Sunday, February 11, 2018

மனதில் மறைந்ததிருக்கும் காயங்கள்

Rev Sundaram
வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தேன். மனைவியை கூப்பிட்டேன். மனைவி என்னை விட 5 வயது இளமையானவள்.. அதனால் 49 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள். வந்து பக்கத்தில் நின்றவள் " கூப்பிட்டீங்களா ?" எனக்  கேட்டாள்.
ஆமா... ஆமா.. வா உட்காரு. உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு?
அவள் உட்கார அவள் கையை பற்றி ஏதோ பேச வந்தேன். அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தேன். முகம் சுருங்கியது. கண்கள் கலங்கின. 'சரளா, என்னது? கை பூரா வெட்டுக்காயமா இருக்கே? நகம் கூட வெடிச்சிருக்கே? ஒரே தழும்பா இருக்கு,  என்னது? நீ  திருமணம் செய்துவரும்போது எப்படி இருந்தாய் ?
அவள் மெல்லிய சிரிப்புடன் " நான் எதை என்னவென்று சொல்ல? 30 வருசத்தில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்? காய்கறி நறுக்கும்போது கத்தி கீறியிருக்கலாம்?  அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்? இப்படி எதேதோ நடந்திருக்கும்" என்றாள். மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது.
என்ன சொல்றே?  அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி?" என்று அதிர்ந்தேன்.
நீங்க என்னை வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனேன். கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு. அப்பதானே வந்தீங்க? அதான் சூடா இருந்தது என்றாள்.
" இது என்ன குழந்தையாட்டம், நீ என்கிட்ட சொல்லவே இல்லயே ?"
" நான் சொல்லலதாங்க? எந்த காயத்தையும் நா சொல்லலங்க. அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க?  பொறுப்பில்லையா? பார்த்து நடக்கமாட்டியா? " என.. என்றாள்
" என் கண்களில்  கூட படலயே இதெல்லாம்...  என்றேன்" வலி நிறைந்த குரலில்.
" என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும்?" என்றாள்.
" அப்படி நினைக்காதே. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன்? பசங்களப் படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினேன்.  உன்னயும் ஒரு குறையும் இல்லாம பார்த்துக்கிட்டேன். "  என்றேன்.
" உடல் காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது.  என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க.."
" பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன். "என்றேன்.
மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்தத் தெரிவதில்லை. அதற்கான நேரம் வரும்வரை.
இதே போல்தான் பெரும்பாலும் எல்லா பெண்களின் வாழ்வும். திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது.
எத்தனை கணவன்மார்கள் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்? மனம் விட்டு பேசுகிறார்கள்?
ஆண்களே, உங்கள் மனைவியின் கையைப்  பிடித்து பாருங்கள். எத்தனை கீறல்கள், காயங்கள் இருக்கும் என? இவை ஏன் வந்தது எனக் கேளுங்கள்.
*அவளின் மனக் காயம் வெளிவரும்.*

No comments: