Monday, October 29, 2018

கல்வேரியா மரமும் டோடோ பறவையும்...

கல்வேரியா மரமும் டோடோ பறவையும் - உயிர்ச்சுழலின் அவசியம்

இந்திய பெருங்கடலில் உள்ள தீவான மொரீசியசில் காணப்படும் அரியவகை மரம் தான் கல்வேரியா’(Calvaria major).

1973 ஆம் ஆண்டு கணக்குப்படி, மொரீஷியஸில் 13 கல்வேரியா மேஜர் மரங்கள் மட்டும்தான் மிச்சமிருந்தன. இந்த மரங்களோ, முன்னூறு ஆண்டுகளுக்கும் அதிகமான வயதுடையவை.

இந்த மரங்களை அழிவிலிருந்து காக்க எவ்வளவோ முயன்றும் ஒரு விதையை கூட முளைக்க வைக்க இயலவில்லை. ஏன் விதைகள் முளைக்கவில்லை என்ற காரணத்தை ஆராய்ந்த போதுதான் இயற்கையின் உயிர்ச்சூழலியல் புரிய வந்தது.

இந்த மரத்தின் பழங்களை டோடோ எனும் ஒரு வகை பறவை உண்ண வேண்டும் . கல்வேரியா பழங்கள் மிகவும் கடினமாக இருக்கும். அவை, டோடோ பறவையின் உணவாக அதன் வயிற்றுக்குள் செல்லும்போது, அவற்றின் கடினமான மேல் ஓடு மென்மையாகிறது. டோடோவின் செரிமான நீரால் மென்மையாக்கப்பட்ட விதைகள் கழிவாக வெளியேறும் போது மட்டுமே மண்ணில் முளைக்கும்.

டோடோ பறவை அழிந்தபிறகு இந்த செயல்பாடுகளெல்லாம் இல்லாமல்போயின. எனவே கல்வேரியா மேஜர் மரமும் அழிந்துபோனது.

இந்த டோடோ பறவை எப்படி அழிந்தது தெரியுமா? மனிதனின் பேராசையின் காரணமாக அழிந்துபோன உயிரினங்களில் ஒன்றுதான் டோடோ.

இது புறா இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பறவைகளால் பறக்க முடியாது. ஒரு பறவையின் எடை, 12 லிருந்து 24 கிலோகிராம் வரை இருக்கும். இந்த பறவை மனிதர்களை கண்டு பயந்து ஓடாது.

1507ல் மொரீஷியஸ் தீவில் கப்பலிறங்கிய போர்ச்சுக்கீசிய மாலுமிகள் இப்பறவையை அதிகளவில் வேட்டையாடினார் . 1790 – 1800களில், அதாவது கண்டுபிடிக்கப்பட்டு 300 வருடங்களுக்குள்ளேயே டோடோ பறவைகள் அழிந்துபோயின.

இயற்கையை எந்த இடத்தில் சிதைத்தாலும் அதற்கான வினையை அனுபவித்தே தீர வேண்டும்.

ஒற்றை பறவை அழிந்ததால் ஒரு வகை மரமே இல்லாமல் போனது வரலாறு...

No comments: