‘தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை’ என்ற புகாருடன் ஒரு துறவியை தேடிப்போனார் இளைஞர் ஒருவர்.
“சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். இளைஞரும் துறவியைப் பின்தொடர்ந்து சென்றார்.
அப்போது வழியில் மரமொன்றை இறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்தம் மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்று அலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.
அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். ஆனால் துறவியோ மரத்தை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டார்.
குழப்பமடைந்த இளைஞர் துறவியிடம், “இது என்ன குழந்தைத்தனமாக அல்லவா இருக்கின்றது. மரத்தை நீங்கள் பிடித்துக்கொண்டு, மரம் என்னை விடமாட்டேன் என்கிறது என்று சொல்கிறீர்களே?” என்றார்.
“மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களை கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்” என்றார் துறவி.
அப்போதுதான் யார், எதைப் பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற உண்மை இளைஞருக்குத் தெளிவாக விளங்கியது.
பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒருவர் அல்லது பாவத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒருவர், தான் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராதவரை பாவத்திலிருந்து விடுபட முடியாது என்பது நிதர்சன உண்மை.
No comments:
Post a Comment