Saturday, April 27, 2019

சொற்கள்...

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருக்க வேண்டும்..

நாம் பேசும் சொற்கள் அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை.
அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள்.

சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்.அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள்.

மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கி இருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்.

வருத்தங்களும் தோல்விகளும் சாதாரணமானவை என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவு ஊட்டுங்கள்.

உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்.அதன் மூலம் அதில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.

காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்.
பிறையாகத் தோன்றும் எல்லாமே முழு நிலவாகிப் பிரகாசிப்பதில்லை.

எத்தனையோ பிறைகள் அலட்சியத்தாலும், கடுமையான விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போயிருக்கின்றன.

ஒரு திறமை வெளிப்படுகையில் அடையாளம் காணப்பட்டு பாராட்டப்படும் போது அந்தத் திறமை வேரூன்ற உதவுகிறீர்கள்.

தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும் வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்.

இன்றைய நாட்களில் நல்லதாய் நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது.

எத்தனையோ சௌகரியங்களும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனப் பற்றக்குறையாலும், நேரப் பற்றாக் குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது.

இந்தச் சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை.

ஆம்.,நண்பர்களே..,

நாம் பேசும் சொற்கள் தான் நம் மனத்தின் வெளிப்பாடு
அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாம் இல்லையா?

No comments: