மூளைக் கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வகையான வளர்ச்சி, அசாதாராணமாக ஏற்படும் கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் பிரிவினாலும், தடையற்ற வளர்ச்சியினாலும் ஏற்படுகிறது. அது புற்றுக்கட்டியாகவோ (வீரியம் மிக்க) அல்லது புற்றுக்கட்டி அல்லாததாகவோ (தீங்கற்ற) இருக்கலாம். எவ்வகைக் கட்டியாக இருப்பினும், அவற்றினால் மண்டையோட்டினுள் ஏற்படும் மேலதிக அமுக்கம் காரணமாக தாக்கம் ஏற்படும். தாக்கத்தின் அளவானது கட்டி இருக்குமிடம், அதன் வகை, வளர்ச்சி நிலை என்பவற்றில் தங்கியுள்ளது. இவ்வகையான கட்டி இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும், இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது இன்றியமையாதது.
மூளைக் கட்டி இருக்கையில் மூளையின் தொழிற்பாடு மாற்றமடைதலால் ஞாபக மறதி, எரிச்சல், உடற்சோர்வு, கடுமையான தொடர்ச்சியான தலைவலி, திடீர் வாந்தி, தலைச் சுற்று, வலிப்பு, பார்வைப் புலன் மங்குதல், கேட்டல் புலன் குறைதல், நடத்தையில் மாற்றமேற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
சில கட்டிகள் பிறப்பிலிருந்தே இருக்கலாம். அப்படியான கட்டிகள் முளைய விருத்தியின்போதே, மூளை அசாதாரண விருத்திக்குள்ளாவதால் ஏற்படும். பிறப்புரிமை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களும் மூளைக் கட்டிகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் கதிரியக்க செயற்பாடுகள், மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் மூளைக்குப் பரவுதலாலும், மூளைக் கட்டிகள் ஏற்படும்.
சத்திர சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, வளர்ச்சியைத் தடுத்து பாதக விளைவுகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சில மாத்திரைகள் மூளைக் கட்டிகளுக்கான சிகிச்சையாக அமையும்.
இது பொதுவாக மூளைக்குள் (நரம்பணுக்கள், கிண்ணக்குழிய உயிரணுக்கள் (உடுக்கலன்கள், ஓலிகோடெண்ட்ரோசைட்டுகள், மூளை ஊற்றறை உள்பாள உயிரணுக்கள், நரம்புக்கொழுப்பு உருவாக்கும் சுவான் உயிரணுக்கள்), நிணநீர்க்குரிய திசு, இரத்த நாளங்கள்) மண்டையோட்டு நரம்புகளில், மூளை உறைகளில் (மூளைச் சவ்வுகள்), மண்டை ஓடு, அடிமூளைச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பி போன்ற இடங்களிலோ அல்லது மற்ற உறுப்புக்களில் முதல் நிலையாக உருவாகியிருக்கும் புற்றுக்கட்டிகளில் இருந்து பரவுவதாகவோ (மாற்றிடமேறிய கட்டிகள்) இருக்கிறது.
தொடக்கநிலை (உண்மை) மூளைக் கட்டிகள் பொதுவாக குழந்தைகளில் மண்டையறை பின்பள்ளத்திலும் வயதுவந்தோர்களில் பெருமூளை அரைக் கோளத்தின் முன்புறப் பகுதிகளிலும் ஏற்படுகின்றன. எனினும் அவை மூளையின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 43,800 புதிய வகையான மூளைக் கட்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது (அமெரிக்காவின் மத்திய மூளைக் கட்டி பதிவகம், அமெரிக்காவில் முதன்மையான மூளைக் கட்டிகள், புள்ளியியல் அறிக்கை, 2005–2006).[1] அவற்றில் 1.4 சதவீதம் புற்றுக் கட்டிகளாகவும் 2.4 சதவீதம் புற்றுக் கட்டிகளால் மரணம் நிகழ்வதாகவும்[2] மேலும் 20–25 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுக்கட்டிகளாக இருந்ததாகவும் கணக்கிடப்பட்டது.[2][3] முடிவாக மூளைக் கட்டிகளின் விளைவாக மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 13,000 மரணங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது...
No comments:
Post a Comment