Wednesday, June 28, 2017

*நூற்றுக்கு நூறு (விழியன்)*


கணித ஆசிரியர் மலையப்பன் வகுப்பிற்குள் நுழைந்தார். பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் அமைதியானார்கள். மலையப்பன் கைகளில் முந்தைய நாள் மாணவர்கள் கொடுத்த விடைத்தாள் இருந்தது. ஒரே ஒரு கேள்வி தான் கேட்கப்பட்டு இருந்தது. கூட்டல் கணக்கு. எல்லோருக்கும் திருத்தப்பட்ட விடைத்தாள் கொடுக்கப்பட்டது. எல்லோர் முகத்தில் மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் பக்கத்தில் இருப்பவரிடம் தான் நூற்றுக்கு நூறு எடுத்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தனர். ஒரு மாணவன் எழுந்து “ஐயா, நான் ஒரு விடை எழுதி இருக்கிறேன், இவன் ஒரு விடை எழுதி இருக்கிறான் ஆனால் இருவருக்கும் 100 மதிப்பெண் கொடுத்து இருங்களே” என்று கேள்வி எழுப்பினார்.
மலையப்பன் எதுவும் பேசவில்லை. கருப்பலகை அருகில் சென்று அதில்
  
   73
+ 38
------
என்று ஐந்து முறை எழுதினார் எழுதினார். தன்னுடைய குறிப்பில் இருந்து ஐந்து மாணவர்களை அழைத்தார். மற்றவர்கள் என்ன விடை எழுதுகின்றார்கள் எனப்பார்க்காமல் இப்ப கூட்டிச்சொல்லுங்க. இந்த பலகையிலே எழுதுங்க என்று எழுதச்சொன்னார்.
முதல் மாணவர் 1011
இரண்டாமானவர் 101
மூன்றாமானவர் 111
நான்காமானவர் 012
ஐந்தாம் மாணவர் 45
என்று பலகையில் எழுதினார்கள். அநேகமாக எல்லோரும் இதே விடைகளை எழுதி இருந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் 100 மதிப்பெண் கொடுத்து இருந்தார்.
முதலில் 1011 எழுதிய மாணவரை அழைத்து எப்படி எழுதினாய் என்றார்.
“சார் 3 கூட்டல் 8 - 11, 7 கூட்டல் 3 10, ரெண்டையும் எழுதினா 1011 சார்”
“சார் 3 கூட்டல் 8 - 11, ஒன்னு மட்டும் எழுதனும் சார், அப்புறம் 7 கூட்டல் 3 10 சார், அதனால் 101ன்னு சார்”
“சார் 3 கூட்டல் 8 - 11, ஒன்னு மட்டும் எழுதிட்டு மற்றொரு 1ன்னை 7 கூட்டல் 3 உடன் சேர்த்து 111 சார்”
“ முதல்ல 7 கூட்டல் 3, 10 வரும், பூஜ்ஜியம் எழுதிட்டு 1ன்னை பக்கத்துல கொடுக்கனும் சார், 1 கூட்டல் 3 கூட்டல் 8 = 12 சார். விடை 012”
“எப்படி வந்துச்சுன்னு தெரியல சார்”
எல்லோர் எழுதிய விடையிலும் அவர்கள் எங்கே தவறு செய்திருக்கின்றார்கள் என்று மற்ற மாணவர்கள் கூறினார்கள்.
1. கூட்டலை வலம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
2. பத்தாம் இடத்தில் சரியாக மிகுதியாக வரும் ஒன்றினை இணைத்தல்
...
...
இப்ப எல்லோரும் எழுதுங்க 73 + 38 என்ன?
111 சார் என்றனர் வகுப்பில் இருந்த அனைவரும்.
அப்பவும் ஒரு மாணவன் விடவில்லை “சார், 1011, 101, 012 எழுதியவங்களுக்கு ஏன் சார் 100 கொடுத்தீங்க?”
”அவங்க முயற்சி செய்தாங்க, அதற்கும், உங்க எல்லோருக்கும் திரும்ப சரியா முறையை சொல்லிக்கொடுத்ததுக்கும், எப்படி எல்லாம் நீங்க பிற்காலத்தில் தப்பு செய்ய வாய்ப்பு இருக்குன்னு சொல்லிக்கொடுத்ததற்கும்” என்றார்.
எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தனர். கழித்தலை கற்றார்கள். வகுப்பு முடிந்தது. வகுப்பை விட்டு வெளியே கிளம்பும் போது 45 என எழுதிய மாணவன் கேட்டான்
“எனக்கு ஏன் சார் 100 கொடுத்தீங்க?”
“உனக்கு நான் சரியா சொல்லித்தரலைன்னு உணர்த்தியதற்கு உனக்கு 100 மார்க் கொடுத்தேன். இப்ப கணக்கு சரியா போடுவ இல்லை?”
- விழியன்

No comments: