கோடைக்காலத்து உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. காட்டு வழியே செல்கிறான் ஒரு மனிதன்.
தாகம் தொண்டையை வறட்டுகிறது.
பசி வயிற்றை இழுத்துப் பிடித்து மேலே நடக்க விடாமல் தடுக்கிறது. கால்கள் தள்ளாடுகின்றன, கண்கள் பஞ்சடைகின்றன.
அந்த மனிதன் ஒரு மரத்தின் நிழலில்
வந்து படுக்கிறான். குளுகுளு வென காற்று வீசுகிறது. வெயிலில் அல்லல்பட்டு வந்த எனக்கு குளிர்ச்சியான நிழல் கிடைத்தது,
இப்படியே கொஞ்சம் குளிர்ந்த நீரும் கிடைத்தால் தாகம் தணித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் அவன்.
அவன் முன்னால் ஒரு மண்ஜாடியில் குளிர்ந்த நீர் தோன்றியது. ஆச்சரியம் தாங்க முடியவில்லை அவனுக்கு, உடனே அந்த தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்தான். பிறகு சுற்று முற்றும் பார்த்தான் யாருமே இல்லை. தாகம் தீர்ந்து விட்டது.
பசி எடுக்கிறதே, சுவையான பலகாரங்கள் கிடைத்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்தான். உடனே அவன் எதிரே சுவையான சூடான பலகாரங்கள் பல தட்டுக்களில் தோன்றின.
மகிழ்ச்சியின் எல்லையில் மிதந்த அவன் தன் பசி அடங்கும் வரையில் அந்த பலகாரங்களை வயிறு புடைக்க சாப்பிட்டான்.
இப்படியாக அவன் தனக்குத் தேவையான கட்டில் , பஞ்சு மெத்தை, ஆகியவற்றை மனதில் நினைத்த மாத்திரத்தில் பெற்றுவிட்டான்.
இதற்கு காரணம் அவன் தங்கியிருந்தது நினைத்ததை கொடுக்க வல்ல கற்பக மரத்தின் நிழலில்.
இப்போது அந்த மனிதனுக்கு பயம் வந்து விட்டது, இது என்ன? மந்திர மாயமாக இருக்கிறேதே. நான் கேட்டது அத்தனையும் கிடைத்து விட்டதே, இந்தக் காட்டில் ஒரு புலி வந்து என்னை அடித்து விடுமோ என்று பயந்தான்.
அவ்வளவு தான் அடுத்த நொடியில் அவன் முன்னால் ஒரு வேங்கைப்புலி தோன்றியது. கண் இமைக்கும் நேரத்தில் உறுமிக் கொண்டே அவன் மீது பாய்ந்து அடித்துக் கொன்றது.
இந்தக் கதையின் மூலமாக நாம் அறிவது என்ன?
கற்பக மரம் என்று குறிக்கப்படுவது ஒரு மனிதனின் மனம் தான். மனதிற்கு மனிதன் விரும்புகின்றவற்றை கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது. நாம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்.
எனவே எப்போதும் நல்ல எண்ணங்களையே உங்கள் மனதில் வளர விடுங்கள். நீங்கள் வாழ்வில் உயர்வது நிச்சயம். எந்த ஒரு விஷயத்தையும் நல்லதாகப் பார்த்தால் நன்மை வரும். தீயதாகப் பார்த்தால் தீமை ஏற்படும்.
வெற்றி நோக்கத்தோடு ஒரு செயலை அணுகினால் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
No comments:
Post a Comment