Friday, July 6, 2018

பாவத்தின் சம்பளம் மரணம்...

“பாவத்தின் சம்பளம் மரணம்.” – ரோமர் 6:23
இரண்டு வாலிபர்கள் கரைபுரண்டோடும் ஆற்றில் மிதந்து வரும் பொருட்களை சேகரிப்பதை தங்கள் பொழுதுபோக்காக கொண்டிருந்தனர்.  ஒருநாள் ஏதோ ஒன்று ஆற்றில் மிதந்து வருவதைப் பார்த்தனர்.  ஒருவன் அதை நோக்கி நீந்திச்  சென்று கறுப்பு கம்பளியைப்போல இருந்த அப்பொருளை பிடித்துக் கொண்டான்.  அதை பிடித்த மாத்திரத்தில் அவன் அமிழத்தொடங்கினான்.  கரையிலிருந்தவன், “அதை விட்டுவிடு” என சத்தமிட்டான்.  அமிழ்ந்து கொண்டிருந்தவனோ “நான் அதை விட்டுவிட்டேன், அது என்னை விடவில்லையே” என கதறி அழுதான்.  சில வினாடிகளிலே அவன் மறைந்து போனான். அந்த கம்பளியைப் போல காட்சியளித்தது தண்ணீரில் நீந்தி கொண்டு போவதைக் கண்டு, கரையிலிருந்தவன் அதிர்ச்சி அடைந்தான்.  ஏனெனில் அது ஒரு பெரிய கறுப்பு கரடியாக இருந்தது.  ஆம், பாவமும் இந்த கரடியைப் போன்றதுதான்.  ஆரம்பத்தில் தீங்கற்றதைப் போல தோற்றமளிக்கும்.  பின் அதன் கொடூரத்தைக் கண்டு நாம் அதை விட்டுவிட எண்ணினாலும், அது நம்மை விடாது.  ஆகவே பாவத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருப்போம்.
வேதத்திலே, சாலமோன் ராஜாவின் ஆரம்பம் அமர்க்களமாயிருந்தது.  தேவனிடம் ஞானத்தைக் கேட்டு அவருடைய இருதயத்தைப் பிரியப்படுத்தினான்.  ஆனால் அவனுடைய முடிவு அப்படியல்ல.  அநேக அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசைவைத்து அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.  அந்த ஸ்திரீகள் சாலமோனுடைய இருதயத்தை தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.  இறுதியில் மனைவிகளை பிரியப்படுத்துவதற்காக, அந்நிய தெய்வங்களுக்கு பலிபீடங்களையும் மேடைகளையும் கட்டினான்.  அந்நிய  பெண்களுடைய கவர்ச்சியில் விழுந்து தன்னை விற்றுப் போட்டுவிட்டான்.  அடுத்து அவன் விக்கிரக ஆராதனையிலிருந்து விலக விரும்பினால் கூட வெளிவர முடியாத அளவுக்கு அவர்கள் அவனை மேற்கொண்டனர்.  எபிரேயர் 11ம் அதிகாரத்திலுள்ள விசுவாசிகளின் பட்டியலில் சிம்சோனும் இடம்பெற்றுவிட்டான்.  அந்தோ பரிதாபம் சாலமோன் பெயர் காணப்படவில்லையே!
எனக்கருமையான வாலிப தம்பி, தங்கையே! பாவம் காந்தத்தைப் போல உன்னை வெகு சுலபமாக கவர்ந்திழுக்கக் கூடியது.  கிறிஸ்தவ வாலிபர்களும், இதற்கு விதிவிலக்கல்ல, புகைபிடித்தல், மது அருந்துதல், இணையதளம், சமூக வலைதளங்கள் போன்றவை ஆரம்பத்தில் தீங்கற்றவை போலவும் விரும்பத்தக்கவை போலவும் காணப்படும்.  இறுதியில் நம் ஆவி ஆத்துமா சரீரத்தைக் கொன்று போடும்.  ஆம், பாவத்திற்கு எச்சரிக்கையாயிரு, பாவமுள்ள இடங்களை விட்டும், கெட்ட நண்பர்களை விட்டும் விலகியிரு.  துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே, தீயோருடைய வழியில் நடவாதே, அதை வெறுத்துவிடு.  அதின் வழியாய் போகாதே, அதை விட்டு விலகிக் கடந்து போ. (நீதி.4:14,15) அப்போது ஜீவகிரீடத்தைப் பெற்றுக் கொள்வாய்.
- Mrs.சரோஜா மோகன்தாஸ்
இன்றைய பஞ்ச்:
அசுத்தம் லேசாக வரும்; சீக்கிரமாக போகாது.
பரிசுத்தம் லேட்டா வரும்; சீக்கிரத்தில் இழந்துவிடக்கூடும்.
ஜெபக்குறிப்பு:
வாலிபர் முகாமிற்கு தேவையான பந்தல் மற்றும் மேடை காரியங்கள் நேர்த்தியாய் அமைய ஜெபியுங்கள்.
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 9487367663, +91 9442493250
Website: www.vmm.org.in
Whats app: +91 94440 11864

No comments: