Tuesday, December 11, 2018

தமிழர் மெய்யியல்...

_*இயற்கை எனது நண்பன்*_
_*வாழ்க்கை எனது தத்துவாசிரியன்*_
_*வரலாறு எனது வழிகாட்டி*_

           *– மேதகு வே.பிரபாகரன்*

*ஐம்பெரும் ஆற்றல்:-*

🔶 சூரியப் பெருநெருப்பு வெடித்துச் சிதறிய துண்டுகளில் ஒன்றுதான் இந்தப் பூமி என்கிறது பூகோள அறிவியல். அப்படித் தோன்றிய பூமியின் உயிரியல் பரிணாமத்தின் இறுதிப் புள்ளியாக மனித இனம் இன்று நிற்கிறது. விண், மண், நீர், காற்று, நெருப்பு ஆகிய ஐம்பெரும் ஆற்றல் இல்லாமல் உலகில் எந்த உயிரினமும் தோன்ற முடியாது. அதனால்தான் ஆதித் தமிழினம் ஐம்பெரும் ஆற்றலான இயற்கையை (பஞ்சபூதங்களை) வழிபட்டு வந்திருக்கிறது. உலகத் தமிழினம், இயற்கையைப் போற்றும் உழவர் திருநாளான பொங்கலைப் தனது தேசியத் திருநாளாகக் கொண்டாடுகிறது.

🔶 அறிவியியல் நாகரீகமற்ற முதல் குடிமகன் தனது உயிரை இயற்கை, கொடிய விலங்குகள், நச்சுப் பாம்புகள், நோய் இவைகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளப் போராடினான். காட்டுத்தீ, சூறைக்காற்று மழை, காட்டு வெள்ளம் என்று இயற்கைச் சீற்றங்களைக் கண்டு பயந்தான். அந்த அச்சத்தால் இயற்கையை வணங்கத் தொடங்கினான். மறுபுறம் இயற்கையை நம்பினான். இந்த நம்பிக்கையின் வடிகாலாய்த் தோன்றியதே *தமிழர் வழிபாட்டு மெய்யியல்.*

*இயற்கை வழிபாடு மூத்தோர் தெய்வங்கள்…:-*

🔶 ஆதித்தமிழ் இனமக்கள் தமக்காகவே போரிட்டுத் தம்மைக் காக்க இறந்து போன மனிதர்களையும் தெய்வமாக வணங்கினார்கள். இப்படித்தான் இயற்கையையும், முன்னோர்களையும் வணங்கும் பழக்கம் ஆதித் தமிழர்களிடம் இருந்தது. சிந்து சமவெளி வழிபாட்டு முறைகள் அனைத்தும் பறைசாற்றுவது முன்னோர்களைப் போற்றும் நடுகல் வழிபாட்டைத் தமிழர் மரபியல் என்பதைத்தான். சமீபத்தில் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற மண்பாண்டங்களில் பொறிக்கப்பட்டுள்ள வடிவங்களில் இப்படியான தெய்வ வழிபாட்டுக் குறிப்புகள் இருப்பதாக தொல்லியியல் ஆய்வுகள் சொல்கிறது.

🔶 மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கிய வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலும் தமிழர் அறம் சார்ந்த மெய்யியல் ஒழுகலாறு என்பது தொடக்கத்தில் இயற்கையாகவும் பிறகு அந்த இயற்கையின் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றிய மனிதர்களைப் போற்றுவதிலும் இருந்து *தமிழர் மெய்யியல் மரபு வழிபாடு வந்தது.*

*ஐந்திணைத் தெய்வ வழிபாடு…:-*

🔶 குறிஞ்சி நிலத்தின் இறையோனாகச் சேயோன்(முருகன்), முல்லை நிலத்தின் இறையோனாக மாயோன்(கண்ணன்), மருதம் நிலத்தின் இறையோனாக இந்திரன், நெய்தல் நிலத்தின் இறையோனாக வருணன், பாலை நிலத்தின் இறைவியாகக் கொற்றவை என ஐந்திணை நிலத்திற்கும் தனித்தனி இறையோனாக *நாம் தமிழர் அரசு* ஏற்று அறிவிக்கின்றது. முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்து *“திருமுருகன் பெருவிழாவாகத்”* தமிழகம் முழுமைக்கும் கொண்டாட அரசாணை பிறப்பிக்கும்.

*மெய்யியல் தலைநகரம்:-*

🔶 தமிழரின் தொன்ம வரலாறு என்பது கடலினுள்ளே மூழ்கிக் கிடக்கும் லெமூரியாக்கண்டத்தின் (குமரிக்கண்டம்) தொடக்கம் என்பதை அடுத்த தலைமுறைக்கு நினைவு கூற வேண்டும். ஆதித்தமிழினத்தின் கூறுகளாகப் பிரிந்த ஈழத்தமிழினத்தின் இனவிடுதலைக் களத்தில் களப்பலியான மாவீரத் தெய்வங்களின் நினைவைப் போற்றுவதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழர் தொன்மங்கள் மரபு சார்ந்த கலைகள், வரலாறுகள், வீரம், போர், வேளாண் முறை எல்லாம் எப்படி இருந்தது என்பதை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்த வேண்டும். உலகுக்கும் கூற வேண்டும். அதற்காகக் குமரிக்கண்டத்தின் நீட்சியாக விளங்கும் கன்னியாகுமரியில் *நாம் தமிழர் அரசு “தமிழர் கோயில்”* கட்டமைக்கும். 1000 ஏக்கர் பரப்பளவில் தங்கும் விடுதி வசதிகளோடு கலையரங்கக் கூடங்களோடு சிறந்த சுற்றுலாத் தலமாக நிறுவப்படும்.

*அன்னை காந்தாரிக்குக் கோயில்:-*

🔶 கோவில்பட்டிக்கு மிக அருகில் உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் தமிழர் நிலத்தின் பெருமைக்குரிய மூதாதை காந்தாரி அம்மன் கோவில் இருக்கிறது. கடந்த 32 வருடங்களாக அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் சென்று வணங்க விடாமல் நாயக்கர் காலத்தில் வந்து அமர்ந்த மக்கள் தடுத்து வருகிறார்கள். *நாம் தமிழர் அரசு* அந்த அவலத்தை நீக்கி எந்தவித இனமோதலுக்கும் இடமளிக்காமல் பிரச்சனையைத் தீர்க்கும். அன்னை காந்தாரிக்கு அரசின் நேரடிப் பார்வையில் கோவில்கட்டித் தரப்படும்.

_இப்படிக்கு,_

*செய்தி தொடர்பு பிரிவு,*
*செந்தமிழர் பாசறை - அமீரகம்.*

♨♻♨♻♨♻♨♻♨♻♨

No comments: