Sunday, January 27, 2019

போராட்டத்தை கேலிக்குள்ளாக்கினால்... அரசுப் பணியும் ‘கேம்ப் கூலி’யாகும்!

நான் மூணாம் வகுப்பு படிக்கும் சிறுவனா இருக்கும்போது வாத்தியார்களுக்கு மாச சம்பளம் வெறும் 150 ரூபாய்தான். எங்க வாத்தியார் புளிச்சோத்தை பாக்கு மட்டையில கட்டீட்டு டவுன்பஸ்ல வந்திறங்குவார். அதை பசங்க நாங்க ஓடிப் போய் வாங்கிட்டு வருவோம். அந்த வாத்தியார் சொன்ன பேச்சு கேக்காத பசங்களை சொண்டிங்கையிலதான் அடிப்பார். காதும் செவிடு. அதனால் சொண்டிங்கை செவிட்டு வாத்தியார்ன்னு அவருக்கு பேரு மருவிப் போச்சு.

காலையில பஸ்ல வந்திறங்கும்போது சோத்துப் பொட்டலத்தை வாங்கிட்டு வர்ற பசங்க அவருக்கு செல்லப்பசங்க. ஒரு அடி போட மாட்டார். அவங்கதான் வகுப்பு லீடர். அப்ப வகுப்புல பெரும்பாலும் பஞ்சாலை தொழிலாளிக பசங்கதான்.

அப்ப பஞ்சாலைத் தொழிலாளிக்கு மாத சம்பளம் ரூ. 450க்கும் மேல.  வகுப்பறைக்கு சீவக்கட்டை, தண்ணீர் பானை, சாக்பீஸ் பெட்டி வாங்கிறதுக்கெல்லாம் மாச, மாசம் பத்து பைசா தரணும். அதுல விவசாயி வீட்டுப் புள்ளைக, நெசவாளி வீட்டுப் புள்ளைக கொடுக்க வேண்டியதில்லை. மில் வேலை தொழிலாளி பசங்கன்னா முழுக்காசும் தரணும். அப்படி தரலைன்னா ‘எந்த மில்லுடா உஞ்கொப்பன்?’னு கேட்டுட்டு, ‘அதுலதான் நல்ல போனஸ், நல்ல சம்பளம் வாங்கறான்ல உங்கப்பன் கொடுக்கிறதுக்கென்ன? நாளைக்கு உங்கொப்பனைக் கூட்டீட்டு வா!’ன்னு சொல்லிடுவாங்க. அதை சொன்னா தானா வூட்ல காசு கெடச்சுடும்.

அப்பவெல்லாம் பஞ்சப்படி, போனஸ், நஷ்ட ஈடு, கேஷூவல் சம்பளம், ஈஎஸ்ஐ விடுப்பு சலுகை எதுல குறை வச்சாலும் மில் தொழிலாளிக போராட்டம் கடலளவு பொங்கிடும். மேதின ஊர்வலம் ஓரிடத்தை கடந்து போக நாலு மணிநேரம் பிடிக்கும். மில் போராட்டம்ன்னா அரசாங்கமே அஞ்சும். அரசு அதிகாரிகளும் மிரளுவாங்க. இப்ப இருக்கிற 8 மணி நேர வேலை, போனஸ், ஈஎஸ்ஐ, பிஎஃப் எல்லாமே மில்காரங்க போராட்டத்துல விளைஞ்ச கொடைக.

இப்ப ஆசிரியர்கள் சம்பளத்தை முன் வச்சு அவங்க போராட்டத்தை கரிச்சுக் கொட்டற மாதிரி, அன்னெய்க்கு மில் வேலைக்காரங்க சம்பளத்தை முன் வச்சு, ‘உனக்குத்தான் இத்தனை சம்பளம் வருதே. எதுக்கு போராடறே?’ன்னு மத்தவங்க கரிச்சுக் கொட்டுவதும் நடந்துட்டுத்தான் இருந்தது. அதுக்குப் பிறகு பஞ்சாலைத் தொழிலாளிகளுக்காக போராடின சங்கங்களை உடைக்க முதலாளிகளே தொழிலாளி சங்கங்களை உருவாக்கினாங்க. அசல் தொழிலாளி சங்கப் போராட்டங்களை நீர்த்துப் போக செஞ்சாங்க.

இன்னைய்க்கு மில்கள் இருக்கு. தொழிலாளிகளுக்கான சலுகைகள் இருக்கான்னா இல்லை. தொழிற்சங்கங்கள் இல்லை. போராட்டம் இல்லை. நாற்பது வருஷம் முன் கோவையில் 175 மில்கள் சுமார் 2 லட்சம் தொழிலாளிகள். இன்றைக்கு கோவை மட்டுமல்ல திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வரை மில்கள் 3000க்கும் மேல் நீளுகிறது.

ஒவ்வொரு மில்லிலும் 2000 பெண் தொழிலாளர்கள் கேம்ப் கூலிகளாக பணிபுரிகிறார்கள். மாதம் ரூ. 40 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் தகும் அளவு வருமானத்தில் கொழிக்கும் நவீன மில்கள் யாவும் ஒரு பெண் தொழிலாளி கணக்கில் மாதம் சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் செலவிட்டால் மிக அதிகம். அத்தனை பெண்களும் 20 வயதிற்குட்பட்டவர்கள்.

இந்த குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகளாக கருதிப் பாருங்கள். அவையெல்லாம் போனஸ். கிராஜூட்டி, பணிப்பாதுகாப்பு என அனைத்தும் பெற்று மாதம் ரூ. 40 ஆயிரம் சம்பளம் பெற வேண்டியவை. அத்தனையும் இன்றைக்கு அடிமைகளாக 3 ஆண்டுகள் மட்டும் பல மடங்கு உழைப்பை பெற்றுக் கொண்டு ஆலைகள் வெளியே மாங்கல்ய திட்டம் என்ற பெயரில் துப்பி விடுகிறதென்றால்,

இங்கே சேதப்படுவது எது? எதனால் இந்த கதி ஏற்பட்டது? முதலாளித்துவத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியே தவிர வேறென்ன?

எனவேதான் ஆசிரியராக இருந்தால் என்ன, அரசு ஊழியர்களாக இருந்தால் என்ன? யார் போராடினாலும் கொச்சைப் படுத்தாதீர்கள். நாளை நம் பிள்ளைகள் அந்த பணிக்கு செல்லும் போது கேம்ப் கூலி நிலை எய்தியிருப்பார்கள். ஜாக்கிரதை.

- கா.சு.வேலாயுதன்
மூத்த பத்ரிகையாளர்

No comments: