Wednesday, November 21, 2018

பொய் என்றால் என்ன?

பொய் என்றால் என்ன என்பதற்கு நாம் பல்வேறு வகையான விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.

இவ்வாறான விளக்கங்களில் ஏறத்தாழ அனைத்துமே பொருத்தமற்றவையாக அமைகின்றன. உதாரணமாக, ஒருவர் என்னிடமுள்ள பணத்தை எனது அனுமதியின்றி எடுப்பது களவு. அவரிடம் 'எனது பணத்தை எடுத்தீர்களா? என்று கேட்கும்போது இல்லை என்று கூறுவது மறைத்தல்.

ஆனால் பொய் என்று தான் நாம் கருதுகிறோம். உண்மையில் அது பொய் அல்ல. அது மறைத்தல் . இவ்வாறே ஏமாற்றுதல், போலித்தனம், முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல் என்பன பொய் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக பொய் என்பதற்கான விளக்கம் புரியப்படாமையால் பொய் என்பது பல பிரிவுகளைக் கொண்ட ஒரு பொதுச் சொல் என்றாகிவிட்டது.

பல சந்தர்ப்பங்களில் பொய் என்பதற்கு 'உண்மைக்கு எதிரானது, உண்மைக்கு மாறானது, உண்மை அல்லாதது என்ற விளக்கம் தரப்படுகின்றது.

இங்கே உண்மை என்பது அடித்தளமாகப் பயன்பயன்படுத்தப் படுவதை அவதானித்தல் அவசியம். இந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் உண்மை என்றால் என்ன என்பதை ஐயத்துக்கு இடமின்றிப் புரிந்துகொள்ளல் வேண்டும். உண்மை என்பது 'உள்ளது உள்ளபடி உள்ளமை' என்பதாகும். 'எது எதுவோ அது அதுவாக இருத்தல்' என்றும் கூறலாம்

அதாவது இருப்புத் தன்மையே உண்மை. இந்த உண்மையை நாம் உள்ளுணர்வால் மட்டுமே உள்வாங்கிக்கொள்ள முடியும். அதாவது உள்ளதை உள்ளபடி உள்ளுணர்வால் உள்வாங்குவதற்கு வாய்ப்பளிப்பதே உண்மையாகும். உண்மை உணர்வு சார்ந்தது மட்டுமே.

இப்போது நாம் பொய்யை மிகவும் இலகுவாக இனங்காணலாம். உண்மை என்பது உள்ளுணர்வு சார்ந்தது மட்டுமே. இந்த உள்ளுணர்வுக்கு வார்த்தை கிடையாது, வடிவம் கிடையாது, வரலாறு கிடையாது, அபிப்பிராயம் கிடையாது, விளக்கம் கிடையாது, விவாதம் கிடையாது, ஒப்பீடு கிடையாது.

எனவே ஒருவரது உள்ளுணர்விற்கு அவராலோ அல்லது பிறராலோ கொடுக்கப்படும் எந்த ஒரு வடிவமும் பொய் ஆகும். சிறப்பாகக் கூறுவதாயின், உண்மைக்கு வடிவம் கொடுப்பதாலும், உண்மை என வடிவம் கொடுப்பதாலும் உண்மை பொய்யாகிவிடுகின்றது.

எனவே உள்ளுணர்வால் உண்மையை உள்வாங்குவோம். அப்போதுதான் உண்மையைப் பொய்யாக்கும் மாயத்தில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ளமுடியும்.

No comments: