Thursday, January 17, 2019

அம்பேத்கர் யாருக்குச் சொந்தம்?

ஆனந்தவிகடனில் எழுத்தாளர் மருதன் அவர்களிளின் பதிவிலிருந்து...

125 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஒருவரை, பொதுவாக எப்படி மதிப்பிடுவார்கள்? நம் காலத்தோடு ஒப்பிட்டு, அவரின் பங்களிப்பு எத்தகையது என அளவிடுவோம். ஆனால், `அம்பேத்கரை மதிப்பிடும்போது மட்டும் இந்த விதியைத் தலைகீழாக மாற்றவேண்டும்' என்கிறார் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா. `நம் காலத்தைக்கொண்டு அம்பேத்கரை மதிப்பிடவேண்டியது இல்லை. அவரை ஓர் அளவுகோலாகக்கொண்டு நாம் வாழும் சமூகத்தை நாம் மதிப்பிடவேண்டும்' என்கிறார் அவர். அவ்வாறு செய்யும்போது அம்பேத்கரின் உருவம் மிகப் பிரமாண்டமாக நம் முன்னர் எழுந்து நிற்கிறது.
*
`தலித் தலைவர்’ என்று மட்டும் அல்ல, `இந்தியத் தலைவர்’ என்றும்கூட இனி அவரை நாம் குறுக்கிவிட முடியாது. முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபை, அம்பேத்கரை ஓர் உலகளாவிய ஆளுமையாக அங்கீகரித்து, அவருடைய 125-வது பிறந்த தினத்தை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொண்டாடியிருக்கிறது. `அவர் காலத்தைவிட இன்றுதான் அம்பேத்கர் நமக்குத் தேவைப் படுகிறார்' என்கிறார் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க்.
*
`ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலைக்காக மார்டின் லூதர் கிங் குரல்கொடுத்தார் என்றால், தலித்துகளின் விடுதலைக்காக அம்பேத்கர் போராடினார்' என்கிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். `ஏப்ரல் 14-ம் தேதியை சர்வதேச சமத்துவ தினமாக அறிவிக்க வேண்டும்’ என்னும் கோரிக்கையும் எழுப்பப்பட்டிருக்கிறது.
*
ஐ.நா-வும் ஹார்வர்டும் கொண்டாடியது இருக்கட்டும், இங்கே நடப்பது என்ன? கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத போர் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் யாருக்கானவர்? `சந்தேகமே இல்லை, அவர் ஒரு காங்கிரஸ்காரர்' என்கிறார் ராகுல் காந்தி. இன்னபிற காங்கிரஸ் தலைவர்களும்கூட இதையே வழிமொழிகிறார்கள். `நேருவின் அமைச்சரவையில் பங்கேற்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை எங்களுடையவர் என்றுதானே அழைக்க முடியும்’ என்னும் தர்க்கத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
*
`கிடையாது, அம்பேத்கரை உரிமை கொண்டாடும் உரிமை, நியாயப்படி எங்களுக்கு மட்டுமே இருக்கிறது' என்கிறார் பா.ஜ.க-வின் தலைவர் அமித் ஷா. `காங்கிரஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் அம்பேத்கருக்காக எதையுமே செய்யவில்லை’ என்கிறார் அமித் ஷா. `முந்தைய பா.ஜ.க ஆட்சியில்தான் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்தியப்பிரதேசத்தில் அம்பேத்கர் பிறந்த `மாவ்' என்ற இடத்தில் முதன்முறையாக நினைவகம் கட்டப்பட்டது மோடி ஆட்சியில்தான். இங்கே வருகை தந்து, மாலை அணிவித்த முதல் பிரதமர் மோடிதான்’ என்கிறார் அமித் ஷா. `பாபா சாகேபின் கனவை நனவாக்கிக் கொண்டிருப்பவர் மோடி மட்டும்தான்’ என்கிறார் அவர்.
*
தன் சமீபத்திய உரைகள் அனைத்திலும் அம்பேத்கரின் பெயரை உணர்ச்சிபூர்வமாக உச்சரித்துவருகிறார் நரேந்திர மோடி. `சாலை அமைப்பதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் 80 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது; 2018-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கப்படும்' எனத் தொடங்கி தலித்துகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை முன்வைத்து ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை பிரசாரக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது பா.ஜ.க. `பாபா சாகேபின் காலடியின்கீழ் பணியாற்றுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்' என்றும் அறிவித்திருக்கிறார் மோடி.
*
காங்கிரஸ் அம்பேத்கருக்காக எதுவும் செய்ய வில்லை என்பது உண்மை. அதேபோல், பா.ஜ.க உருப்படியாக எதுவும் செய்யப்போவது இல்லை என்பதும் உண்மை' என்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ராகுல் காந்தி, அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடுவதை மட்டும் அல்ல, பா.ஜ.க அவ்வாறு செய்வதையும் சேர்த்தே பரிகசிக்கிறார் மாயாவதி.
*
`அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி அவரைக் கீழ்மைப் படுத்தும் செயலையே இந்த இரு கட்சிகளும் செய்துவருகின்றன. பாபா சாகேப் எங்கள் தலைவர்' என்கிறார் அவர்.
*
அம்பேத்கர், சட்ட அமைச்சராகப் பணியாற்றியபோதும் அரசிய லமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோதும் அவரைக் கடுமையாக விமர்சித்து கிண்டலடித்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான `ஆர்கனைசர்'. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கும் இந்து சட்ட மசோதாவை அம்பேத்கர் முன்மொழிந்தபோது, அதை `இந்து மதத்தின் மீதான குரூரமான தாக்குதல்’ எனக் கண்டித்து, நூற்றுக்கணக்கான தர்ணாக்களையும் ஆர்ப்பாட்டங் களையும் முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ். இந்து சட்ட மசோதா வாபஸ் வாங்கப்படும் வரை அவர்கள் ஓயவில்லை. அதே ஆர்கனைசரின் கடந்த இதழின் அட்டையில் அம்பேத்கர் இடம்பெற்றிருந்தார். `மாபெரும் ஒருங்கிணைப்பாளர்' என்றும் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
*
காங்கிரஸாலும்கூட அம்பேத்கரை உரிமை கொண்டாட முடியாது என்பதே நிஜம். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்ததைப்போல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தியபோது, காந்தி அதை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் இருந்ததும், வேறு வழியின்றி 1932-ம் ஆண்டு பு
னே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தன் கோரிக்கையை அம்பேத்கர் திரும்பப்பெற்றுக்கொண்டதும் நினைவுகூரத்தக்கது.
*
1937-ம் ஆண்டில் பாம்பே பிரசிடென்சி தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டபோது, அவருக்கு பாடம்புகட்ட விரும்பிய காங்கிரஸ், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான பால்வான்கர் பாலோவை அம்பேத்கருக்கு எதிராகக் களம் இறக்கியது. அம்பேத்கருக்கு நன்கு பழக்கமான, அவரால் பாராட்டப்பட்ட பாலோவும் தலித் பிரிவைச் சேர்ந்தவர்தான். அம்பேத்கரை வீழ்த்த அவரைவிடப் புகழ்பெற்றவரான இன்னொரு தலித்தை நிறுத்தும் இந்தச் சமயோசிதமான யோசனையை முன்வைத்தவர், மோடி வழிபடும் மற்றொரு தலைவரான வல்லபபாய் படேல் எனச் சொல்லப் படுகிறது. `பாலோவுக்கு வாக்களித்தால் புனே ஒப்பந்தத்துக்கு வாக்களிப்பது போல’ எனச் சொல்லியே பிரசாரம் மேற்கொண்டது காங்கிரஸ். பாலோவைத் தோற்கடித்தார் அம்பேத்கர்.
*
பின்னர் காங்கிரஸ் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இடம்பெற்றார் என்றபோதும், இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற நேரு அரசு முன்வராததைத் தொடர்ந்து, தன் பதவியை அம்பேத்கர் துறந்தார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கரை வீழ்த்த அதே சாதி அரசியலைத்தான் காங்கிரஸ் கையாண்டது. மகர்சாதியினரோடு சமூகரீதியில் போட்டி யிடும் சாமர் சாதியைச் சேர்ந்த ஒருவரை அம்பேத்கருக்கு எதிராகக் களம் இறக்கி அவரைத் தோற்கடித்தது.
*
காங்கிரஸுடன் அம்பேத்கர் கொண்டிருந்த முரண்பாட்டைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள இன்று துடிக்கின்றன பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும். ஆனால், அது அத்தனை சுலபம் அல்ல. காரணம், இந்துத்துவர்களிடம் அம்பேத்கர் கொண்டிருந்த முரண்பாடுகள் மிகக் கூர்மையானவை. `இந்த நாட்டுக்கு நேரக்கூடிய மிகப் பெரிய அபாயம் இந்து ராஜ்ஜியம்தான்' என்பது அம்பேத்கரின் உறுதியான நம்பிக்கை. `இந்து மதம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மனித லட்சியங்களுக்கு எதிரானது' என மீண்டும் மீண்டும் தன் படைப்புகளில் வலியுறுத்தியிருக்கிறார் அம்பேத்கர். இத்தகைய ஒரு மதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்றும் `சாதி ஒழிப்பு’ என்னும் தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர். பாபா சாகேபின் காலடியில் பணியாற்ற விரும்புவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் இந்த ஒன்றை மட்டுமேனும் செய்ய முன்வருவார்களா?
*
அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது பிரிவினர்... இடதுசாரிகள். சீத்தாராம் யெச்சூரி, பிரகாரஷ் காரத் எனத் தொடங்கி இடதுசாரி கட்சித் தலைவர்கள் பலரும் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசிவருவதைப் பார்க்கிறோம். பா.ஜ.க-வும் காங்கிரஸும் அம்பேத்கரை அபகரித்துக்கொள்ள முடியாது எனத் திட்டவட்டமான ஆதாரங்களுடன் இடதுசாரி சிந்தனையாளர்கள் நிறுவிவருகின்றனர். அது உண்மைதான், அதே சமயம் அம்பேத்கரை ஓர் இடதுசாரி என அவர்களால் இதேபோல் நிறுவிவிட முடியாது. காரணம், அம்பேத்கர் மார்க்சியத் தோடும் முரண்பட்டவர்.
*
ஆய்வாளரும் எழுத்தாளருமான அனன்யா வாஜ்பேயி சமீபத்தில் எழுப்பியுள்ள கேள்வி முக்கியமானது. `அம்பேத்கருக்காக ஏன் இடதுசாரிகள் இவ்வளவு தாமதமாகக் குரல் கொடுக்கிறார்கள்? அவர் வாழ்ந்த காலத்தில் ஏன் அவர்களால் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட முடியவில்லை? வர்க்கத்துக்கும் வர்க்க வேறுபாட்டுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, ஏன் சாதிக்கும் சாதியப் பாகுபாடுக்கும் இடதுசாரிகள் கொடுக்கவில்லை?'
*
சாதி அமைப்பு, பிராமணியம், இஸ்லாம், மொழி, பாகிஸ்தான், பொருளாதாரம், மதமாற்றம், வர்க்க அரசியல் எனத் தொடங்கி அம்பேத்கர் கொண்டிருந்த சிந்தனைகளையும் வரித்துக்கொண்டிருந்த கனவுகளையும் கவனமாக ஆராய்ந்தால், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் பா.ஜ.க-வினரும் மட்டும் அல்ல, இடதுசாரிகளாலும்கூட அம்பேத்கரோடு முழுமையாக உடன்பட முடியாது என்பதே யதார்த்தம். இது, இந்த மூன்று தரப்பினருக்கும் அம்பேத்கருடன் ஒன்றிணையும் புள்ளிகள் மட்டும் அல்ல, முரண்படும் புள்ளிகள் என்னென்ன என்பது மிக நன்றாகத் தெரியும். அம்பேத்கரோடு டையாளப்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல்களை அவர்கள் முழுமையாக உணர்ந்திருக் கின்றனர். இருந்தும் அம்பேத்கரோடு அவர்கள் நெருங்கிவருவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.
*
அவர்கள் அனைவருக்கும் அம்பேத்கர் தேவைப் படுகிறார். உலகளாவிய அளவில் பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் ஏற்றத்தாழ்வுகள் கூர்மை அடைந்திருக்கும் நிலையில், அம்பேத்கரை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் ஐ.நா-வுக்கு மட்டும் அல்ல, காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடதுசாரிகளுக்கும்கூட ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. தன் காலத்தைச் சேர்ந்த காந்தி, நேரு, படேல் போன்ற தலைவர்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக உயரத்தை அம்பேத்கர் இன்று அடைந்திருக்கிறார். அவர்கள் யாரும் பெற்றிராத ஓர் அதிசயத்தை அம்பேத்கர் பெற்றிருக்கிறார். அது, வாக்குவங்கி!
*
ஒவ்வொரு நாளும் அம்பேத்கரின் மதிப்பும் செல்வாக்கும் புகழும் உயர்ந்துகொண்டே இருப்பதற்குக் காரணம் இதுவே. அதனால்தான் அம்பேத்கரை ஏற்காதவர்களும்
அம்பேத்கருடன் நேரடியாக முரண்பட்டவர்களும் அவருக்கு எதிர்முகாமைச் சேர்ந்தவர்களும்கூட போட்டி போட்டுக்கொண்டு அவரை அபகரிக்கத் துடிக்கிறார்கள்.
*
டெல்லியிலும் (சிவில் லைன்ஸ்) லண்டனிலும் (பிரிம்ரோஸ் ஹில்) அம்பேத்கர் வசித்த வீடுகளைப் பெரும் பொருட்செலவில் உருமாற்றி, பளபளப்பூட்டி அம்பேத்கரின் பெயரில் அருங்காட்சியகங்களை அமைத்துவருகிறது மோடி அரசு. அம்பேத்கரின் சிலைகளும் அவர் உருவம் பதித்த அழகுப் பொருட்களும் வீதிகளை நிரப்பிவருகின்றன. இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியோடு அம்பேத்கர் இறந்து 60 ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன என்பதால், இனிவரும் காலங்களிலும் அம்பேத்கர் புகழ்வெளிச்சத்தில்தான் இருக்கப்போகிறார்.
*
நிஜத்தில், அம்பேத்கர் யாருக்கானவர் என்பதை மட்டும் அல்ல, யாருக்கானவர் இல்லை என்பதையும் சமீபத்திய சில நிகழ்வுகள் நமக்குத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றன. அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை படோடாபமாகக் கொண்டாடித் தீர்க்கிறது அரசு. ஆனால், அம்பேத்கரை முன்வைத்து பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் இடதுசாரி மாணவர்கள் தங்கள் அரசியலைக் கட்டமைத்துக் கொள்ளும்போது, தங்கள் உரிமைகளை நிலைநாட்டிப் போராடும்போது பாய்ந்துவந்து ஒடுக்குகிறது அரசு. சென்னை ஐ.ஐ.டி-யிலும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் உண்மை இதுதான். அம்பேத்கர் என்பது, ஓர் அடையாளம். அது ஓர் வாக்கு வங்கி. அது ஒரு ஜடப்பொருள். அவ்வாறு இருக்கும் வரை அம்பேத்கர் வழிபடத்தக்கவர். மற்றபடி அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு உயிர்கொடுக்க முயன்றால், அம்பேத்கரின் கனவுகளை மெய்ப்படுத்த முயன்றால், அது தங்களின் அதிகாரத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பது ஆட்சியாளருக்குத் தெரியும்.
*
அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட முயன்றதால்தான், ரோகித் வெமுலா தன் உயிரைக் கொடுக்கவேண்டியிருந்தது. `மனிதன் என்பவன், ரத்தமும் சதையுமான ஒரு ஜீவன் அல்ல. இங்கே அவன் சிந்தனைகளுக்கு மதிப்பு இல்லை. அவன் ஓர் எண், ஒரு வாக்கு, வெறுமனே ஒரு சாதி அடையாளம், அவ்வளவுதான்' என்று தன் தற்கொலை கடிதத்தில் எழுதினார் ரோஹித் வெமுலா.
*
அம்பேத்கருக்காகப் போட்டியிடு பவர்கள்கூட அவரை இப்படித்தான் பார்க்கி றார்களா? ஒரு சாதி அடையாளமாக, வாக்கு வங்கியாக மட்டுமே குறுக்குகிறார்களா? அப்படி யானால், நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். அம்பேத்கருக்காக உரிமை கோரும் கட்சிகளிடம் இருந்து அவரை மீட்டெடுத்து, அவர் யாருக்கு மெய்யாகத் தேவைப்படுகிறாரோ அவர்களிடம் அவரைச் கொண்டுசேர்க்க வேண்டும்.
*
வகுப்புவாதமும் சாதிய ஏற்றத்தாழ்வும் ஆணவக் கொலைகளும் பெருகிக்கொண்டிருக்கும் இன்றையச் சூழலுக்கு, முன்னர் எப்போதையும்விட தீவிரமாக அம்பேத்கர் தேவைப்படுகிறார். அந்த அம்பேத்கர், அனைத்துக் கட்சிகளையும் கடந்து நிற்கிறார். கட்சிகளுக்கு அவர் தேவைப்படலாம்; அவருக்குக் கட்சி தேவைப்படாது. இடது என்றோ வலது என்றோ அவரை முத்திரை குத்தவேண்டிய தேவை இல்லை. எந்த முகாமிலும் அவரைச் சிரமப்பட்டுத் திணிக்கவேண்டிய தேவை நம்மில் யாருக்கும் இல்லை. அவ்வாறு திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, நாம் பொருட்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. ஆடம்பர அருங்காட்சியகங்களும் ஐ.நா விழா கொண்டாட்டங்களும் அவருக்குத் தேவைப்படாது. அவர் அடையாள அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்.
*
அம்பேத்கரை எல்லோரும் ஏற்க முடியாது போனாலும், அவர் எல்லாருக்குமானவர்தான். அவரை வலுக்கட்டாயமாக மறுதலிப்பவர் களுக்குக்கூட ஏதோ ஒரு கட்டத்தில் அவர் தேவைப்படுவார். மிக வாஞ்சையோடு அவரை அரவணைப்பவர்களோடும்கூட அவர் முரண்படவே செய்வார்.
*
அம்பேத்கர், ஓர் இடத்தில் தன்னை இப்படி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்..
*
`நான் ஒரு கல். என்னை எதைக் கொண்டும் உருக்கிவிட முடியாது. ஆனால், என்னால் ஆறுகளின் திசைவழியைக்கூட மாற்ற முடியும்.'
*
மீண்டும் பழைய கேள்விக்கு வருவோம். அம்பேத்கர் ஏன் அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்போது மிகப் பிரமாண்டமாக வளர்ந்து, மாபெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறார்? அம்பேத்கர் மாறவில்லை. நாம்தான் மேலும் மேலும் குறுகி, சிறுத்து படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறோம். நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும்போது அம்பேத்கரின் ஆளுமை பலமடங்கு உயர்ந்து காட்சியளிக்கிறது!.
*-------------------------------------------*

No comments: