Saturday, January 13, 2018

அக்கரையில் ஒருத்தி என்னைப் போலவே...!

கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்திருந்தது அந்த கிராமம்.எதிர் கரையை காண முடியாத அளவுக்கு எப்போதும் அகண்ட நீரோடும் பகுதி அது.

   பற்பல சமூகத்தினரும் ஒற்றுமையாக அவரவர் பண்பாட்டு நெறிகளை பேணி வாழும் அந்த ஊரில் கோவில் பூசாரியின் மனைவி அதிகாலை 4மணிக்கே எழுந்து தன் காலை கடன்களை முடித்து,ஆற்றில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் 5மணிக்குள், மற்றவர்கள் குளிக்க வருவதற்குள் தன் வீட்டுக்கு வந்து இறைவனுக்கு படைக்கும் அமுது சமைத்து 6மணிக்குள் தன் கணவரான பூசாரியிடம் கொடுத்து பூஜைக்கு அனுப்பி வைப்பது அவளது அன்றாடப் பணி.

    அவ்வாறு ஆளரவம் இல்லா அதிகாலை பொழுதில் இக்கரையில் இவள் துணி துவைத்து குளிக்கும் போது,எதிர் கரையிலும் இதே போல ஒரு பெண் அந்நேரத்தில் துவைத்து, குளிக்கும் சத்தம் கேட்கும்.

    பத்தினியாகிய இப்பெண்,"அக்கரையிலும் இங்குள்ளது போல ஒரு கோவில் இருக்கிறது போலும்.அதனால் தான் அப்பூசாரியின் மனைவியும் தினமும் என்னைப் போலவே சீக்கிரமாகவே இந்நேரம் குளித்து முடித்து,அமுது படைக்க கிளம்புகிறாள் போல.முடிந்தால் ஒருநாள் அங்கு சென்று அவளையும்,அக்கோவிலையும் வணங்கி வரவேண்டும்"...என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு...எதிர்கரையை நோக்கி கையெடுத்து கும்பிடுவாள்.

    ஆனால் விசயமே வேறு. எதிர்கரையில் குளித்துக் கொண்டிருப்பவள் ஒரு விபச்சாரி.அவள் ஒவ்வொரு இரவும் அந்த கிராமத்தில் எவர் விரும்புகிறாரோ அவருடன் தங்கியிருந்து விட்டு,அதிகாலையில் ஊர் மக்கள் கண்விழிக்கும் முன்னர்,யார் கண்ணிலும் படாமல் குளித்து முடித்து தன் வீட்டுக்கு சென்று ஓய்வெடுப்பாள்.

     அவள் குளிக்க வரும் சமயத்திலும் அதுபோலவே எதிர் கரையிலிருந்து இந்த பத்தினிப் பெண் குளிக்கும் சப்தம் கேட்கும். அதை கேட்டு அவளும்..."நம்மை போலவே அந்த ஊரிலும் ஒரு தாசி இருக்கிறாள் போல,அதனால் தான் ஊர் பெண்களின் கேலிப் பேச்சுக்கு பயந்து...நம்மை போலவே அதிகாலையில் சீக்கிரமாவே குளிக்க வருகிறாள்.

அவ்வூரிலிருந்து ஆண்கள் யாரும் நம்மிடம் வருவதில்லை. வந்தாலாவது விசாரிக்கலாம். முடிந்தால் ஒருநாள் அங்கு சென்று... அவள் நம்மை விட அழகானவளா என்று பார்த்து வரவேண்டும்"... என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வீடு திரும்பினாள்.

    நம்மைப் போலவே பிறரையும் நினைப்பது தான் நம் மனத்தின் வேலை.
    "செந்தமிழ் நாக்கிலும்,எழுத்திலும் தாண்டவம் ஆடும் வைரமுத்துவை போன்ற பிள்ளையை பெற்ற அவன் தாய் எவ்வளவு பெரிய உத்தமியாக இருந்திருந்தால்...இறைவன் இப்படிப்பட்ட பெரும் பேற்றை வழங்கி இருப்பான்?!"என்று இக்கரையில் நம் மனம் எண்ணுகிறது.

    ஆனால்...அக்கரையில் நிற்கும் கவிஞனுக்கோ...பெண் உருவில் தெய்வத்தையே பார்த்தாலும்...தாசி என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
  "...  குலத்தளவே ஆகுமாம் குணம்!"
   இரா.சாமிநாதன்,மதுரை.

CLICK HERE TO READ MORE GOOD STORIES

...

No comments: