Sunday, September 23, 2018

வங்கிகள் இணைப்பு யாருடைய நலனுக்காக?

பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனாவங்கி மூன்றும் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கித்துறையில் அடுத்தடுத்து தொடுக்கப்பட இருக்கும் கடுமையான தாக்குதல்களுக்கான அதிர்ச்சி முதலடி ஆகும். ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கியோடு துணை வங்கிகளை இணைத்தது முன்னோட்டம் என்றாலும், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது என்ற பெரிய அளவிலான நடவடிக்கை என்பது நிதித்துறை சீர்திருத்தங்களில் முக்கியமானது ஆகும். திட்டமிட்ட வகையில் சந்தைப் பொருளாதாரக் கொள்கை திட்டங்களை சந்தடியின்றி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், தக்க தருணத்திற்காகக் காத்திருந்தனர். 2019 தேர்தலை நோக்கும் நேரத்தில் வேறு எந்தஅரசும் சிந்திக்கத் தயங்கும் ஒரு மிகப்பெரிய விஷயத்தைஇப்போதைய கொள்கை வகுப்பாளர்கள் அறிவிக்கத் துணிவது மூன்று அம்சங்களை உடனடியாக உணர்த்துகின்றன: ஒன்று, உலக நிதி மூலதனத்தின் தொடர் நிர்பந்தங்கள்தான் இத்தகைய பெரிய சீர்திருத்தங்களைத் தூண்ட முடியும். இரண்டாவது, ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் தேச பொருளாதாரத்திலும், மக்கள் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தியுள்ளஅதிர்ச்சி விளைவுகளின் பிரதிபலிப்புகள் அடங்குமுன்பே இப்படியான விஷயத்தை அரசு எடுத்துக் கொள்வது ஒன்றின் விளைவை அடுத்ததன் மூலம் அழித்துஎழுதும் சாகசத்தின் ஆபத்தான அரசியலை உணர்த்துகிறது. மூன்றாவது, எதிர்காலத்தில் இப்படியான அரசியல் மேலும் என்னென்ன செய்வதற்கான சாத்தியங்கள் உண்டு என்ற அபாய அறிவிப்பாகவும் இந்த வங்கிகள் இணைப்பு அறிவிப்பு வந்து சேர்ந்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்கும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்போன்றோரே, வங்கித்துறை இப்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு “வங்கிகள் இணைப்பு”எந்தப் பெரிய தீர்வையும் தந்துவிடாது என்று சொல்வதையும் ஆட்சியாளர்கள் கணக்கில் கொள்ளவில்லை. அப்படியானால், வங்கித்துறை நெருக்கடிகளுக்கான உண்மையான காரணங்களை மக்கள் மன்றத்தில் ஒப்புக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாரில்லை என்றுபொருள். பெருமளவு வராக்கடன்களுக்குப் பொறுப்பானபெருந்தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதில் ஆளும்வர்க்கத்திற்குள்ள பாசத்தைத் தொழிலாளி வர்க்கம் காணத் தவறக்கூடாது. யாரோ செய்யும் அராஜகத்திற்கு எங்கோ பழிபோட்டு எதையோ தீர்வாகத் தீர்ப்பெழுதி நிலைமைகளை மேலும் மோசமாக்கத் துடிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் வங்கிகள் இணைப்பு.
நிதி மூலதனம் தன்னை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டே செல்லும் வெறித்தனத்தில் எத்தனை நாடுகளின் பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றது என்பதை கடந்த நூற்றாண்டின் இறுதியில் தென் கிழக்குஆசிய நிலப்பரப்பில் பார்த்தோம். இரவோடிரவாக தங்கள் மூலதனத்தை எடுத்துக் கொண்டு ஓட்டமெடுத்தஅந்நிய மூலதனம், இந்தோனேசியாவில்-தாய்லாந்து நாட்டில், தென் கொரியாவில் ஏற்படுத்திய அதிர்வுகள்அண்மைக்கால வரலாறுகள். ஒரு பாப்கார்ன் பொட்டலத்தைக் கூட மூவாயிரம் ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத கோபாவேசத்தில் சூப்பர் மார்க்கெட்கள் அடித்து நொறுக்கப்பட்ட சோகக் கதை அது. அப்படியும் திருந்தாத சந்தை வெறியர்கள், பின்னர் ஐரோப்பாவில் - ஏன், அமெரிக்காவிலேயே 2008ல் அறுவடை செய்த பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தியபேரழிவின் விளைவுகள் இன்னும் அடங்கவில்லை. கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் தலையில்தான் அந்தச் சுமையும் கொண்டு இறக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகள் மீது அந்தப் பாவத்தின் சம்பளம் பகிர்ந்து தரப்பட்டது. இந்தியா போன்ற பெரிய தேசம், சிக்கலான பொருளாதாரம் எப்படி தாக்குப் பிடிக்க முடிந்தது என்றகேள்விக்கு, நிதித்துறை அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்ததும், பொதுத்துறை வலுவாக இருந்ததும்தான் முக்கிய காரணம் என்ற விடையை அரசியல் பொருளாதார நோக்கர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பாடத்தை ஆட்சியாளர்கள் கற்கமறுப்பது மட்டுமல்ல, அதை மாற்றி எழுதவே துடிக்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை ஏன் அன்றாடம் உயர்கிறது, அதற்கான பொறுப்பில் இருந்து அரசு எப்படி தப்பிக்கத்துடிக்கிறது, சந்தையின் பலிபீடம் எத்தனை ஈவிரக்கமற்றது என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுக்கும் ஆட்சியாளர்கள், தங்களது அறிவிப்பை மதித்துத் தங்களை வருத்தித் துன்புறுத்திக் கொண்டு வரிசையில் நின்றும், வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்தும், ஏன், அநாவசியமாக உயிரையே இழக்கவும் தயாரான மக்கள் மீது எத்தனை மரியாதை கொண்டுள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும். அது பணமதிப்பு நீக்கம் மட்டுமல்ல, மனித மதிப்பு நீக்கநடவடிக்கையாகவும் விடிந்தது. 11 வங்கிகளை முதலில் பட்டியலிட்ட அரசு, பின்னர்தேனா வங்கியைத் தனியே கட்டம் கட்டியது. கடந்த மே மாதத்தில், இனி தேனா வங்கி புதிய கடன்கள் எதையும்வழங்கத் தடை விதிக்கப்பட்டது. பணி நியமனங்களுக்கும்தடை. கிளை மூடலுக்கான நிர்பந்தம். ஏதோ ஒரு வங்கியின் பிரச்சனை என்று அதை மற்ற வங்கிகளின் பணியாளர்கள் பார்க்கட்டும், அதற்குள் மற்ற வங்கிகளின் கதைகளை முடிக்கலாம் என முனைந்துள்ளனர் ஆட்சியாளர்கள். வங்கித்துறை பொதுத்துறையில் கொண்டுவரப்பட்ட பொன்விழாவை அரசும் சரி, வங்கி நிர்வாகங்களும் சரி கொஞ்சமும் மதிக்கவில்லை, கண்டுகொள்ளவே இல்லை என்பதை வங்கி பணியாளர்கள் முதலில் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பரவலான மக்களிடம் அதை விவாதத்தில் கொண்டு சேர்க்கவேண்டும். பொதுத்துறை பாதுகாப்பு என்பது மக்கள் சேமிப்பின் பாதுகாப்பு, சாதாரண மக்கள் வாழ்வாதாரத்திற்கான சேவைகளின் பாதுகாப்பு என்பதை அழுத்தமாக அவர்கள்உள்ளத்தில் பதிய வைக்கவேண்டும். கட்டணங்களை உயர்த்துவதன் மூலமும், கணக்கில் குறைந்தபட்ச தொகை இராது போனால் விதிக்கும் தண்டனைத் தொகை மூலமும் மக்களை வெறுக்க வைப்பது, தனியாரும் அரசு வங்கிகளும் ஒன்றுதான் என்று நினைக்க வைப்பது, தனியார் வங்கிகளே பரவாயில்லை என்று பேச வைப்பது, சேமிப்பே வேண்டாம் - ஒன்று செலவழி அல்லது சந்தையில் முதலீடு செய் என்று தூண்டுவது-
இவை எதுவும் தற்செயலானவை அல்ல என்பதை விஷயமறிந்த நடுத்தர ஊழியர்களே மக்களிடம் பேச முடியும். மூன்று வங்கிகள் இணைப்பு என்பது வெறும் கணக்குகளின் கூட்டல் கழித்தல் அல்ல, ஒவ்வொரு வங்கிக்கும் அதனதன் தனித்தனி வரலாறு, பாரம்பரியத் தொடர்ச்சி, அடிப்படை அம்சங்கள், ஊழியர் கலாச்சார அடையாளம் என்று உண்டு. வாடிக்கையாளர்கள் உளவியலில் ஏற்படுத்தப்படும் அதிர்ச்சி விவரிப்புக்கு அப்பாற்பட்டது. மிக சாதாரணமாக எல்லாவற்றையும் ஒன்றிணைப்பேன் என்பது ஒரு வன்முறை அரசியல். அதற்கானதேவை என்ன, உண்மையான காரணம் என்ன என்பதை ஒரு ஜனநாயக நாட்டில் வெகுமக்கள் கருத்தைக் கேளாமல், விவாதிக்காமல், சாதக பாதகங்களை ஆராயாமல் அறிவிப்பதும், நிறைவேற்றத்துடிப்பதும் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. வங்கிகள் இணைப்பு வலுவாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. 150 ஆண்டு பழமையும் பெரிதுமான லேமன் பிரதர்ஸ் நிறுவனமே கவிழ்ந்ததும், அமெரிக்கன் இன்சூரன்ஸ் குரூப்பிங் நிறுவனத்தை அரசுதான் தலையிட்டு காப்பாற்ற வேண்டி வந்தது என்பதும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டிய காலமாகும். இப்போது வாளாவிருந்து விட்டால் பின் ஒருபோதும் மக்கள் விரோத சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட எதுவும் மிஞ்சி இருக்காது என்ற உணர்வோடு போராடுவோம். தீர்மானமாக எதிர்ப்போம். மக்கள் கருத்தொற்றுமையை உருவாக்குவோம். நம்பிக்கையோடு களமிறங்குவோம்.
- தீக்கதிரில், எஸ்.வி.வேணுகோபால் -

No comments: