Monday, November 20, 2017

நன்றி நிறைந்த நெஞ்சத்தினராக வாழ்வோம்

உரோமையில் மக்கள் அடிமைகளாக இருந்த காலம் அது. ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பி காட்டுக்குள் ஒடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு புலி நொண்டிக்கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது. அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய புலி காட்டுக்குள் ஓடி மறைந்தது.
சிறிது காலத்திற்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கத்தின்படி அவனுக்கு மரணதண்டனை கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். ஒரு புலி அல்லது சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரணதண்டனைக்குள்ளானவன்மீது அதை ஏவிவிட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது. அதே போல, அந்த அடிமை மீது புலியை ஏவினார்கள். புலி வேகமாக அவனை நோக்குப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது. முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முல்லை எடுத்துவிட்டவன் அவன் என்பதை அறிந்ததும், அப்படியே நின்றவிட்டது. அடிமையும் அந்தப் புலியை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான். இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.
புலி ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லாருக்கும் சொன்னான். இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, புலியையும் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.
அடிமை தனக்குச் செய்த நன்மைக்கு நன்றியாக அவனைக் கொல்லாமல் விட்டது என்பது நமக்கு வியப்பாக இருக்கின்றது. இப்படி உயிரனங்கள், விலங்குகள் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக இருக்கும்போது மனிதர்களாகிய நாம் நன்றி கெட்டவர்களாக இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கின்றது.
ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்போது பத்துத் தொழுநோயாளர்கள் அவரை எதிர்கொண்டு வந்து,  தங்கள்மீது இரங்குமாறு அவரைக் கெஞ்சிக் கேட்கின்றார்கள். அந்த பத்துத் தொழுநோயாளர்களில் ஒருவர் சமாரியர். இயேசு அவர்களிடம், “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்கிறார். அவர்களும் இயேசு சொன்னவாறு எருசலேம் திருக்கோவிலை நோக்கிப் போகும்போது வழியிலே அவர்களுடைய நோய் நீங்கியதை உணர்கிறார்கள். அதிலே ஒருவர் (சமாரியர்) தன்னுடைய நோய் நீங்கியதற்குக் காரணமாக இருந்த இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். அப்போது இயேசு அவரிடம், “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே” என்கின்றார்.
யூதர்கள் சமாரியர்களோடு பேசுவதில்லை, பழகுவதில்லை. யூதர்கள் சமாரியர்களை விலங்கினும் கீழாகப் பார்த்தார்கள். அப்படியிருக்கும்போது தொழுநோய் பீடித்த தருணத்தில் அவர்கள் ஒன்றாக இருந்தது மிகவும் வியப்புக்குரியதாக இருக்கின்றது. நன்றாக இருக்கும் தருணங்களில் தங்கள் குலப்பெருமை பேசிவிட்டு, மோசமாக இருக்கும் தருங்களில் அனைவரும் சமம் என்று போலி சமத்துவம் பேசும் போலி சமத்துவவாதிகளைத்தான் இது நமக்கு நினைவுபடுத்துகின்றது.
தொழுநோயால் பீடிக்கப்பட்ட அந்த பத்துப்பேரும் மிகுந்த மன வேதனைக்கும் உடல் வேதனைக்கும் உள்ளாகியிருக்கவேண்டும். ஏனென்றால், இஸ்ரயேலில் தொழுநோயாளர்களின் நிலை மிக மோசமானது. அவர்கள் ஊருக்கு வெளியே தனியாக இருக்கவேண்டும். யாராவது அவர்கள் இருக்கும் இடம்நோக்கி வந்தால் ‘தீட்டு தீட்டு’ என்று கத்தவேண்டும். இப்படிப்பட்ட கொடிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்களை ஆண்டவர் இயேசு குணப்படுத்தியபோது அவர்களில் சமாரியரைத் தவிர ஏனையோர் நன்றி மறந்தவர்களாய் மாறிவிடுகின்றார்கள். அதனால்தான் இயேசு சமரியாரின் செயலைப் பாராட்டுவிட்டு, ஏனையோரின் நிலைகண்டு மிகுந்த வேதனையடைகின்றார்.
பல நேரங்களில் நாமும் கூட கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தவர்களாக, நன்றியுணர்வு இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். திருப்பாடல் ஆசிரியர் கூறுகின்றார், “ என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்களை மறவாதே என்று.
எனவே, நாம் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

No comments: