Thursday, March 19, 2020

பொறுமையை கையாண்டு வேரூண்டுங்கள்...

சீனாவின் மூங்கில் மரத்தில் ஒரு மிகப்பெரும் படிப்பினை

அவசர வளர்ச்சிக்கும் அசுர வளர்ச்சிக்கும் இடையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் மிகப்பெரும் பாடத்தை இயற்கை உங்களுக்கு அருமையாக சொல்லித்தருகிறது. 

சீனாவின் மூங்கில் விதை முளைத்தாலும் நான்கு வருடங்களுக்கு எந்த வளர்ச்சியுமே இருக்காது. அப்படியே இருக்கும். ஒரு அங்குலமேனும் வளர்ச்சியில் எதுவித மாற்றமில்லமில்லாமல் தான் இருக்கும். 

இதை பயிரிடும் சீனர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. எமக்கும் எம்மை போன்றவர்களுக்கு மட்டும் தான் இது புதிது. ஒரு சீன விவசாயி ௪ வருடங்களுக்கு அதை பராமரித்து அதற்கு நீர் பாய்ச்சி வரவேண்டும். தனது நான்கு வருட பொறுமையையும் தியாகத்தையும் உழைப்பையும் நம்பும் அவனுக்கு இயற்க்கை கொடுக்கும் கொடை என்ன தெரியுமா….?

ஐந்தாவது வருடம் தொடங்கியதும் அந்த மூங்கில் கன்று திடீரென வளர ஆரம்பிக்கிறது. அசுர வளர்ச்சி காண்கிறது. ஒரே மாதத்தில் 18 அடிக்கு மேல் வளர்ந்து விடுகிறது. ஒரே வருடத்தில் அதன் வளர்ச்சியானது 80 அடியை தொட்டுவிடும் அளவிற்கு அந்த மூங்கில் விதைக்குள் இருந்த விருட்சம் உலகையே பிரமிக்க வைத்து விடுகிறதே! காரணம் என்ன….?

பொறுமையின் சின்னமாக கருதப்படும் மூங்கில் எமக்கு சொல்லி தரும் மிகப்பெரும் பாடமே பொறுமை தான். அந்த விவசாயி எமக்கு காண்பிக்கும் வாழ்க்கை தத்துவமும் பொறுமை தான். 

அசுர வளர்ச்சி காண வேண்டுமென்றால் ஒரு மூங்கில் அந்த நான்கு வருடத்திலும் தனது வேரை நிலத்தில் ஊன்றி நின்று நிலைத்து உறுதியாக்கிக்கொள்வதற்கு தான் அத்தனை வருடங்கள் பொறுமை காத்திருக்கிறது. 

80 அடிக்கு மேல் வளர போகின்றோம் என்கிற உணர்வு அந்த மூங்கிலை எவ்வாறு தயார்படுத்தி இருக்கிறது பார்த்தீர்களா…?

ஒரு வாழை மரம் போல மூங்கில் இருந்திருந்தால் எப்போதோ நிலத்தில் சரிந்திருக்கும். காலம் காலமாக அவை நிலைத்திருக்க மாட்டாது.

இதே போன்று தான் எமது முயற்சிகளும் தொழில்களும் சிந்தனைகளும் இருக்க வேண்டும். 

பொறுமையாக இருந்து வேரூன்றி பற்றிக்கொண்ட பின் வேகமாக எழுந்தால் எம்மை யாராலும் அசைக்க முடியாது. அழிக்கவும் முடியாது. 

உங்களுடைய திறமையையும் பொறுமையும் உங்கள் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்பதற்கு மூங்கில் மரம் ஒரு அத்தாட்சி அல்லவா…?

குறுங்காலத்தில் வேகமாக முன்னேற வேண்டும் என்பதை விட்டுவிடுங்கள். அந்த வேகத்திற்கு நிகராக பன்மடங்கு பொறுமையை கையாண்டு வேரூன்ருங்கள்.

அதுதான் உங்களை அபரிமிதமாக வளர செய்யும். பலரையும் மிரள செய்யும் என்பதை இப்பாடத்தின் மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்.

No comments: