Tuesday, March 6, 2018

ரிசர்வேசன் (எ) இட ஒதுக்கீடு : பாகம் -1

ரிசர்வேசனை நாம் உரிமையாக கேட்கிறோமா? வெட்கி போய் கேட்கிறோமா? ரயில்ல நம்ம சீட்டுல வேறொருத்தன் இருந்தா, ரிசர்வேசனை கெத்தா கேட்கிறப்ப ''நான் எஸ்.சி. எனக்கு இட ஒதுக்கீடு கொடு''ன்னு கேட்க வெட்கமா இருக்கு. ஏன்? யாராச்சும் நீ யார்? என்று கேட்டா ''நான் முதலியாரு, செட்டியாரு''ன்னு சொல்லிக்கிறோம். அவன் ஒரு வேளை பூஜை பண்ணினா நாம மூணு வேளை பூஜை பண்றோம். கொஞ்சம் பைசா சேர்ந்தா, வீட்டிலேயே பூஜையறை கட்டிக்கிறோம். ''அசைவம் சாப்பிடுறது இல்ல, சைவம்தான்''னு சொல்றதும், ''உங்க ஏரியா எங்கே?'' என்றால் ''பஸ்ஸ்டாண்டு பக்கம், அந்த அவென்யு, இந்த பாக்கம்''ன்னு கதை விடுறோம். ரிசர்வேசன்ல உள்ள லாபம் எல்லாம் எனக்கு வேணும். வேலை, புரமோசன் எல்லாமே வேணும். ஆனா நான் எஸ்.சின்னு சொல்றதுல நமக்கு தயக்கம் இருக்கு. ரயில்ல ரிசர்வேசனை கேட்கிற கெத்து, ''வேலை''ன்னு வந்தா ஏன் வரமாட்டேன்கிறது? என்ன காரணம்?
இட ஒதுக்கீடு என்று கேட்டு போறப்ப என்ன சொல்றோம்? '''நான் தாழ்த்தபட்டவன், அதனால்தான் எனக்கு வேலை'' இதை சொல்லும்போது நமக்கு கெத்து வருதா? தாழ்வு மனபான்மைதான் வருது. ரயில்ல நம்ம சீட்டை கேட்கிறப்ப வருகிற கெத்து, இங்கே எப்படியாகுதுன்னா, 'மத்தவங்க கூட போட்டி போட முடியாததால, மத்தவங்க மாதிரி படிச்சி நல்ல மார்க் எடுக்க முடியாததால, மத்தவங்க 60 மார்க்ன்னா எனக்கு 50. (அவனுக்கு மூளையிருக்கு, எனக்கு இல்லை) கட்டணம் மத்தவங்களுக்கு 250ன்னா, எனக்கு 50. (அவங்ககிட்ட துட்டு இருக்கு, எனக்கு இல்லை) மத்தவங்க 28 வயசில சாதிக்கிறதை, என்னால் 35 வயசுலதான் முடியும்'' என்ற எண்ணத்தால்தான் இட ஒதுக்கீடு என்பது நமக்கு போட்டிருக்கிற பிச்சை என்று நினைக்கிறோம். பிச்சை கேட்கிறவன் என்னைக்காவது கெத்தா கேட்க முடியுமா? கவர்ன்மென்ட் மத்தவங்களுக்கு கொடுத்தா வேலை, எனக்கு கொடுத்தா அது பிச்சை என்றுதான் நாம் புரிந்திருக்கிறோம். நம்மளை சுத்தியிருக்கிறவங்களும் அதையே சொல்றாங்க. ''உங்களுக்கென்னப்பா சலுகை இருக்கு, கோட்டா இருக்கு, பீஸ் கிடையாது, வயசு இருக்கு'' இதை கேட்கிற நாம் கடைசியா எப்படி புரிஞ்சுக்கிறோம் என்றால் நான் அடிமை என்பதால், தாழ்த்தப்பட்டவன் என்பதால், அடுத்தவங்க கூட போட்டியிட முடியாததாலதான் எனக்கு ரிசர்வேசன் என் எண்ணுகிறோம்.
வேலைக்குதான் ரிசர்வேசன் கொடுக்கிறானே தவிர, கொஸ்டின் பேப்பருக்கில்லை. அவனுக்கொன்னு, நமக்கொன்னு இல்லை. அவன் படிக்கிற பி.காம்., பி.எஸ்ஸிதான் நாமளும் படிக்கிறோம். அவனுக்கு என்ன வேலையோ, அதையே நாம் செய்கிறோம், அவனுக்குள்ள சம்பளம்தான் நமக்கும். ஆனா குறைஞ்ச மார்க் நமக்கு, நிறைய மார்க் அவனுக்கு. ஏன் இந்த முரண்பாடு என்பதை அவன் கண் வழியேதான் பார்க்கிறோமே தவிர, நம்ம கண் வழியே இல்லை. நம்ம நிலைமை என்ன? நம் வரலாறு என்ன என்பதை நம்ம கண்ணுல நாம் பார்த்ததே இல்லை இங்கதான் விஷயமே இருக்கு. இங்கேதான் பிரச்சனையே. நாம தாழ்த்தபட்டவங்கன்னால இட ஒதுக்கீடு கொடுத்தா, அரசியல் அமைப்பு சட்டத்துல அதை எழுதியிருக்கணும். ''தாழ்த்தபட்ட, ஏழை, புத்தியில்லாத சமூகம்''ன்னு போட்டிருக்கணும். ஆனா அப்படி போடலை. அதுல என்ன போட்டிருக்கின்னு தெரியுமா?
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளில், ஷரத்து 16(4)ல்தான் நம்ம உரிமையே இருக்கிறது. அதாவது அரசாங்க வேலைகளில் எல்லோருக்கும் சம பங்கு, சம உரிமை என்று இருக்கிறது. சரி, சமூகத்தில் எல்லோரும் சமமாய் இருக்கிறார்களா? உதாரணமா, ஒன்று முதல் பத்து வரை உள்ள பள்ளிக்கு ஸ்போர்ட்ஸ் டே வருகிறது. வாத்தியார் ''எல்லோரையும் நான் ஒன்றுபோல் பார்க்கிறேன். 200மீ. ஓட்டபந்தயத்தில் ஒன்று முதல் பத்து வகுப்பையும் ஒரே நேர்கொட்டில் நிற்க வைக்க போகிறேன்'' என்றால் யார் ஜெயிப்பார்கள்? நிச்சயமாய் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். எல்லோருக்கும் சம வாய்ப்புதான். ஆனாலும் பத்தாம் வகுப்புதான் ஜெயிக்கும். ஏன்னா அவன் பெரியவன், இவன் சிறியவன். சமூகத்தில் எல்லாரும் சமம் கிடையாது. தனித்தனி வகுப்பாய் பிரித்தால், அதுதான் இங்கு சமம். சமுகம் ஏற்ற தாழ்வுள்ள, சமத்துவமில்லாமல் உள்ளது. இப்ப எவன் செட்யூல்டு சாதியாய் இருக்கானோ, அவனுக்கு 3000 சாதிங்க. செட்யூல்டு டிரைப் 1000, பிற்படுத்தபட்டோர் 3743 ஆக மொத்தம் ஆறாயிரத்திற்கும் மேலே சாதிங்க ஏற்றதாழ்வா இருந்தது. அதாவது 3 சதவீத பார்ப்பானுங்க மட்டும் படிக்கிறவங்களாவும், மற்றவங்க படிக்ககூடாதுன்னு 2000 வருடமா ஒரு சட்டம் இருந்தது. ஏன் அப்படிப்பட்ட நிலைமைனா, இந்திய சமூகத்துல கடவுளால் உருவாக்கபட்ட ஒரு சமுதாய ஏற்றதாழ்வு இருந்துச்சி.

No comments: