Saturday, October 21, 2017

ஒரு கதை... ஒரு ஜோக்...

மூட நம்பிக்கை
ஒரு அரசன் மூட நம்பிக்கைகளை நம்பி வாழ்ந்து வந்தான். தினமும் காலையில் விழிக்கும் முன் காவலரைக் கூப்பிட்டு எங்கே இரட்டைக் காகங்கள் இருக்கின்றதோ அந்த இடத்தைப் பார்த்து வரச் சொன்னான். இரண்டு காகங்கள் ஒன்றாக இருக்கும் போது பார்த்தால் நல்லது நடக்கும் என்று யாரோ கூறியதை நம்பி இப்படி நம்பினான்.
காவலர் இரண்டு காகங்கள் ஒன்றாக இருக்கும் இடத்தை அறிந்து அரசனிடம் ஓடி வந்து கூறினான். அரசன் அந்த இடத்திற்கு வந்து பார்க்கும் போது அங்கு காகங்கள் இல்லை. பக்கத்தில் நின்ற வழிப்போக்கர் ஒருவரைக் கண்டு கோபமுற்றான். ஆத்திரத்தில் அந்த வழிப்போக்கரை கைது செய்து சிறையில் அடைக்கச் சொன்னான்.
வழிப்போக்கர் அழுது கொண்டு அரசன் முன் நின்றான். அரசன் வழிப்போக்கரிடம் " ஏதும் சொல்ல விரும்புகின்றாயா?" என்றான்.
வழிப்போக்கர் " அரசே! இன்று காலை நான் உங்கள் முகத்தில் விழித்ததால் எனக்கு  சிறைத் தண்டனை கிடைத்தது . அதை எண்ணி அழுகின்றேன் " என்றான்.
அரசன் தன் தவறை எண்ணி வருந்தி அவனை விடுதலை செய்தான்...
குடிகாரன்
குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தவனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.
"ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?".
"சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்."
“ஏன்யா... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?”
“நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”.
சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தணிந்த குரலில் கேட்டார்.
“அப்படி என்ன கட்டாயம்.?”
கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னான்.
”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு சார்".

No comments: