Wednesday, September 4, 2019

ஒதியன் மற்றும் பலா மரங்களின் முக்கியத்துவம்...

’மரம் வைத்தால் மழை வரும்’ என்பது உண்மையானால் சீமைக் கருவேலம் மண்டியுள்ள இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் ஏன் மழை வளம் குறைந்து வறட்சி நிலவுகிறது எனச் சிந்தியுங்கள்.
மரம் என்ற பெயரில் ஏதேனும் ஒன்றைக் காட்டினால், அதை நம்பி ஏமாந்து மழையை இறக்கும் மூடத்தனம் மேகங்களுக்கு இல்லை. அவை ஞானம் பெற்றவை. அவற்றுக்கு மறைபொருட்கள் தெரியும். காற்றில் வீசுவது, குளிச்சியா வெப்பமா என்று அறிபவை மேகங்கள். அக்குளிர்ச்சியும் வெப்பமும் எவ்வகை உயிரினங்களின் வெளிப்பாடு என்பது மேகங்களுக்குப் புரியும்.
இராமநாதபுரம் நீர்நிறைப் பகுதியாக வேண்டுமென்றால், அப்பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கம் நிகழ வேண்டும். நிலம் கருமை படிவதாக மாற வேண்டும். காற்றில் மறைந்துள்ள குளிர்ச்சியை உள்ளிழுத்துக்கொள்ளும் புழுக்கம் மிகுந்த தோப்புகளும் காடுகளும் உருவாக வேண்டும்.
நிலத்தின் கீழே மரவட்டைகளும் மண்புழுக்களும் பெருக வேண்டும். இது நீண்ட காலம் நிகழ வேண்டிய செயல்முறை.
இரண்டு மரவகைகளால், இந்த நிலைமையை மிக விரைவாக உருவாக்கித் தர இயலும்.
1. ஒதியன்
2. பலா
ஒதியன் மரங்கள், மிக மோசமாக இழிவு செய்யப்படுபவை. ‘ஒன்றுக்கும் ஆகாத ஒதியன்’, ‘ஒதியன் பெருத்து உத்தரத்திற்கு ஆகாது’ என்பவை எல்லாம் ஒதிய மரத்தை இழிவு செய்யும் பழமொழிகள். ஆனால், இந்த மரம்தான் நீர்நிறை நிலத்தை உருவாக்குவதில் முதன்மைப் பங்கு ஆற்றப் போகிறது.
ஒதியன் மரம், அதிவேகமாக வளரக் கூடியது. தண்டுகளை ஒடித்து வைத்தாலும் துளிர்த்துக்கொள்ளும். ஒதியன் மரத்தின் இலைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும். இலைகளின் எண்ணிக்கையை உற்றுப் பார்த்தால் வியப்பு மேலிடும். அந்தளவுக்கு இலைகளை வளர்த்தெடுக்கும் மரம் இது.
கோடை துவங்கும்போது, தன்னிடம் உள்ள எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, குச்சிகளோடும் காம்புகளோடும் நிற்கும் மரம் இது. இந்தச் சித்திரை மாதத்தில் ஒதியன் மரங்களைப் பார்த்தால், உங்களால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
கோடையில் ஒதியன் காய்கள் பறவைகள், அணில்களுக்கு உணவு ஆதாரம். திராட்சைப் பழங்கள் போல கொத்துக்கொத்தாகக் காய்த்துத் தொங்கும் பழங்கள் இவை. ஆயிரக்கணக்கான குருவிகள் வந்து அமர்ந்து உணவருந்திச் செல்லும் மரம் இது.
ஒதியன் மரத்தின் இப்பண்புகள் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குபவை. இவற்றின் இலைகள் நிலத்தில் கொட்டுவதால், நிலம் மிக எளிதாகக உயிர்க் கரிமத்தை உருவாக்கிக்கொள்கிறது.
பலா மரங்கள் குளிர்ச்சி, வெப்பம் ஆகியவற்றின் அருமையான கலவை. பலா உள்ள மலைகள் நல்ல மழை வளம் பெறுபவை. இதன் பொருள், பலா மரங்களுக்காக மழை வளம் கிட்டுகிறது என்பதாகும்.
ஐந்தாண்டுகளில் பலா காய்க்கத் துவங்கும். ஒரு மரம் வழங்கும் பழங்களில் பல்லாயிரம் விதைகள் இருக்கும். பலா விதைகளின் முளைப்புத் திறன் மிக அதிகம். உயிர்ப் பெருக்கத்திற்கென்றே உள்ள மரங்களில் பலாவும் ஒன்று. பத்துப் பலா மரங்கள் இருந்தால், அங்குள்ள காற்றில் குளிர்ச்சி நிலவும். அந்த நிலத்தில் கருமை வண்ணம் படரும்.
ஒதியன், பலா ஆகிய இரு தாவரங்களையும் வீட்டுத் தோட்டங்களில், வாய்ப்புள்ள தோப்புகளில், பொது இடங்களில் நடவு செய்து சில ஆண்டுகளுக்குப் பராமரித்தால், வறண்ட நிலம் நீர் நிறை நிலமாக மாற்றம் பெறும்.
பொதுவாக மரம் நடுதல் நல்ல பண்புதான். ஆனால், இவ்வாறான இடர்மிகுந்த பகுதிகளில் பணியாற்றும்போது, பொருத்தமான தாவர வகைகளைக் கூடுதலாக நடவு செய்வது அடிப்படை. இராமநாதபுரம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் பலா மரங்களை நடவு செய்து பராமரித்தால், ஐந்தாண்டுகளில் சூழல் மாற்றம் பெறும்.
நிலம் பல்லுயிர்களின் உறைவிடமானால், காற்றிலுள்ள குளிர்ச்சி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். குளிர்ச்சி வெளிப்பட்டால், வெப்பம் தணிந்து புழுக்கம் ஆகும். மேகக் கூட்டம் புழுக்கத்தைத் தேடி வந்து, நீர் நிறைத்துச் செல்லும்!

No comments: