Saturday, September 7, 2019

பசுமை ஒழிப்பு சாலை எதற்கு? வைரமுத்து வைர வரிகள்...

பசுமை ஒழிப்பு சாலை எதற்கு..? வைரமுத்து வைர வரிகள்.

ஏலே தொரச்சாமி
எங்கடா ஒங்கப்பன்
சாராயக்கடை போயிருப்பான்
கையோட கூட்டியாடா

வீட்ட இடிக்கிறாக
வெறப்பாக நிக்கிறாக
ஓட்டப் பிரிக்கிறாக
ஓடிப்போய் கூட்டியாடா

சாமிகளா சாமிகளா
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா

சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா

முள்ளெடுக்கப் போயிருக்கும்
மூத்தவனக் காங்கலையே
ஏழாவது படிக்கப் போன
எளையவளும் காங்கலையே

ஒத்தையிலே நானிருந்து
ஒலைக்கரிசி போடையிலே
வாய்க்கரிசி கொண்டுவந்து
வாசப்பக்கம் நிக்கிறாக

எத்தி ஒதைச்சாலே
இத்துவிடும் சுவருக்கு
கடப்பாரை எதுக்கய்யா
கவர்மெண்டு ஆளுகளே

நான் பட்ட பாடு
நாய்படுமா பேய்படுமா?
கடையும் தயிர்படுமா?
காஞ்சிவரம் தறிபடுமா?

முன்சுவரு எழுப்பத்தான்
மூக்குத்தி அடகுவெச்சேன்
பித்தாளக் கொடம்வித்துப்
பின்சுவரு கட்டிவச்சேன்

கதவு மரம் வாங்கக்
காசில்ல ராசேவே
கோணிக் கதவு செஞ்சு
கோட்டைக்கு மாட்டிவிட்டேன்

சீட்டுப் புடிச்சுச்
சித்தாளு வேலசெஞ்சு
ஓட்டக் கூரைக்கு
ஒருபகுதி ஓடுவச்சேன்

அய்யா எசமானே
அஞ்சுவெரல் மோதிரமோ
பாதகத்தி சொத்துபத்து
பாருமய்யா கண்திறந்து

தண்ணி புடிக்கத்
தகரக்கொடம் ஒண்ணிருக்கு
வீட்டவிட வயசான
வெளக்கமாறு ஒண்ணிருக்கு

பத்துவச்சுப் பத்தவச்ச
பாத்திரங்க ரெண்டிருக்கு
எம்புருசன் திங்கமட்டும்
எவர்சில்வர் தட்டிருக்கு

போங்கய்யா போயிருங்க
புண்ணியமாய்ப் போகட்டும்
என்வீட்டு நாய்குட்டி
இன்னைக்கும் தூங்கட்டும்

அழுதாலும் ஏழசொல்லு
அம்பலத்தில் ஏறாது
அருகம்புல் புத்திசொல்லி
அருவா கேக்காது

இடிங்கய்யா இடிங்க
இத்தவீடு தானிடிங்க
கூரை பிரிச்செறிங்க
கொடியெல்லாம் அறுத்தெறிங்க

கண்ணாடிக் கடைக்குள்ள
காட்டான புகுந்ததுபோல்
முன்னாடி பின்னாடி
முழுசா நொறுக்கிருங்க

கடைசியில ஒண்ணுமட்டும்
கால்புடிச்சுக் கேக்கறன்யா
சீரட்டு புடிப்பவரே
செவிசாச்சுக் கேளுமய்யா

கொல்லையில எம்மகதான்
மல்லியப்பூ நட்டிருக்கா
நீர்குடிச்ச கொடி இப்ப
வேர்பிடிச்சு நின்னிருக்கு

பொத்தி வளத்தகொடி
பூப்பூக்கு முன்னால
கத்தி எறியாதிக
கடப்பாரை வீசாதிக

ஆசையில வச்ச கொடி
அசங்காம இருக்கட்டும்
அவவச்ச மல்லிகைதான்
எவளுக்கோ பூக்கட்டும்.

No comments: