Monday, September 23, 2019

திருந்துவோம்... திருத்துவோம்...

எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறிவிட முடியாது.. ஒருவருக்கு அறிவுரை கூறவேண்டும் என்றால் முதலில் அதற்கான தகுதி நமக்கு வேண்டும்.

எந்த ஒரு செயலிலும் நாம் முன்மாதிரியாக இருந்தால் தான் நம் வார்த்தைக்கு மரியாதை இருக்கும்.

ஒரு அறிஞரிடம் ஒரு தாய் தன் மகனோடு வந்தாள். என் மகன் அடிக்கடி அதிகமாக இனிப்பை சாப்பிடுகிறான். இதனால் அவன் உடல் நலம் கெடுகிறது. தாங்கள்தான் அவனுக்கு அறிவுரை கூறி திருத்த வேண்டும்.

இதனைக் கேட்ட அந்த அறிஞர் , பெண்மணியிடம் ஒரு மாதம் கழித்து வந்து தன்னைச் சந்திக்கும் படி கூறினார். அந்தப் பெண்மணியும் தன் மகனை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அவர் கூறியபடியே அந்த பெண்மணி சரியாக ஒரு மாதம் கழித்து வந்து அவரைச் சந்தித்தாள்.அவர்
அந்தச் சிறுவனை தன்னருகே அழைத்து உட்கார வைத்துக் கொண்டார்.

''சிறுவனே. நீ மிகவும் நல்லவன் அல்லவா? அதிக இனிப்பு சாப்பிடுவதால் உன் உடல் நலம் கெடும். கூடவே உனது கல்வியும் பாதிக்கும்.

உன் அன்னையும், உன்னை நினைத்துக் கவலைப் படுவாள். எனவே இனி நீ அளவோடு இனிப்பைச் சாப்பிடு’என்றார்.. அவரின் அன்பான பேச்சில் மயங்கினான் அந்தச் சிறுவன்.

இதைக் கேட்ட அந்தத் தாயார் துணுக்குற்றாள்.
அய்யா.., சென்ற மாதம் வந்தபோதே இவனிடம் இதை நீங்கள் கூறி இருக்கலாமே. ஒரு மாதத்திற்குப் பின்னர் வரச்சொல்லி அறிவுரை சொன்னது ஏனோ?’ என்றாள்.

இதற்கு அவர் புன்னகைத்தபடியே பதிலளித்தார்.
உங்கள் மகனைப் போலவே நானும் இனிப்பு சாப்பிடுவதில் அதிக விருப்பம் உடையவனாய் இருந்தேன்.

கடந்த ஒரு மாதமாக நான் இனிப்பைச் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். இதன் காரணமாகவே நான் உங்களை ஒரு மாதம் கழித்து வரச் சொன்னேன் என்றார்..

அந்த பெண்மணி மிக்க மரியாதையோடு அவரை வணங்கி விடைபெற்றாள்.

ஆம்.,நண்பர்களே..

நம்மிடம் உள்ள கெட்ட பழக்கத்தை கைவிடாமல்,
எப்படியாவது மற்றவர்களை மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம்.

அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகுதான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது..

ஆம்.,முதலில் நாம் திருந்துவோம்..

பிறகு மற்றவர்களை திருத்த முயல்வோம்....❤🌹🖤

No comments: