Thursday, October 11, 2018

அறிவோம்... தெளிவோம்... : எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்கிற ஆராய்ச்சி இன்று வரை ஓய்ந்தபாடாக இல்லை. இத்தனைக்கும் இடையில் ஆரோக்கியத்துக்கு நான்தான் அத்தாரிட்டி என அமைதியாக ஊடுருவி வருகிறது ஆலிவ் ஆயில். இதயத்துக்கு நல்லது என்கிற உத்தரவாதத்துடன் விளம்பரப்படுத்தப்படுகிற ஆலிவ் ஆயில் உண்மையிலேயே ஆரோக்கியமானதுதானா? விளக்கம் அளிக்கிறார் இதய நோய் நிபுணர் சுபாஷ் ராவ்...

``ஆலிவ் எண்ணெய் உடல்நலத்துக்கு மிகவும் ஏற்றதுதான். இந்த எண்ணெயில் ஆரோக்கியத்துக்கு துணைபுரிகிற ஒலிக் ஆசிட்(Olic Acid) 55 சதவிகிதம் முதல் 83 சதவிகிதமும், லினோலிக் ஆசிட் (Linoleic Acid) 3.5 சதவிகி தத்திலிருந்து 21 சதவிகிதமும், பால்மிட்டிக் ஆசிட்(Palmitic Acid) 7.5 சதவிகிதம் முதல் 20 சதவிகிதமும், ஸ்டெரிக் ஆசிட் (Stearic Acid) 0.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரையும் லினோலெனிக் ஆசிட்(Linolenic Acid) 1.5 சதவிகிதமும் உள்ளன. இவை தவிர, ஸ்குவாலின் (Squalene) 0.7 சதவிகிதம், பைடோசிரால்ஸ் மற்றும் டோகோசிரால்ஸ் 0.2 சதவிகிதமும் காணப்படுகின்றன. 

தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு இந்த எண்ணெயை நெய்க்குப் பதிலாக அனைவரும் சாப்பிட்டு வரலாம். ஆலிவ் ஆயில்  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆரோக்கியத்தை எந்த வகையிலும் பாதிக்காத ஹெச்.டி.எல். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் உணவில் உள்ள கலோரியின் அளவை அதிகரிக்காமல் இதய நோயைக் கட்டுப்படுத்துகிறது. ஆலிவ் ஆயில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு வகை பொருட்களைக் கரைக்கிறது.

ஆலிவ் ஆயில் சருமம் மற்றும் கூந்தல் தொடர்பான பிரச்னைகளையும் சரி செய்கிறது. குறிப்பாக, சோரியாசிஸ், முகப்பரு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. பொடுகை அகற்றவும் பயன்படுகிறது. ஆயில் மசாஜ் செய்வதற்கும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயிலை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். பீட்சா, பர்கர், எண்ணெயில் பொரிக்கப்பட்ட கோழி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதை பலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். 

அப்படிப்பட்ட நபர்கள் ஆலிவ் ஆயில் சாப்பிடுவதால் எந்தவித பயனும் கிடைக்காது. இந்த எண்ணெயைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 
ஆலிவ் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்துபவர்களின் பருமன் அதிகரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அது  பாதிப்பு ஏற்படுத்தாது. இந்த எண்ணெய் சூட்டு தன்மை கொண்டது. 

அதனால், இதை வெப்பப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி உள்பட பல நாட்டு மக்கள் காய்கறி மற்றும் பழங்களில் சாலட் செய்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதைப் போலவே, நாமும் பயன்படுத்தலாம். இதய ஆரோக்கியம் மேம்படும்!’’  ஆலிவ் ஆயிலின் ஆரோக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சித்ரா மகேஷ்...

``இப்போது சமையலுக்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய்க்கு பதிலாக, ஆலிவ் ஆயில் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது.  இந்த எண்ணெயில் Extra Virgin Olive Oil, Virgin Oil, Redefined Virgin Olive Oil, Olive Pomace Oil என 4 வகைகள் இருக்கின்றன. முதல் வகையான Extra Virgin Oil கலப்படம் இல்லாதது. இதில் நறுமணம் மிக அதிகமாக இருக்கும். இரண்டாவது வகை ஆலிவ் ஆயிலில் மணம் குறைவாக காணப்படும். மூன்றாவது வகையான சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் ஆயிலில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு இருக்கும்.

ஆலிவ் கூழில் இருந்து Olive Pomace Oil தயாரிக்கப்படுகிறது. Extra Virgin Olive Oil காய்கறிகள் மற்றும் பழங்களில் சாலட் செய்ய பயன்படுத்தலாம். இதனுடைய புகை வெளிப்படும் நிலை (Smoking Point) 160 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். கிழங்கு வகைகள், அப்பளம் போன்றவற்றை வறுப்பதற்கு Olive Pomace Oil உபயோகிக்கலாம். 

இந்த எண்ணெயின் புகை வெளிப்படும் நிலை 238 டிகிரி செல்சியஸ்.  ஆலிவ் எண்ணெயின் செரிமான சக்தி இதர எண்ணெய்களைப் போலவே இருக்கும். இந்த எண்ணெயில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் 70 சதவிகிதம் இருக்கும். இது இதயத்துக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் இ, வைட்டமின் கே, இரும்புச்சத்து ஆகியவை  உள்ளன.

மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமானது, எல்.டி.எல். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் ஆலிவ் ஆயிலில் செய்த உணவுகளை சாப்பிடலாம். கலப்படம் இல்லாமல் அதிக நறுமணத்துடன் உள்ள Extra Virgin Olive Oilஐ வயதானவர்களும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு 14 சதவிகிதம் இருக்கும். அதனால் கொழுப்பு அதிகரிக்காது.

ஆலிவ் ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வீக்கம் (Inflammation) காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம்.  முக்கியமாக, சர்க்கரை நோய், வலியுடன் கூடிய மூட்டு வீக்கம், இதய நோய், வயதானவர்களுக்கு ஏற்படுகின்ற ஞாபக மறதி போன்றவற்றுக்கு (Non-Communicable Diseases) ஆலிவ் எண்ணெய்  உகந்தது. மேலும், கூந்தல், மேனி பராமரிப்புக்கும் இது உதவுகிறது. இந்த எண்ணெய் வாய் கொப்புளிப்பதற்கும் உகந்தது.  ஆலிவ் எண்ணெய் உடலுக்கு பல நன்மைகள் தருகிறது என்றாலும், அதை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைக்கக் கூடாது. 

நாம் சாப்பிடும் உணவில் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்து சரிவிகித அளவில் இருக்க வேண்டும். உடலில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு 30 சதவிகித கலோரியானது, கொழுப்பில் இருந்து வரலாம். அதில், சாச்சுரேட்டட் கொழுப்பு 7 முதல் 10 சதவிகிதமும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 10 சதவிகிதமும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு 10 சதவிகிதமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 

பாலேடு (Cream of milk), நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி போன்ற உணவுப் பொருட்களில் உள்ள கொழுப்பு சத்து சாச்சுரேட்டட் வகையைச் சார்ந்தது. ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு கிடைக்கும். 

ஆலிவ் எண்ணெய் பலவிதமான பயன்களைத் தருகிறது என்பதற்காக, தொடர்ந்து இதையே பயன்படுத்தக்கூடாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிட்டில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்  எனப் பல வகை எண்ணெய்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதே  நல்லது!’’ 

கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி உள்பட பல  நாட்டு மக்கள் காய்கறி மற்றும் பழங்களில் சாலட் செய்வதற்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதைப் போலவே நாமும் பயன்படுத்தலாம். இதய ஆரோக்கியம்  மேம்படும்!ஆலிவ் எண்ணெய் பலவிதமான பயன்களைத்  தருகிறது என்பதற்காக, தொடர்ந்து இதையே பயன்படுத்தக்கூடாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிட்டு  எண்ணெய்  எனப் பல வகை எண்ணெய்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதே  நல்லது...

No comments: