Sunday, January 27, 2019

நியூட்ரினோ- ஒரு பேராபத்தான ஆய்வு...

நியூட்ரினோ கதிர் பேராபத்தானது அல்ல. ஆனால் அதனை ஆய்வு செய்ய இந்தியா தீர்மானித்திருக்கும் முறைதான் மிகவும் பேராபத்தானது. ஒரு இயற்பியல் ஆசிரியர் என்ற முறையில், மிக நீண்ட நாள்களாக, இயற்பியல் அறிஞர்களுக்கு சவாலாக விளங்கும் 'பிசாசுத் துகள்' என்று அனைவராலும் அழைக்கப்படும் நியூட்ரினோ துகள் குறித்தான ஆய்வை நான் வரவேற்கிறேன். ஆனால், அந்த ஆய்வில் இந்தியா ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் இந்த ஆய்வை நிகழ்த்துவது என்பது பெரும் சதியை உள்ளடக்கியதாகவே தெரிகின்றது.

நியூட்ரினோ இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து இருக்கும் ஒரு மீச்சிறு துகள். ஒளியின் வேகத்தைவிட சற்று வேகமாக பயணிக்கும், ஆற்றலும் நிறையும் அற்ற துகள். பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருள்களையும் துளைத்துக் கொண்டு ஊடுருவும் தன்மை கொண்ட ஒரே துகள். இதன் தன்மை, பண்புகளை ஆய்ந்து அறிந்து, தகவல் தொடர்பிற்கு இதனை பயன்படுத்த தொடங்கினால், சமிக்சைக்கான அலைக்கோபுரங்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்படாது. மேலும் செயற்கைக்கோளின் துணை இல்லாமலும், தகவல் பரிமாற்றங்களை முன்னெடுக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

மேற்சொன்னக் காரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டால், இந்த ஆராய்ச்சி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அந்த முடிவிற்கு செல்வதற்கு முன்பு சில தகவல்களையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்தியாவைவிட முன்னேறிய அறிவியல் தொழிற்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஜப்பான் இந்த ஆய்வை மேற்கொள்ள 2000 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டிய போது ஏற்பட்ட பெரும் விபத்தின் காரணமாக தன் ஆய்வை பாதியில் நிறுத்திக் கொண்டது. அமெரிக்காவோ, மக்கள் வாழும் பகுதியில் கட்டாயம் இந்த ஆய்வை செய்யக் கூடாது என்று முடிவெடுத்து, அண்டார்டிக்கா பனிப்பிரதேசத்திற்கு நடுவே ஆய்வுக்கூடம் அமைத்துக் கொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக பிரான்ஸ் இந்த ஆய்வில் ஈடுபடுகின்ற மிக முக்கியமான நாடு. அதுவும் கடலுக்கு அடியில்தான் தனது ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவுகிறது. இந்தியா ஏன் பல்லுயிரினங்களின் சொர்க்கமான மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பொட்டிப்புரத்தில் இந்த ஆய்வை செய்கின்றது?

இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு, இரண்டு கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும் அகலத்திற்கு பொட்டிப்புரத்தில் உள்ள ஒரு பெரிய மலையைக் குடைந்து கொண்டுச் சென்றால், அதனைச் சுற்றியுள்ள வன விலங்குகள் அந்த அதிர்வுகளை பொறுத்துக் கொண்டு வாழ முடியுமா? இதனை எதிர்த்துக் கேள்விக் கேட்டால், அங்கு வனவிலங்குகளே இல்லையென ஒரு பொய்யான தகவலைப் பரப்பத் தொடங்குகின்றனர். எந்த மலையைக் குடைந்து எடுக்கப்போகின்றார்களோ, அங்கிருந்து சரியாக அரைக் கிலோ மீட்டரில் உள்ள, மதிகெட்டான் கானல் என்ற பகுதியை இதே மத்திய அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகள் வாழும் பகுதி என்று அறிவித்து உள்ளது.

அந்த சுரங்கத்தை தோண்டுவதற்கு ஒரு நாளைக்கு 15 இலட்சம் லிட்டர் தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து எடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு கிலோமீட்டர் சுரங்கம் அமைக்கபடும் என்று அரசு அறிவித்துள்ளது. ஐந்து வருடம் நாள் ஒன்றுக்கு 15 இலட்சம் லிட்டர் தண்ணீரைச் செலவு செய்து, 1800 கோடியைக் கொட்டி, அந்த ஆய்வை செய்வதால், இந்தியாவிற்கும் மக்களுக்கும் ஒரு துளி பயன்கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில் ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி, தொழிற்நுட்பமாக மாற்றி, அதனை பொருள் உற்பத்திக்கு பயன்படுத்துகின்ற எந்த ஆற்றலும் இந்திய அரசிடம் கிடையாது. அப்படி மட்டும் இந்தியா, ஆராய்சிகளையும் ஆராய்ச்சி மாணவர்களையும் கொண்டாடி இருந்தால், ஏன் இத்தனை ஆயிரம் இளம் விஞ்ஞானிகள் இந்தியாவைவிட்டு தினம் தினம் வெளியேறி கொண்டு இருக்கின்றனர்?

அந்த சுரங்கத்திற்குள் இன்னொரு பேராபத்தையும் அவர்கள் வைத்து இருக்கின்றனர். நியூட்ரினோ கதிர்களை செயற்கையாக உற்பத்தி செய்ய, ஒரு அணுவுலையும் கட்டாயம் உள்ளே உருவாக்கியே தீரவேண்டும். அணு எண் 82-க்கு மேல் உள்ள கனமான தனிமங்களைப் பயன்படுத்திதான் அவர்கள் நியூட்ரினோ துகள்களையே உற்பத்தி செய்ய போகிறார்கள். அந்த அணுவுலையை இவர்களால் பாதுகாப்பாக நிறுவ முடியுமா? பாதுகாப்பாக அரசு மருத்துவமனையில், ஒரு இரத்தப் பொட்டலத்தைக் கூட பரிசோதனை செய்து வைக்க வக்கற்ற இந்த அரசுகளா பாதுகாப்பான அணுவுலையை மலை சுரங்கத்தில் வைக்கும்(?). சமதளப் பரப்பில் நிறுவப்படும், அணுவுலை வெடிப்பதால் ஏற்படும் விளைவைவிட பத்து மடங்கு அதிகமான விலையை மலை சுரங்கம் தகர்வதால் நாம் தரவேண்டி இருக்கும்.

தேனியின் பொட்டிப்புரம் தமிழகத்தின் சொர்க்க பூமியில் ஒன்றாக திகழ்கிறது. தமிழகத்தில் மிக அதிகமாக காற்று வீசும் ஒரே இடம் அந்த இடம்தான். ஆயிரக்கணக்கான காற்றாலைகளை இன்னும் அங்கு நிறுவலாம். அதனால் அரசிற்கு பெரும் இலாபம் வரும். மேலும், நீலகிரி தேவாளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக மழைபெறும் இடம் தேனி கம்பம் பகுதி தான். அந்த கம்பம் பகுதிக்கு அருகில்தான் பொட்டிப்புரம் இருக்கின்றது. இவ்வளவு சிறப்புகளும் இயற்கை வளமும் கொட்டிக் கிடக்கும் இடத்தை அழித்து, இந்தியா செய்யும் ஆராய்ச்சி என்பது முட்டாள்தனமானது.

உலகின் பல வல்லரசு நாடுகளின் அரசுகளும், தங்களின் தேசத்தில் மலைகளே இல்லையே என்று ஏங்குகின்றான். இருக்கின்ற ஒன்று இரண்டு மலைகளையும் தங்களின் கனவு இடமாக நினைத்து பாதுகாக்கின்றான். ஆனால், நமது தேசத்திலோ, இயற்கை அன்னை அள்ளி கொடுத்த மலைகளை வெட்டி எடுப்பதுதான் அரசின் ஒரே வேலையாக மாறிவருகின்றது.

உங்களின் வளர்ச்சி வெறிக்கு, பூமித்தாயின் மார்பை அருப்பதுதான் ஒரே தீர்வென்றால்...
இந்தியா நாசமாக போவதுதான் இயற்கையின் இறுதித் தீர்ப்பாக அமையும்...

-பேராசிரியர் ஆ.அருளினியன்

No comments: