Monday, November 20, 2017

*10 செகண்ட் கதைகள்:*



             *ஸீட்*
       தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட்  வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் தந்தை!
        =============
                *தமிழன்டா*
      சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்..."அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!"
           ===============
                  *திருட்டு*
         "பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க" எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், "திருடுறது தப்பு...'பென்சில் வேணும்'னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டு வந்திருப்பேன்ல!" என்றார் அப்பா.
          ===============
             *பணம்*
        பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்....இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத ஆசிரியை!
            =============
         *பழ(ங்)கதை*          
      "தம்பிதானே....விட்டுக்கொடுப்பா" என மகனிடம் செல்பேசியில் சொல்லிக் கொண்டிருந்தார் தன் சகோதரன் மீது தகராறு என காவல்நிலையத்தில் நின்றிருந்த தந்தை!
             ===============
               *அக்கறை*
         கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு 'காணவில்லை' என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி!
        
            =============

No comments: