Saturday, October 20, 2018

நோய்களைப் போக்கும் உணவுகள்

*''நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும்'' என்கிறார் சித்தமருத்துவர் சிவராமன், நோய்களுக்கேற்ற உணவுமுறைகளையும் விளக்குகிறார்.*

   *வாதம்/பித்தம்/கபம்*

*வாதம்:

ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள்.  இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும்.*

*சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.*

*தவிர்க்கவேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள்.*

*பித்தம்:*

*பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும்.  அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு*

*சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது.  கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும்.  இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம்.*

*தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது.  கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது.*

*கபம்:*

*சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம்.*

*சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும்.  கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்... விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது.*

*தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட்*

*சளி / இருமல்:*

*ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும்.  இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம்.*

*சேர்க்கவேண்டியவை:  இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம்.  இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும்.  மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.*

*தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.*

*பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால்,  தவிர்க்கவும்.  எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது.  இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.*

No comments: