Friday, September 27, 2019

கீழடி : தமிழனின் பெருமை

தோண்டத் தோண்டப் பண்டைத் தமிழின்
      தொன்மை என்னும் ஊற்றறிந்தோம்!
பானை ஓட்டில் ஆதன் குவிரன்
      பதிந்த தமிழிப் பெயரறிந்தோம்!
மீனின் படமும் உரோம் கிரேக்க
      மேலைப் பொருள்கள் ஆங்கெடுத்தோம்!
ஆனைக் கொம்பில் சீப்பு, சதுரம்,
       பகடை, அணிகள் கண்டெடுத்தோம்!

நல்ல இரும்பு, செம்பு, நெசவு
         செய்யும் ஊசி யும்..எடுத்தோம்!
கல்லில் செய்த முத்தி ரையைக்
        கண்டே நுட்பத் திறனறிந்தோம்!
சொல்லை எழுதி வைத்தோர் கேட்டுத்
     தொன்மைத் தொலைவின் நிலையறிந்தோம்!
உள்ளே இன்னும் என்ன  என்ன
        இருக்கும் என்றே வியப்புகொண்டோம்!

மானின் ஆட்டின் மாட்டின் எலும்பும்
        பவளம் மணியும் அகழ்ந்தெடுத்தோம்!
காணும் இடங்கள் எங்கும் தமிழர்க்
       கலையின் நுணுக்கந் தானெடுத்தோம்!
தூண்கள் மதில்கள் அறைகள் செய்ய
         சுண்ணக் கலையில் தேர்ச்சிபெற்றோம்!
ஆணும் பெண்ணும் சமூக மாக
        அழகு நகரை நாம்சமைத்தோம்!

வாணி கங்கள் தொழிற்சா லைகள்
        வசதி மிகவும் கொண்டிருந்தோம்!
ஏனோ தமிழன் இவற்றை மறந்து
        இழிவைப் புகழ்ந்து திரிகின்றான்!
ஏணி இதுதான் தமிழா இன்னும்
        இறங்கி தோண்டு மிகதேடு!
காணி நிலத்தை அகழ்ந்தால் உன்றன்
        காலில் வீழும் வரலாறு!

எந்த நாட்டின் நாக ரிகங்கள்
          எங்கள் தமிழர் நாட்டைப்போல்
தந்தப் பொருளில் விளையா டினார்கள்!
         தமிழர்  தொன்மை இதிலிருந்தே
சிந்து நகரின் வளத்தை விடவும்
         சிறந்த தென்று உலகுணரும்!
முந்தும் தமிழின் குடியே உலகின்
         மூத்த மக்கள் என்றுணரும்!

சிரங்கள் கொண்ட உருவம் செய்து
          கலைகள் வளர்த்த தமிழரெங்கே?
திரையின் வலையில் அடிமை நாயாய்த்
          திரியும் இற்றைத் தமிழரெங்கே?
தரைகீழ் வாழ்ந்த தமிழர் போல
          வீரம், மானத் தோடுவாழ,
புரிந்து நடக்க வேண்டும் இல்லை
          புதைவோம் வந்தத் தடமின்றி!

சாதி, மதத்தில், திரையில், மதுவில்
        தவழும் தமிழா இதுகேட்பாய்!
ஏதோ இருக்கும் இதையும் அழிக்க
       எண்ணும் பகைவர் அனைவரையும்,
மோதி வெல்ல முதலில் எல்லா
        நிலமும் தோண்ட முன்வருவாய்!
ஆதிக் குடியின்  வாழ்வை சிறப்பை
         அறிவை உலகுக்(கு) எடுத்துரைப்பாய்!
       
பூம்பு காரும், ஆதிச் சநல்லூர்
          போல நகர்கள் பலவுண்டு!
தூங்கும் அந்த நகரின் தோலைத்
          தோண்ட அரசே முன்வருக!
ஆங்கே அகழும் பொருளை எல்லாம்
          பாங்காய்ப் பாது காப்புசெய்க!
ஓங்கும் நமது புகழை இந்த
           உலகம் மெச்ச வெளிக்கொணர்க!

-- ஏறன் சிவா

No comments: