Friday, December 22, 2017

புதுவருடம் பிறந்துவிட்டது

ஐயோ இன்னும் மாடிவீடு கட்டவில்லையே எனக் கலங்காதே - சேரிகளில் வசிக்கும் சிறுவனின் முகத்தை பார்-
உழைக்கும் பணம் போதவில்லையென ஏங்காதே - தெருவோரம் பிச்சையெடுப்போரை நினைத்து திருப்தி கொள்-
முகப்பூச்சுகள் வாங்க முண்டியடிக்காதே! - ஆசிட் ஊற்றப்பட்ட எம் சோதரிகள் முகம் பார்த்து சிந்தை தெளி-
பணமிருக்கும் கர்வத்தில் உணவுகளை எறியாதே! - பசித்தவர்கள் முகங்களின் வலிகளை உற்றுக் கவனி-
ஆடைகளில் பொத்தானா..? தைத்துப்போடு - இன்றும் அம்மணமாய் திரியும் அடிமட்ட ஏழையாய் பிறக்கவில்லையென மகிழ்ந்துகொள் - எறிகிற ஆடைகளை எவர்க்கேனும் கொடுத்துவிடு-
பழிவாங்கிப் பழிவாங்கிப் பாவம் தேடாதே! -ஆணவத்தால் அழிந்தவரை அகம் நினைத்துக்கொள்-
கோபத்தை கோபித்து வாழப் பழகு! - தூக்கு மேடையை தொடாமல் பார்த்துக்கொள்-
அடுத்தவன் படுக்கையறையை எட்டிப் பார்க்காதே! - உன் வீட்டிலுள்ள ஓட்டைகளை முதலில் மூடு-
பெண்களின் அந்தரங்கத்தை பேரம்பேசாதே! - உன் வீட்டிலும் பெண்கள் உண்டு உள்ளம் தெளி-
அடுத்தவன் திறமைகளை திருடி வாழாதே! - உன்னுள்ளும் திறமை உண்டு தேடி கண்டு பிடி-
நோய் வந்த பின்பு ஞானம் கொள்ளாதே! -நோய் வருமுன்னரே காத்திடு உன்னை-
அடுத்தவன் மதங்களை அவமானம் செய்யாதே! - உன் மதத்திலுள்ள உண்மைகளை முதலில் படி-
தாய்,தந்தை, உறவுகளை மதிக்காதிராதே! - அனாதைகளின் அழுகுரலை அறிந்து நட-
எறும்பை ,புழுவை நசித்து மகிழாதே! -அவற்றிற்கும் வாழ்வுண்டு அதை நீ அறி-
நண்பனில் கோபமா விலகி நட! -ஒரு நாளும் நட்பிற்கு துரோகம் செய்யாதே-
அன்னைத் தமிழையும், தமிழின அடையாளத்தையும் மதித்து நட! - அகதியாய் வாழ்பவனின் அவல நிலை அறி-
புது வருடம் பிறந்துவிட்டது மகிழ்வதற்குத் தயாராகிறோமே...!!! முதலில் மனிதனாகிவிட்டோமா..? என மதிப்புரை செய்!
அனைவருக்கும் அனாதியனின் புதுவருட வாழ்த்துக்கள்!!
- அனாதியன்-

...

No comments: