உலகம் தானாகவே சரியாகி விட்டது'' என்றாள் மகள்.

எத்தனைப் பெரிய உண்மை!

'Set the man right, the world becomes alright’. 'தனி மனிதனை சரிசெய். உலகம் சரியாகி விடும்’

No comments: