Thursday, November 9, 2017

நீங்கள் விதையா? செடியா? மரமா? கனியுள்ள மரமா?

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்... வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 3: 17-19.
*விதை* - ஒரு மரம் உருவாக விதையும், அது நிலைத்து நிற்க வேரும் மிகவும் அவசியம். வேத வசனம் விதையாகவும், நாம் இயேசுவின் மீது வைக்கும் அன்பு ஆணிவேர் போன்றும் இருகின்றது. இயேசு கூறிய உவமைகளில் மிகவும் முக்கியமானதாக காணப்படுவது மத்தேயு 13:23-ல் *நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்.* என்ற உவமை. அதாவது வசனத்தை கேட்டு அதன்படி வாழ தன்னை அர்ப்பணிக்கிற ஒவ்வொரு மனிதனும் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பாக இருக்கின்றான் என்று கூறுகிறார். அப்படியானால் வசனத்தை கேட்கின்ற, படிக்கின்ற ஒவ்வொருவரும் விதைக்கு ஒப்பானவர்கள்.
*செடி* - நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதையானது எப்போது தன்மீது தண்ணீர் படும் நான் எப்பொழுது எனக்கு மேலிருக்கும் தடைகளை கடந்து செடியாய் மாறுவேன் என்று நிலத்திற்குள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஏசாயா 27:3-ல் கர்த்தர் சொல்கிறார் *கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.* தண்ணீர் என்பது பரிசுத்த ஆவியானவர் நம்மேல் அசைவாடுவதை குறிக்கின்றது. வசனத்தை கேட்டு விதையாக மாறிய நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மேல் பொழியும்படி தாகத்தோடு அவரிடம் கேட்க்க வேண்டும். தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரல்லவா நம் கர்த்தர். அவ்வாறு அவர் நம்மேல் அவருடைய ஆவியை பொழியும் பொழுது விதையாக இருந்த நாம் செடியாக வளருகின்றோம்.
*மரம்* - விதையானது தற்போது தனக்கு மேலிருந்த மணல்போன்ற தடைகளை எல்லாம் தகர்த்து செடியாய் வளர்ந்து விட்டது. தற்பொழுது இந்த செடிக்கு அநேக வகைகளில் ஆபத்து நேரிடும். நிலத்தில் நடந்து செல்பவர்களோ அல்லது அந்த வழியில் செல்லும் ஆடு, மாடு போன்ற மிருகங்களோ செடியினை மிதிக்ககூடும். ஏதாவது பறவைகள் கொத்தி அழிக்ககூடும். அல்லது பலவித பூச்சிகளினால் பாதிப்பு ஏற்ப்படும். இந்த சமயத்தில் செடியானது, தோட்டத்து எஜமான் தன்னை பாதுகாப்பார் என்று சொல்லி அவரையே முழுமையாக நம்பி வாழுகின்றது. தோட்டத்து எஜமான் ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வார். இப்படியாக செடியானது மரமாக வளருகின்றது. வசனத்தை கேட்டு விதையாகிய நாம், பரிசுத்த ஆவியானவரின் பொழிதலினால் செடியாக மாறி, கர்த்த்தர் இரவும் பகலும் நம்மை காத்தபடியால் மரமாகின்றோம்.
*கனியுள்ள மரம்* - விதையாக இருந்த நம்மை செடியாக மாற்றி, இரவும் பகலும் கண்ணின் மணி போல காத்து, நம்மை மரமாக மாற்றிய இயேசு நம்மிடத்தில் இருந்து ஆவியின் கனிகளான * அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்* (கலாத்தியர் 5:22-23) போன்ற கனிகளை எதிர்பார்கின்றார். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 7:18-20) என்று நம்மை எச்சரிக்கவும் செய்கின்றார். மரம் என்றைக்கும் தனது கனியை தானே சாப்பிடுவதில்லை. அதின் கனிகள் பிறருக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது. ஆவியின் கனி அன்பு என்றவுடன் நாம் அன்பாக இருந்து கிறிஸ்துவின் அன்பை சுவைப்பது அல்ல. கிறிஸ்துவின் அன்பபை பிறருக்கு சொல்ல வேண்டும். அதுபோலத்தான் ஒன்பது கனிகளையும் நாம் சுவைத்து இன்பமாய் வாழ்வதற்கு அல்ல. அதை கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கொடுத்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதர்க்கே.
ஒரு நிமிடம் நம்மை நாமே நிதானித்து பார்ப்போம். நாம் ஒருவேளை வேதத்தை மட்டும் வாசிப்பவர்களாக இருந்தால் விதையாகவே உள்ளோம். சபை ஆராதனைளும், மற்றும் சிறப்பு கூட்டங்களில் மட்டும் ஆவியில் நிறைபவர்களாக இருந்தால் நாம் செடியாக இருக்கின்றோம். அனுதினமும் வேதம் வாசித்து, எல்லா காவலோடும் இருதயத்தை காத்து, ஆவியில் நிறைந்து ஜெபித்தால் நாம் மரமாக உள்ளோம். அனுதினமும் வேதம் வாசித்து, ஆவியில் நிறைந்து ஜெபிப்பதோடு அல்லாமல் நாம் ருசித்த கிறிஸ்த்துவின் அன்பை பிறருக்கு சொல்லும் பொழுது நாம் நமது கனியை பிறருக்கு கொடுப்பவர்களாக உள்ளோம். இயேசு கிறிஸ்து *இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்க கடவன் என்றார். மறுநாள் காலையிலே சீஷர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள் (மாற்கு 11:13-20). அத்திமரம் யூதர்களின் அரசியல் மேன்மையை குறிகின்றது. நீங்கள் கனி கொடுக்கும் மரமாக வாழவில்லை என்றால் இயேசுவை அப்பா என்று கூப்பிடும் மேன்மையான இடத்தில் இருந்து தள்ளப்படுவீர்கள். நீங்கள் வேத வசனத்தை ஏற்றுக்கொண்டு கனிகொடுக்கும் பொழுது, கண்ணீரும் கவலையும் மாறி உங்கள் வாழ்க்கை செழிப்புள்ளதாக மாறும்...
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்

No comments: