Sunday, December 30, 2018

என்ன நடக்கிறது இங்கே...!

1. முகம் தெரியாத ஒரு நண்பனுடன் ஓடிப் போக தடையாக இருந்த தன்   தாயை ஒரு 19 வயது பெண் கொலை செய்திருக்கிறாள்.
2. தன் காதலியை (மாற்றான் மனைவி) தன்னுடன் சேர்த்து வைக்க மறுத்த கிளி ஜோசியக்காரரை நடுத்தெருவில் ஒருவர் வெட்டி கொலை செய்கிறார்.
3. தன் மகளையே ஒரு தகப்பன் வெட்டி கொலை செய்கிறான்.

என்ன நடக்கிறது இங்கே என்றே புரியவில்லை. பத்தொன்பதே வயதான ஒரு இளம் பெண்ணால் தன் தாயையே கொலை செய்ய முடியுமா? வியப்பாக இருக்கிறது. மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள மாபெரும் வித்தியாசமே குடும்பம் என்கிற அழகிய உறவு முறையும், அள்ள அள்ள குறையாத பாசமும்தான். ஆனால் பணத்தாசை பிடித்த வியாபாரிகள் இந்த குடும்பம் என்கிற சங்கிலியை மெல்ல மெல்ல அறுத்து எறிந்து விட்டார்கள். அதனுடைய விளைவே மேற்கூறிய கொலைகள்.

ஒவ்வொருவரும் தனித் தனி மனிதர்கள் என்கிற தத்துவத்தை இங்கே வெற்றிகரமாக புகுத்துகிறார்கள். உனக்கு வேண்டியதை நீ செய்து கொள். உன் நலன் மட்டுமே உனக்கு முக்கியம். அடுத்தவர்கள், அது பெற்றவர்களே ஆனாலும் கூட, நலனைப் பற்றிக் கவலைப் படாதே என்கிற விதத்தில் நம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு விட்டனர் என்றே தோன்றுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களும், மெகா தொடர்களும் இதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.

நம் இளைய சமுதாயம் நம் கண் முன்னே அழுகிக் கொண்டிருக்கிறது. நாம் நம் குழந்தைகளை கவனித்து வளர்க்க வில்லை என்றால் நாளை இந்த குற்றங்கள் நம் இல்லங்களிலும் நடக்கும். இந்த நோக்கில் என்னுடைய சில கருத்துகளை இங்கே சொல்கிறேன்:

1. டிவி சீரியல்கள் பார்ப்பதை அறவே தவிருங்கள். அப்படியே பார்த்ததாக வேண்டுமென்றால் இளையவர்கள் இல்லாத நேரத்தில் பாருங்கள்.

2. ஒவ்வொரு நாளும் மகன்/மகள்களிடம் கண்டிப்பாக அரைமணி நேரமாவது உட்கார்ந்து பேசுங்கள். உங்கள் வாழ்க்கை, நீங்கள் வாழ்ந்த, வளர்ந்த விதத்தை போரடிக்காமல், உபதேசமாக இல்லாமல் ஒரு கதையைப் போல சொல்லுங்கள்.

3. எது வேண்டுமானாலும் கடனில் வாங்கிக் கொள்ளலாம் என்கிற மனோபாவத்தை ஆதரிக்காதீர்கள். சேமிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை தூண்டி விடுங்கள்.

4. குழந்தைகளை அருகில் வைத்து கொண்டு வீட்டில் சினிமா பார்க்கவே பார்க்காதீர்கள். நம் பெற்றோர்களே இந்த காட்சிகளைப் பார்க்கிறார்கள். எனவே தவறில்லை போலிருக்கிறது என்று குழந்தைகள் நினைத்துக் கொள்வார்கள். நம் எதிர்கால குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு சில தியாகங்களை நாம் செய்தே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் பாதிக்கப் படப் போவது நாமேதான். நம் பெற்றோர்கள் அப்படித்தானே இருந்தார்கள்!!?

இவைகளை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்...

No comments: